Tuesday, August 25, 2015

வீரபாண்டிய கட்டபொம்மன் (2015)- சினிமா விமர்சனம்

நன்றி - மாலை மலர்

நடிகர் : சிவாஜி கணேசன்
நடிகை :பத்மினி
இயக்குனர் :பி.ஆர்.பந்துலு
இசை :ராமநாதன்
ஓளிப்பதிவு :கண்ணன்
தென்னிந்தியாவில் இருந்து சுதந்திர போராட்டத்துக்கு முதன்முதலில் குரல் கொடுத்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். தமிழகத்து கிராமங்களில் நாடகமாக நடத்தப்பட்டு வந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை இயக்குனர் பி.ஆர்.பந்துலு திரைப்படமாக தயாரித்தார். 

1959–ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியானது. சிவாஜி இதில் வீரபாண்டிய கட்டபொம்மனாக வீர வசனங்கள் பேசி நடித்து உலக அளவில் பாராட்டு பெற்றார். எகிப்து பட விழாவில் சிவாஜிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. சிறந்த படமாகவும், சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தது. 

கட்டபொம்மனின் படை தளபதி வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசன், தம்பி ஊமத்துரையாக ஓ.ஏ.கே.தேவர், வெள்ளையம்மாளாக பத்மினி, எட்டப்பனாக வி.கே.ராமசாமி, எஸ்.வரலட்சுமி ராகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாவர் சீதாராமன் ஜாக்சன் துரையாக நடித்து இருந்தனர். 

1959–ம் ஆண்டு மே 10–ந்தேதி தமிழகத்தில் வெளியான அதே நாளில் லண்டனிலும் திரையிடப்பட்டது. சக்தி டி.கே.கிருஷ்ணசாமியின் கதைக்கு ம.பொ.சிவஞானம் திரைக்கதை அமைத்து இருந்தார். ஜி.ராமநாதன் இசையில் இனிமையான பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. 

அந்தக் காலத்திலேயே போர்க்காட்சிகள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டு இருந்தது. பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு படத்தை தயாரித்து இயக்கினார். படம் வெளியான காலத்தில் தொடர்ந்து 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதே பெயரில் தெலுங்கிலும் ‘அமர் ஷாகீத்’ என்ற பெயரில் இந்தியிலும் மொழி மாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடப்பட்டது. 

காலத்தால் அழியாத திரைக்காவியமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்த தலைமுறையினரும் கண்டு ரசிக்கும் வகையில் 70 எம்.எம். திரைப்படமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வண்ணக் கலரும், டி.டி.எஸ்.ஒலி கலவையுடன் வசனங்களும் இசையும் மாற்றம் பெற்றுள்ளது. 

ஜாக்சன் துரையின் நாற்காலியை இழுத்துப் போட்டு கட்டபொம்மன் உட்காரும்போதும், ‘மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? என்று சிவாஜி உச்சரிக்கும் விதத்திலும், அவர் அந்த வார்த்தைகளுக்கு ஏற்றவாறு சைகையால் அரைக்கும் கிண்டலுக்கும் இன்றைக்கும் கைதட்டல் குறையாமல் ஒலிக்கிறது. கிஸ்தி திரை வரி வட்டி வசனத்தை சிவாஜி பேசும்போது கூடவே பலரும் சொல்கிறார்கள். 

அதேபோல், வரலட்சுமியை கையில் பிடித்துக்கொண்டு ‘நீல வானிலே செந்நிறப் பிழம்பு’ என்று ஆரம்பித்து, செந்தமிழை சரளமாய் பேசிக்கொண்டு காதலும் வீரமுமாய் சிவாஜி கம்பீர நடை நடக்கும்போது, அரங்கமே சிலையாக அமர்ந்து சிலிர்த்தபடி பார்க்க வைக்கிறது. வி.கே. ராமசாமியின் எட்டப்ப நடிப்பு உற்சாகமாக ரசிக்கப்படுகிறது. 

சக்தி கிருஷ்ணசாமியின் வசனம் இன்றைக்கும் பொருந்தும் அளவு அவ்வளவு நவீனமாக இருக்கிறது. 35 எம் எம் படத்தை சினிமாஸ்கோப் ஆக மாற்றி இருக்கும் விதம் அசத்தல். எந்த ஃபிரேமிலும் தலை கழுத்து கட் ஆகாமல் பிரம்மாதப்படுத்தி  இருக்கிறார்கள். 

பொதுவாக சண்டைக்காட்சிகளில் சிரமம் எடுத்து நடிக்காத சிவாஜி, சிலம்பு சண்டையையும், குதிரை சவாரியையும் எவ்வளவு சிறப்பாக செய்து இருக்கிறார் என்பதையும் சினிமாஸ்கோப்பில் உணர முடிகிறது. 

மொத்தத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் - இளைய தலைமுறை பார்க்க வேண்டிய படம்

0 comments: