Wednesday, August 26, 2015

மேலும் முன்னேறுகிறார் அம்பேத்கர் -(வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்துக்கான திருத்த மசோதா பி.எஸ்.கிருஷ்ணன் பேட்டி

இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள சமூகநீதிக் கோட்பாட்டை அமலாக்க உழைப்பவர் பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு). தலித் மக்கள், பழங்குடிகள், நாடோடி ஆதிவாசிகள், கையால் மலம் அள்ளுபவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இந்திய சமூகத்தின் பல்வேறு வகையான பிரிவினரின் வாழ்வுரிமைக்காக 60 ஆண்டுகளாக உழைத்துவருபவர். மக்களவையில் ஆகஸ்ட் 8 அன்று நிறைவேற்றப்பட்ட பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்துக்கான திருத்த மசோதாவின் பின்னணியில் செயல்படுபவர்களில் முக்கியமானவர் இவர். ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி!
சாதி தொடர்பான குற்றங்களுக்கு என தனிச் சட்டங்கள் தேவைதானா?
1950-ல் இந்திய அரசியல் சாசனத்தில் தீண்டாமை என்பது குற்றமாக அறிவிக்கப்பட்டாலும் இன்னும் அது தொடரவே செய்கிறது. 1955-ல் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் வந்தது. அதை எப்படி அமல்படுத்துவது என்பதற்கான விதிகளை உருவாக்கவே 20 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது. ஆனால், குற்றங்கள் நடப்பது அதிகரிக்கவே செய்தது. வன்கொடுமைகளை மட்டுமே தண்டிக்கும் ஒரு தனிச் சட்டமாக 1989-ல் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் உருவானது. வன்கொடுமை என்றால் என்ன என்பதை இந்தச் சட்டம்தான் வரையறை செய்தது. இந்தச் சட்டத்தை அமலாக்கவும் ஆறாண்டுகள் தாமதமாகத்தான் 1995-ல் விதிகள் உருவாகின. இன்னமும் சாதி தொடர்பான குற்றங்கள் நடப்பதால் சட்டங்கள் தேவைப்படுகின்றன.
ஏற்கெனவே இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அந்தக் குற்றச்சாட்டை இந்தத் தருணத்தில் எந்த அளவுக்குக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்?
இந்தச் சட்டம் முழுமையான அளவில் பயன்படுத்தப் படவேயில்லை என்பதே என் கருத்து. இந்த நிலையில், தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டுவோர் களுக்குத் தெரிவிப்பதற்காகப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
என்ன ஆய்வுகள்?
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்படும் கூட்டமைப்பு நாடு முழுவதும் ஆய்வு செய்து தரவுகளை உருவாக்கியுள்ளது. அதன்படி,1995 முதல் 2010 வரை ஏறத்தாழ இந்தியாவில் 1 கோடியே 50 லட்சம் வன்கொடுமைகள் நடந்துள்ளன. தலித்துகளோ பழங்குடிகளோ காவல் நிலையங்களுக்கு வந்து புகார் செய்வதே சிரமம். அப்படி வந்த தலித்துகள் இந்திய அளவில் 1995 முதல் 2010 வரை 4,71,717 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பழங்குடிகள் 86,386 வழக்குகளைக் கொடுத்துள்ளனர். மொத்தம் 5,58,103 வழக்குகள்.
அப்படி வந்து பதிவாகிற வழக்குகள் எல்லாமே வன்கொடுமைச் சட்டத்தில் போடப்படுவதில்லை. உதாரணமாக, 2010-ம் ஆண்டில் இந்திய அளவில் 34,127 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 11,682தான் வன்கொடுமைச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது 34.2%தான்!
தற்போது என்னென்ன சட்டத் திருத்தங்கள் மேலும் செய்யப்பட்டுள்ளன?
வன்கொடுமைக் குற்றங்களின் பட்டியல் 22-லிருந்து தற்போது 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலித் மக்களை ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதும் பொருளாதாரரீதியாக ஒதுக்கிவைப்பதும் இன்றும் பரவலாக நடப்பவை. அவற்றைக் குற்றங்களாக அறிவிக்க வேண்டும் என சைமன் கமிஷனிடம் 1928-ல் அம்பேத்கர் கொடுத்த புகார் பட்டியலில் கோரினார். வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989-ல் உருவானபோது, அதையும் நான் சேர்க்க முயன்றேன். அப்போது தோற்றேன். இந்த முறை வென்றுவிட்டேன். 87 வருடங்களுக்குப் பிறகு அம்பேத்கர் மேலும் முன்னேறுகிறார்.
தலித் மக்கள், பழங்குடியினரைக் கையால் மலம் அள்ளும் தொழிலாளியாக மாற்றுவதோ பணியமர்த்துவதோ பணியாற்ற அனுமதிப்பதோ வன்கொடுமை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்தவோ சவக்குழி தோண்டவோ சொல்லி கட்டாயப்படுத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் தன்மையிலான குற்றங்கள், அவர்களைத் தேவதாசிகளாக மாற்றுவது போன்றவை, சூனியக்காரி பட்டம் சுமத்துவது தொடர்பான குற்றங்கள், வாக்களிப்பதில், வேட்பாளர் அறிவிப்பதில், வேட்பாளராக நிற்பதில் கட்டாயப்படுத்தல்கள், தேர்தலுக்குப் பின்னால் ஏற்படுகிற வன்முறை தொடர்பான தேர்தல் குற்றங்கள், மேலவளவு கிராமம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டதைப் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் கடமையாற்றுவதில் ஏற்படுத்தப்படும் தடைகள், மதிப்புமிக்க தலைவர்களின் சிலைகள் அவமானப்படுத்தப்படுதல், தலித் மக்கள், பழங்குடியினருக்கு எதிரான கெட்ட எண்ணம்,வெறுப்பு, காழ்ப்புணர்ச்சியை உயர்த்திப் பிடித்தல், இடுகாடு, சுடுகாட்டில் சமத்துவம், நீர் ஆதாரங்களில் சமத்துவம் மறுத்தல், பாதையில் நடப்பதையோ, சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதையோ தடுத்தல், கல்யாண ஊர்வலங்களில் குதிரையில் பவனிவருவது, காலணி, புதுச்சட்டை அணிதல், ஆலயங்களில் சமத்துவமான நுழைவு, கடைகளில் சமத்துவமான நுழைவு, தொழில் நடத்தல், வேலை செய்தல், வணிகம், வசிப்பிடம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட இடங்களில் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடல் இவை எல்லாம் குறிப்பாக குற்றங்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தனியான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.
தனியான நீதிமன்றங்களா?
ஆமாம்.
வன்கொடுமைகள் செய்தவர்கள் நீதிமன்றத் தண்டனை பெறுவது அரிதாகத்தான் இருக்கிறது. அது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 0.5 சதவீதத்தில் இருந்து 8% பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 5.2% பேரே தண்டனை பெறுகின்றனர்.
தமிழகத்தின் வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடி மக்கள் மேல் வன்கொடுமைகள் நடந்தன. 20 ஆண்டுகள் போராடி நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. வனத்துறை, காவல்துறை, உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்குத் தண்டனை கிடைத்தது. தீர்ப்பு வருவதற்குள் அவர்களில் 50 பேர் இறந்துவிட்டனர். மீதமிருப்பவர்களும் மேல்முறையீடு செய்துள்ளனர். வழக்கு தொடர்கிறது. பொதுவாகவே, குற்றஞ்சாட்டப்பட்டவர் தப்பித்துவிடுகிற சூழல்தான் உள்ளது. இதுதான் நடைமுறை யதார்த்தம். எனவே, தனியான வன்கொடுமைகள் விசாரணை சிறப்பு நீதிமன்றங்கள் இனி அமைக்கப்படும். இதற்கெனவே தனியான சிறப்பு அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட வேண்டும். தினசரி விசாரணை நடத்த வேண்டும்.
இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். உயர் நீதிமன்ற மேல்முறையீடுகள் மூன்று மாதங்களில் முடிய வேண்டும். வேகமான விசாரணையும் சரியான தண்டனையும்தான் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும்.
வெறும் சட்டத்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்கிறீர்களா?
மற்றவர்கள் போலவே வாழும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் வழங்கியுள்ளது. அந்தச் சட்டப் பாதுகாப்பு முதலில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகம். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவான சாட்சிகளும் ஆதிக்கவாதிகளால் துன்புறுத்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அதனால், சட்டப் பாதுகாப்பு மட்டுமல்லாமல், உடனடி நிவாரணம், மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் போன்றவையும் இந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
தலித் மக்களும் பழங்குடி மக்களும் நாட்டின் மக்கள்தொகையில் கால்வாசியாக இருக்கின்றனர். இந்தியாவின் உழைக்கும் மக்களில் இவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றனர். பல்வேறு தீண்டாமை வடிவங்களாலும், வன்கொடுமைகளாலும் இவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கான சமூகநீதியை மீட்டுத்தருவது நமது ஜனநாயகக் கடமை. தலித் அல்லாத பழங்குடியினர் அல்லாத இதர சமூகத்தினருக்கு எதிரானது அல்ல இந்தச் சட்டம். உண்மையில் சமூகத்தில் அனைத்து மக்களும் கலந்து உறவாடியே வருகின்றனர். ஆனால், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புவோர், குறுகிய அரசியல் லாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை உருவாக்குவோர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் எதிரானது.
த.நீதிராஜன், 
தொடர்புக்கு: [email protected]

0 comments: