Thursday, July 16, 2015

..சென்னை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் -'கேம் சேஞ்சர் ' ஆதித்யா வர்மா.

ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணிக்கு தடை விதிக்க காரணம் ஒரே ஒருவர்தான். அங்கீகாரமில்லாத பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக இருக்கும் அவரது பெயர் ஆதித்ய வர்மா.
கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சூதாட்டம் நடப்பதாக  மும்பை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீதிபதி முகுந்த் முட்கல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கை தொடுத்த பின்னர் ஆதித்ய வர்மா சந்தித்த பிரச்னைகள் அனேகம். தினமும் கொலை மிரட்டல் வரும். "கோடி கோடியாக பணத்தை பெற்றுக் கொண்டு, வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு ஒதுங்கி விடு...!' என்று எச்சரித்தவர்களும் ஏராளம். ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல், தான் தொடுத்த வழக்கில் ஆதித்யா வர்மா உறுதியா நின்றார்... வென்றார்.

அதுமட்டுமல்ல பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனின் பண பலம், அதிகார பலத்தையும் ஆதித்ய வர்மா முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஆதித்ய வர்மா வழக்கு தொடர்ந்த பிறகுதான் உச்சநீதிமன்றம், பி.சி.சி.ஐ தலைவராக இருந்த ஸ்ரீநிவாசனை பதவி விலக உத்தரவிட்டது. ஒன்று பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருங்கள் அல்லது சென்னை அணியின் உரிமையாளராக இருங்கள் என்று ஸ்ரீநிவாசன் தலையில் உச்சநீதிமன்றம் கொட்டியது. இதையடுத்துதான் பி.சி.சி.ஐ தலைவர் பதவியை குருநாத்தின் மாமா ஸ்ரீநிவாசன் இழந்தார்.
தற்போது ஸ்ரீநிவாசனுக்கு மட்டுமல்ல, அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பனுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆதித்யா வர்மா என்ற இந்த தனி மனிதர்தான் காரணமென்றால் அது மிகையில்லை.

இந்த வழக்கில் வெற்றி பெற்றது குறித்து ஆதித்யா வர்மா ட்விட்டரில், '' இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல நாள். இந்த வழக்கில் நான் வெற்றி பெற வேண்டி எனது மகள் கோவில் கோவிலாக சென்று வேண்டினாள். அதற்கு கடவுள் அளித்த பரிசு '' என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - விகடன்

0 comments: