Thursday, August 27, 2015

பெங்களூர் ரயில் பயண சம்பவம்

கார்வார் - பெங்களூர் ரயிலில் நடந்த நிகழ்ச்சி இது. காலை 8.30 மணிக்கு, பெங்களூர் வந்து சேரும் ரயில் இது. 


சுமார் 65 -70 வயதான இரண்டு பெண்கள் லோயர் பெர்த்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருமே, சுமார் 06.30 மணிக்கெல்லாம், எழுந்து, தமது காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்தனர். மிடில் பெர்த்துகளில் இரண்டு இளைஞர்கள் படுத்திருந்தனர்.  அவர்கள் 7.00 மணிக்கே எழுந்தபோதும், பெர்த்துகளை மூடி, கீழே இறங்கி, இந்த வயதான பெண்களும், அப்பர் பெர்த்தில் உள்ளோரும், அமரும் வண்ணம் வழி விடாது, படுத்துக்கொண்டே மொபைல் போனில் விளையாடிய வண்ணம் இருந்தனர். 



இரு பெண்களும், தங்கள் வயதிற்கேற்ற உடல் பிரச்னைகளினால், வெகுநேரம் குனிந்த வண்ணமே உட்கார முடியாது. அந்த இளைஞர்களை வேண்டிக்கேட்டும், அவர்கள் சற்றும் செவி சாய்க்காது, தங்கள் விருப்பப்படியே விளையாடிக்கொண்டிருந்தனர். "உங்களின் தாய்மார்களைப் போன்றவர்களல்லவா...? நாங்கள் அதிக நேரம் குனிந்தவண்ணம் அமர முடியாது, சற்று இறங்கி வாருங்கள்..!" என்றெல்லாம் விண்ணப்பித்தும் பயனில்லை.



மிடில் பெர்த்தை இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரையே பயன்படுத்த வேண்டும். மற்ற பயணிகள் (லோயர் மற்றும் அப்பர் பர்த்தில் பயணிப்போர்) உட்கார ஏதுவாக, மிடில் பெர்த்தினை மூட வேண்டும் என்பதுதான் விதி. இது தெரியாதா அவர்களுக்கு?
    
இரு இளைஞர்களும் நவீனமான உடை அணிந்திருந்தனர். மிகுந்த சம்பளத்தோடு கூடிய பணிகளில் இருப்பர் போன்றிருந்தது. ஆனால், சற்றும் இரக்கமற்றவர்களாகவே தென்பட்டனர். இவர்களின் தாய்மார்களோ, பாட்டிமார்களோ உடன் பயணம் செய்தால் கூட இப்படித்தான், இரக்கமற்று நடந்துகொள்வார்களோ?

இதனைப் பார்த்து என்னால் வெறுமனே இருக்க முடியவில்லை. அவர்களுக்கு நன்றாகப் புரியும்படியும், அதிகப் பணம் சம்பாதிப்பதால் நாகரிகம், பண்பாடு, மரியாதை, பொது இடத்தில் நடந்து கொள்ளும் முறை எல்லாமே தொலைந்து விட்டதா என்று சற்றே அதட்டலுடன் கேட்க, அதனைக் கேட்டதும், மற்ற பயணிகளின் கவனமெல்லாம், அவர்கள் மீது திரும்பியதை உணர்ந்த இளைஞர்கள், பெர்த்துகளை விட்டு இறங்கினர். ஆனால், என்ன  பயன்? ரயிலோ, பெங்களூரை அடைந்தே விட்டது. 


இளைஞர்களே, சற்று யோசியுங்கள். பெரிய படிப்பு, பெரிய வேலை, மிகுந்த சம்பளம், இவையெல்லாம் உங்களின் மனிதாபிமானப் பண்புகளைக் கொன்று விட்டனவா?



பெரியவர்களையும் இயலாதோரையும் முறையாக நடத்த வேண்டும் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் ஒரு நாள் மூப்பென்பது நிச்சயம் என்பதை மறந்துவிடாதீர்கள்! 



-முத்துக்குமார் (மைசூர்)

நன்றி - விகடன்

0 comments: