Thursday, July 23, 2015

: பஜ்ரங்கி பாய்ஜான் -திரை விமர்சனம் ( ஹிந்தி)

இந்தியா-பாகிஸ்தான் உறவை முன்னிறுத்தி பாலிவுட்டில் வந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. இயக்குநர் கபீர் கான் இயக்கியிருக்கும் இந்தப் படம் இரு நாடுகளின் உறவை அன்பாலும், மனிதத்தாலும் விளக்க முற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தொலைந்து போகும் வாய் பேச முடியாத பாகிஸ்தானியச் சிறுமி ‘முன்னி’ என்கிற ஷாஹிதாவை (ஹர்ஷாலி) அனுமான் பக்தரான ‘பஜ்ரங்கி’ என்கிற பவன் குமார் (சல்மான் கான்) எப்படி அவளுடைய குடும்பத்தினரிடம் சேர்க்கிறார் என்பதே ‘பஜ்ரங்கி பாய்ஜான்’.
படிப்பு, அப்பாவுக்குப் பிடித்த குஸ்தி விளையாட்டு, ஆர்.எஸ்.எஸ். அரசியல் என எல்லாவற்றிலும் ஃபெயிலா கிறார் பவன் குமார். டெல்லியில் இருக்கும் அப்பாவின் நண்பரான தயானந்த் (சரத் சக்சேனா) வீட்டுக்கு வேலை தேடி வருகிறார். தயானந்தின் மகள் ரசிகாவுக்கு (கரீனா) அப்பாவி பவன் குமாரைப் பிடித்துவிடுகிறது. ஆனால், சொந்தமாக வீடு வாங்கினால்தான் திருமணம் என்று சொல்லிவிடுகிறார் தயானந்த்.
இதற்கிடையில் சம்ஜௌதா எக்ஸ்பிரஸில் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிறுமி ஷாஹிதா பவனிடம் கிடைக்கிறார். வாய் பேச முடியாத ஷாஹிதாவை ‘முன்னி’ என்று பெயரிட்டுத் தன்னுடன் அழைத்துச்செல்கிறார் பவன். முன்னிக்கும், பவனுக்கும் இடையில் இயல்பாகவே ஓர் ஆழமான பிணைப்பு உருவாகிவிடுகிறது. அவளைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக பாகிஸ்தானுக்கு அழைத்துப்போகிறார்.
ஆனால், பாஸ்போர்ட் இல்லாமல் பாகிஸ்தானுக்குச் சென்றதால் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அங்கே பவனுக்கு சாந்த் நவாப் (நவாஸுதீன் சித்தீக்கி) என்னும் பாகிஸ்தான் தொலைக்காட்சி நிருபர் உதவி செய்கிறார். பவன், முன்னியை அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தாரா? பாகிஸ்தானில் இருந்து பவன் திரும்பி இந்தியாவுக்கு வருகிறாரா என்பதே கிளைமேக்ஸ்.
இயக்குநர் கபீர் கான் இந்தியா-பாகிஸ்தான் உறவைப் பற்றி படமெடுப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ஏக் தா டைகர்’ படத்தில் ஏற்கெனவே இந்தியா- பாகிஸ்தான் உளவாளிகளின் காதலைக் கதைக் களமாக அமைத்திருந்தார். இந்த முறை இரு நாட்டு மக்களிடம் இருக்கும் அடிப்படையான அன்பையும், மனிதத்தையும் கதைக்களமாக அமைத்திருக்கிறார். ஆனால், பாலிவுட்டுக்கே உரிய, சல்மான் கான் படத்துக்கே உரிய எல்லா கமர்ஷியல் அம்சங்களையும் இந்தப் படத்திலும் காண முடிகிறது.
படத்தின் நிஜ ஹீரோ ஏணா முன்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹர்ஷாலியைச் சொல்லலாம். எதுவும் பேசாமல் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்துவிடுகிறார். அப்பாவி சல்மான் கானின் நடிப்பு ஹர்ஷாலியின் நடிப்புக்கு முன் அந்தளவுக்கு எடுபடவில்லை. மாறாக, பாகிஸ்தான் தொலைக்காட்சி நிருபராக வரும் நவாஸுதீன் சித்தீக்கின் நடிப்பு வலிமையானதாகவும், நகைச்சுவையாகவும் வெளிப்பட்டிருக்கிறது. கரீனா கபூரின் கதாபாத்திரத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிதாக எதுவும் இல்லை.
‘‘பஜ்ரங்பலி எனக்கு உதவிசெய்வார்’’ என்று பவன் சொல்லும்போது, ‘‘பாகிஸ்தானில் கூடவா?’’ என்று சாந்த் நவாப் கேட்கும்போது தியேட்டரில் சிரிப்பலை அடங்க வெகு நேரமாகிறது. வசனங்கள் சில இடத்தில் சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைக்கின்றன.
குரங்குகளை எங்கே பார்த்தாலும் வணங்கு மளவுக்குத் தீவிரமான அனுமான் பக்தராக பவனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. முன்னி பாகிஸ்தானி என்று தெரியவரும்போது பவனுக்கு ஏற்படும் மனத்தடை இங்கேயிருக்கும் சிலரது மனநிலையை வெளிப்படுத்துகிறது. இந்த முரண்பாட்டைத் தாண்டி அந்தக் கதாபாத்திரம் அந்தச் சிறுமியைக் காப்பாற்ற முனைவது ஆரோக்கிய மான திருப்பம். அந்த மாற்றமும் அது நிகழும் விதமும் நம்பகமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், பாகிஸ்தான் சென்று அங்கிருப்பவர்களுக்கும் ‘ஜெய்  ராம்’ என்று வணக்கம் சொல்வதும், அவர்களையும் சொல்ல வைப்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. தவிர, இந்தியாவில் அனைவரும் ‘ஜெய்  ராம்’ என்றா வணக்கம் தெரிவிக்கிறார்கள்?
இந்தியாவில் இருக்கும் மதச்சார்பின்மையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக இயக்குநர் மதச்சார்பை அங்கீகரித்திருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
திரைக்கதையை விஜயந்திர பிரசாத்தும், இயக்குநர் கபீர் கானும் இணைந்து எழுதியிருக்கின்றனர். படத்தின் நீளம் திரைக்கதையில் சற்றுத் தொய்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் வரும் சில பாடல்கள், சண்டைக் காட்சிகள் போன்றவற்றை இந்தத் தொய்வுக்கு காரணமாகச் சொல்லலாம். ஆனால், பின்னணி இசையும் ஒளிப்பதிவும் அந்தத் தொய்வைப் பெரிதாக்காமல் சமாளித்துவிடுகின்றன. பாகிஸ் தானில் நடக்கும் இரண்டாம் பாதி படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
இந்தியா- பாகிஸ்தான் உறவை எந்த வெறுப்புணர்வுமில்லாமல் நேர் மறையாகச் சொன்ன விதத்துக்காக இயக்குநர் கபீர் கானை நிச்சயமாகப் பாராட்டலாம்.


நன்றி - த இந்து

0 comments: