Saturday, August 29, 2015

தனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சூப்பர் ஹிட்)

நடிகர் : ஜெயம் ரவி
நடிகை :நயன்தாரா
இயக்குனர் :ஜெயம் ராஜா
இசை :ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஓளிப்பதிவு :ராம்ஜி
நன்றி = மாலைமலர்
நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐ.பி.எஸ் பயிற்சி பெற்று வருகிறார் ஜெயம் ரவி. இவரை அதே பயிற்சியில் இருக்கும் நயன்தாரா, காதல் கொள்கிறார். ஆனால், ஜெயம் ரவியோ தனது லட்சியத்தில் தீவிரமாக இருப்பதால் நயன்தாராவின் காதலை ஏற்க மறுக்கிறார்.

ஐ.பி.எஸ். பயிற்சியில் ஜெயம்ரவியுடன், கணேஷ் வெங்கட் ராம், வம்சி கிருஷ்ணன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று வெளியுலகத்தில் நடக்கும் தவறுகளை பின் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தல் செய்பவர்கள், வழிப்பறி திருடர்களை கண்டுபிடித்து கொடுக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் பிடித்துக் கொடுத்தவர்கள் எல்லாம் ஜெயிலில் இல்லாமல் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள். இந்த விஷயம் ஜெயம் ரவிக்கு தெரிய வருகிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் பெரிய பெரிய ஆட்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஐ.பி.எஸ். அதிகாரியாக மாறுகிறார் ஜெயம் ரவி.

இந்த குற்றங்களுக்கு எல்லாம் தலைவனாக சமூகத்தில் பெரும் புள்ளியாக அரவிந்த் சாமி இருக்கிறார் என்று ஜெயம்ரவிக்கு தெரிய வருகிறது. இந்த இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பிறகு தீமைக்கும், நன்மைக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகிறது. இந்த யுத்தத்தின் இறுதியில் யார் வென்றார்கள்? என்பதே தனி ஒருவன் படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஜெயம் ரவி நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். மித்ரன் கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் களைகட்டியிருக்கிறார். வில்லனை நெருங்க திட்டம் தீட்டுவது, குற்றவாளிகளை பிடிக்க திட்டங்கள் போடுவது என ஒவ்வொரு இடத்திலும் நடிப்பால் பளிச்சிடுகிறார்.

நயன்தாரா வெறும் ஹீரோயினாக இல்லாமல் படத்தில் முக்கிய கேரக்டராக வந்து நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். காதலன் மீது உரிமை கொண்டாடுவது, காதல் கொள்வது என ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் பெறுகிறார். நாசர், தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட மற்றும் பலரும் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரசிகர்களை மொத்தமாக தன் வசீகர நடிப்பால் அள்ளி சென்றிருக்கிறார் அரவிந்த் சாமி. இவர் பிறக்கும் காட்சி, எந்தவொரு வில்லனுக்கும் கிடைக்காத அறிமுக காட்சி. படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நம் கண்முன் நிற்கிறார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகன்களுக்கு இணையாக ஒரு ஸ்மார்ட்டான வில்லன் கிடைத்து விட்டார். குறிப்பாக ரசிகைகளுக்கு ரொம்ப பிடித்த வில்லனாக அரவிந்த்சாமி இருப்பார் என நம்பலாம். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் புதிய ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. இந்தியாவில் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் பின்னணியில் நிகழும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், ஆள் கடத்தல்கள் என புதிய கோணத்தில் கொஞ்சம் விலாவாரியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். ஓர் அசலான புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி, மொத்த படத்தையும் சாதுரியமாக அரவிந்த் சாமி தோளில் வைத்திருக்கிறார்.

ஆதி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. பின்னணி இசையில் படம் முழுக்க ‘தீமைதான் வெல்லும்’ பாடலையே பயன்படுத்தியிருக்கிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இவருடைய ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கிறது. சேசிங் காட்சிகளில் இவரது கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. 

மொத்தத்தில் ‘தனி ஒருவன்’ தனியாக வென்றான்.

0 comments: