Sunday, September 06, 2015

சவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்

நடிகர் : அசோக்செல்வன்
நடிகை :பிந்துமாதவி
இயக்குனர் :சத்யசிவா
இசை :எஸ்.எஸ்.தமன்
ஓளிப்பதிவு :செல்வகுமார் பி
விஸ்காம் படித்து முடித்துவிட்ட கதாநாயகன் அசோக்செல்வன் டி.வி.யில் வேலைக்கு சேரும் ஆசையில் வாய்ப்பு  தேடி அலைகிறார். டாப் டென் டி.வி. என்ற சேனலை கருணாஸ் நடத்தி வருகிறார். மக்களிடையே பிரபலம் ஆகாததால்  இந்த சேனல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 

அசோக்செல்வனுக்கு டாப் டென் டி.வி. சேனலில் வேலை கிடைக்கிறது. அதே சேனலில் சீனியராக பணிபுரிந்து வருகிறார், ஜெகன். ஒரே இடத்தில் வேலை செய்யும் அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். அசோக்செல்வனின் தங்கையின் தோழியான பிந்து மாதவி, அவ்வப்போது தோழியை தேடி அவரது வீட்டுக்கு வந்துபோவதால் கதாநாயகியுடன் அசோக் செல்வனுக்கு அறிமுகம் ஏற்படுகிறது. முதல் அறிமுகமே காதலாகவும் மலர்ந்து விடுகின்றது.

இந்த காதலை திருமணம் லெவலுக்கு நடத்திச் செல்ல நண்பன் ஜெகனுடன் அசோக்செல்வன் போடும் அத்தனை திட்டங்களும் ‘சொதப்பலாகி’ தோல்வியில் முடிகிறது. இதேவேளையில், தொழில் நஷ்டத்தால் டாப் டென் டி.வி. சேனலின் உரிமையாளரான கருணாஸ் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான கட்டத்தில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். அவரை பார்க்கப் போகும் அசோக்செல்வன் மற்றும் ஜெகனிடம் தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறும் கருணாஸ், மேற்கொண்டு டாப் டென் டி.வி. சேனலை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை அவர்கள் இருவரிடமும் ஒப்படைக்கிறார்.

கருணாஸ் கண்ட கனவை அசோக்செல்வனும், ஜெகனும் நனவாக்கி டாப் டென் டி.வி. சேனலை ‘டாப் ஒன்’ சேனலாக உயர்த்துகிறார்களா..? பிந்து மாதவியும், அசோக்செல்வனும் காதலில் வெற்றியடைகிறார்களா? என்பதை நகைச்சுவை கொப்பளிக்கும் பிற்பகுதி காட்சிகளாக இயக்குனர் சத்யசிவா காட்சிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக்காக வரும் அசோக்செல்வன், இதுவரை ஏற்றிராத காமெடி கலந்த கதாபாத்திரத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு சற்றும் சளைக்காத ஜெகன், பில்லா என்ற கதாபாத்திரமாக மாறி தனக்கே உரிய காமெடி கலக்கலின்மூலம் தனது தனிமுத்திரையை பதித்துள்ளார். 

அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களாக கார்த்திக்கும், பில்லாவும் அமைந்து விட்டதால் நாயகி பிந்து மாதவி, சராசரியாக பாடல் காட்சிகளிலும் இடையிடையே தோன்றும் வேறுசில காட்சிகளிலும் வந்துபோவதோடு சரி. 

கருணாஸ், நாசர், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட நடிகர்கள் தங்களது பங்களிப்பை சரியாக நிறைவேற்றியுள்ளார்கள். படத்தின் இறுதிகட்ட காட்சியில் பிரவேசமாகும் நடிகை ஊர்வசி, தனது காமெடி கலந்த நடிப்பால் ரசிகர்களை குஷிப்படுத்தி, கரகோஷத்தை அள்ளிச் செல்கிறார்.

ஒளிப்பதிவாளர் பி.செல்வகுமார் காட்சியமைப்பை இயல்பாகவும், ரசிக்கும்படியும் படமாக்கியுள்ளார். எஸ்.தமன் இசையில் உருவான பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளன. பின்னணி இசைக்கோர்வையும் காட்சியமைப்புடன் ஒன்றியுள்ளது. 

இதற்கு முன்னர் சீரியசான கதையம்சம் கொண்ட கழுகு என்ற படத்தை இயக்கிய டைரக்டர் சத்யசிவா, இந்தப் படத்தின் மூலமாக தனது இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளார். காமெடி படங்கள் பலருக்கு கைகொடுக்காத நிலையில் காமெடியை மையமாக கொண்ட கதையம்சத்தை திறம்பட காட்சிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களை இவர் வசியப்படுத்தியுள்ளார்.
ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் வெற்றிகரமாக ஒரு காமெடி படத்தை இயக்க முடியுமா? என்ற சவாலை இயக்குனர் சத்யசிவா வெற்றிகரமாக சமாளித்துள்ளார்.

மொத்தத்தில் சவாலே சமாளி காமெடி சரவெடி.

நன்றி = மாலைமலர்