Thursday, August 27, 2015

இ மெயிலைக்கண்டு பிடித்த இந்தியன் உரை

மெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை, மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில் அமெரிக்கா சென்று குடியேறிய இவர், தற்போது சென்னை வந்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"நான் இங்கே அழுத்தமாகக் கூற விரும்புவது நமக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடைக்க வேண்டும். நம்மால் முடியாது என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். நம் மீது சில கற்பிதங்களையும், நம்பிக்கைகளையும் மேலை நாட்டினர் குறிப்பாக ஆங்கிலேயர் வேண்டுமென்றே உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை நாம் உடைக்க வேண்டும்.

நான் 1978ல் ​​இமெயிலைக் கண்டு பிடித்தது  ஒரு இந்தியனாக ​​கண்டு பிடித்தேன். ​​ஒரு தமிழனாகக் கண்டு பிடித்தேன். ​ ஒரு தமிழனாக இமெயிலைக் கண்டுபிடித்ததில் பெருமையடைகிறேன். இதை இவ்வளவு காலம் கழித்து சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் ​அப்போது இதை பிரபலம் ​பண்ணும் அளவிற்கு என்னிடம் வழக்கறிஞரோ அல்லது உடனிருந்து வழி நடத்துவதற்கான நபரோ இல்லை. பதினான்கு வயது சிறுவன் என்ன செய்வான். காப்பி ரைட் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஆனால் இப்போது உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு இந்தியக் குழந்தையும்,  ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் இதைக் கண்டு பிடித்தது. ஒரு 14 வயது இந்தியப் பையன், தமிழ்ப் பையன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயது இந்திய பையனால் முடியும் என்றால் எல்லா இந்தியராலும் முடியும்.

வெள்ளைக்காரர்கள் நம் நாட்டுக்கு வந்த போது, முதலில் கரண்டி பொருட்களைக் கொண்டு சென்றார்கள். அடுத்து நம்மை மூளைச் சலவை செய்தார்கள். இந்தியர்கள் எல்லாம் பணியாளர்கள், எழுத்தர்கள் அதிகமாகப் போனால் சிஇஓக்கள் வரை ஆகலாம்.​ ​அவ்வளவுதான். ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் படைப்பாளிகள்,​​ வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள். நம்மை அந்தப் பட்டியலில் ​​சேர்க்கவே மாட்டார்கள்​.​ சேர்க்க​விடவே மாட்டார்கள்​. எனக்கும் அது நடந்தது. அவர்களில் ஒருவன்தான் இமெயிலைக் கண்டுபிடித்தான் என்று இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விளையாட்டுகளைச் செய்தார்கள். ​​ ​​வெள்ளைக்காரர்கள்தான் கண்டு பிடிப்பாளர்கள்​ என்ற நம்பிக்கையை நம்மிடம் விதைத்தது அவர்களின் வெற்றி, அவர்களின் தந்திரம், நாம் இதை உடைத்து வெளிவராமல் நம்மால் எதையும் நாம் தான் ​கண்டு பிடி​த்தேன் என்று சொல்ல முடியாது.​ ​

எனக்கான ஆதாரங்கள் என் அம்மாவிடமிருந்து கிடைத்தபோது நான் கண்டுபிடித்ததை நிரூபித்தேன். நான் வெள்ளைக்காரனுக்கு நிரூபிக்கவில்லை. இந்தியனுக்கான அடையாளத்தை நிரூபித்துள்ளேன். இப்போது நாம் சொல்லலாம், இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு பதினான்கு வயதுச் சிறுவன், அதுவும் கருப்புத்தோல் கொண்ட தமிழன், இந்தியன் என்று! இந்த​ ​வெள்ளை​த்​ தோல்​ ​கொண்டவந்தான் கண்டுபிடிப்பான் என்ற ​மூளைச் சலவையிலிருந்து ​இந்திய மக்கள் முதலில் வெளியே வர வேண்டும்.

ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வந்து நம்மைக் கேள்வி கேட்டது. அப்போது சொர்க்கத்தில்​ ஏற்ற தாழ்வு உண்டா? என்ற கேள்விக்கு  ஏற்ற தாழ்வு இல்லை என்றனர். அப்படியானால்,  பூமியில் மட்டும் ஏன் ஏற்ற தாழ்வு என்று ஆன்மீகப் பெரியவர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.​ நம்மில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கியது வெள்ளைக்காரன்தான்​. சாதிப்பிரிவுகளைக் கொண்டு வந்து நம்மை பிரித்தாண்டது அவன்தான்​. எனக்கு இந்தியாவின் ஜாதி அமைப்பு மீது பல கேள்விகள், வருத்தங்கள் இன்றும் உண்டு. ஆனால் இதை நம்மிடம் மீண்டும் திணித்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அப்போது ஜாதிமாறி திருமணங்கள் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் 14ஆம் நூற்றாண்டில், 15ஆம் நூற்றாண்டில் ஜாதிக் கலப்பு திருமணங்கள் சகஜமாகி வந்தன. ஆனால் அந்த ஜாதிமுறையை மீண்டும்  ஆங்கிலேயர்கள்தான் கொண்டு வந்து நம்மைப் பிரித்தார்கள்.​ நான் கேட்கிறேன் ஆங்கிலேயரால் கண்டுபிடிப்புகள் முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது? 5000 ஆண்டுகளுக்குமுன் பலவற்றைக் கண்டுபிடித்த நம்மால் ஏன் இப்போது முடியவில்லை.
 

 
ஏழு வயதில் அமெரிக்கா போனேன். போன இடம் அங்கே ஏழைகளின் நகரமான பேட்டர்சன். பலரும் நினைப்பது போல அமெரிக்காவில் எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்பது மாயை. அங்கும் ஏழைகளின் ஊர், பணக்காரர்களின் ஊர் வெள்ளையர்களின் ஊர், கறுப்பர்களின் ஊர் என்று பாகுபாடுகள், பிரிவினைகள் உண்டு. நாங்கள் பேட்டர்சன் நகரத்திலிருந்து படிப்படியாக வசதியான லிவிங்ஸ்டன் -நியூஜெர்ஸி நகரத்துக்குச் சென்றோம்.  எனக்கு இது புதிராக இருந்தது. ஆனாலும், படிப்பில் கணிதத்தில், மருத்துவத்தில் எனக்கு மிகவும் ஆர்வம்​.​ கல்லூரிக்கான பாடத்திட்டத்தை 9 வயதில் முடித்தேன்.​ அதற்குமேல் படிப்பதற்கு இல்லை. எனவே 1978ல் நியூயார்க் பல்கலைக் கழகம் அமெரிக்காவில் 40 மாணவர்களைத் தேர்வு செய்து மென் பொருள் பயிற்சி கொடுத்தது. அதில் தேர்வான ஒரே இந்தியன் நான்தான். 

அப்போதே 7 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்திருந்தேன். மேலும் 6 புரோகிராம் லாங்வேஜ்களை முடித்தேன்​​.​ ​ நியூ​யார்க் என்கிற ஊரில்  3 மருத்துவக்கல்லூரி நடத்திய மைக்கேல்சன் என்பவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். அங்கு நான் போனபோது 14 வயதுதான். வேலை பார்த்தவர்கள் 30 வயது 40 வயது கொண்டவர்கள். ஆனால் மைக்கேல்சன் எனக்கு அவர்களுக்குச் சமமான மரியாதை கொடுத்தார். சம்பளமும் கொடுத்தார். இது முழுக்க முழுக்க என் தகுதி பார்த்து கொடுத்தது. அப்போதே 14, 15 செமினார் கூட நடத்தினேன்.

எனக்கு ஒரு சவாலான வேலை கொடுத்தார். அங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் கணினிகளை இணைப்பது சிரமமாக இருந்தது. நிறைய மனித உழைப்பைச் சாப்பிட்டது. சிக்கலாகவும், சிரமாகவும் இருந்தது. இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கவும், 30 அலுவலகங்களை இணைத்து 3 கல்லூரிகளை​ ​இணைப்பது எப்படி எனக் கண்டுபிடிக்கவும் சொன்னார்.​ ​அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் இமெயில். அப்போது அப்பர் கேஸில் 5 கேரக்டர்கள் மட்டுமே வர முடியும். எனவேதான் Email  என்று பெயர் வைத்தேன். இதுதான் இமெயில்​ ​கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு.

இதுமாதிரி புதுமாதிரியான கண்டு பிடிப்புகள் எல்லாம் ஆங்கிலேயருக்கு மட்டுமே உரிமையானது, தகுதியுள்ளது என்பது அவர்கள் நினைப்பு. எனவே எனக்கு எதிராக 'ரேட்டியான்' என்கிற கும்பல்  மோசடிகள், போர்ஜரியில் ஈடுபட்டு என்னை வம்புக்கு இழுத்தார்கள். நான் அவர்களுடன் மோதி வெற்றி பெற்றேன். இமெயில் என்றால் அது 'சிவா அய்யாதுரைதான்' என்று வெற்றி பெற்றேன். அதுவரை 'இமெயில்' என்கிற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியில் இல்லை. 1978க்குப் பிறகுதான் எல்லா டிக் ஷனரியிலும் வந்தது.

இசை, எழுத்து, படைப்புகளுக்கு மட்டுமே அதுவரை காப்புரிமை இருந்தது. என்னை முன்னிட்டு மென்பொருள் சார்ந்த சட்டத்திருத்தம் 1980ல்  அங்கு வந்தது. இப்போது தினமும் இமெயில் போக்குவரத்துகள் 20 ஆயிரம் கோடி முறை  நடக்கின்றன. 4.2 பில்லியன் இமெயில் முகவரிகள் உள்ளன. இது ஒரு இந்தியனின் தமிழனின் கண்டுபிடிப்பின், பங்களிப்பின் விளைவு அல்லவா?



1993ல் அதிபர் கிளிண்டன் கூட இமெயில் சார்ந்த வேலைப்பளுவைக் குறைக்க என்னிடம் யோசனை கேட்டிருக்கிறார். எனக்கு கணினி சார்ந்து மட்டுமல்ல மருத்துவத்திலும், ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.

நம்நாட்டு சித்தா, ஆயுர் வேதத்தின் அருமை தெரியாமல் இருக்கிறோம். என் பாட்டி படிக்காதவர்தான்.  ஒருவரைப் பார்த்தே என்ன உடல் பிரச்னை என்று கண்டுபிடித்து வைத்தியம் செய்வார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நம் சித்தா, ஆயுர் வேதத்தின் சிறப்பு முழு உடம்புக்குமானது.

மேலை நாட்டு வைத்தியமுறையிலோ உடம்பைப் பாகம் பாகமாக பிரித்துப் பார்ப்பார்கள் ஆயிரம் பாகங்கள், ஆயிரம் மருந்துகள், ஆயிரம் டாலர்கள் என்பது அவர்கள் கணக்கு எதையும் வியாபாரமாகப் பார்ப்பார்கள்

'சைட்டோ சால்வ்' என்பது எனது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பாகும். இதன்படி மனித உடலை கணினியில் உள்ளீடு செய்து தீர்வு காணலாம். நம் நாட்டு பாட்டி வைத்தியம் எளிமையானது. நம் வீட்டு கறி மசாலாவில்  மிளகு,மஞ்சள், சீரகம் இருப்பது சிறப்பு. நம் உடலில் பத்து டிரில்லியன் செல்கள் உள்ளன.எல்லாவற்றையும் சமன் செய்வதுதான் நம் மருத்துவம்.

சித்தாவின் பெருமைகளை உலகுக்கு காட்டும் முயற்சியில் மென்பொருள் செய்து வருகிறேன் .சாதாரண முருங்கைக்காய் 97% பாங்கிரியாடிக் கேன்சர் செல்களைக் கொல்லும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் வீட்டில் தமிழ் பேச வேண்டும் என்பது அப்பா, அம்மாவின் கட்டளை. எனவே தமிழை மறக்கவில்லை. இறுதியாகச் சொல்வது இதுதான்..  அமெரிக்காவில் அவர்களால் முடியும் என்றால், இந்தியாவில் நம்மாலும் முடியும். நாமும் கண்டு பிடிக்கலாம்"

0 comments: