Tuesday, July 14, 2015

கூந்தல் வளர்ச்சிக்கு ,ஏஞ்சல் கவர்ச்சிக்கு மூலிகை மரு த்துவம்

முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்!
ண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும்.

'முடி வளருதோ இல்லியோ... இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்ற
மனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. விளைவு, ஆளாளுக்குச் சொல்லும் ஷாம்பு, எண்ணெய், தைலங்களை வாங்கித் தலையில் கொட்டி, இருக்கும் முடிக்கு வேட்டு வைக்கின்றனர். நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்... இருக்கும் முடியை தக்கவைக்கலாம்... வளர்ச்சியைக் கூட்டி, உறுதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கலாம்' என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

''முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச் சத்தும், புரதச் சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரையைச் சேர்க்கும்போது இந்தச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்துவிடுகின்றன. எனவே, தினமும் இதில் ஏதேனும் ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.
பேரீச்சம், உலர் திராட்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி... போன்ற பழங்கள் முடி உதிர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தருகின்றன. வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து, பனை வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். பாசிப் பருப்பில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கட்டிய பாசி பயிறு முடியின் வேர்க்கால்களை வலுபடுத்தும்.
பெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகள் என வாரம் தவறாமல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கவேண்டும். கூந்தலை சீவி பிண்ணுவதன் மூலம் முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
முடி ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சில தைலங்களைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தத் தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். தலைக்கு ஷாம்புவுக்குப் பதில் அரைத்த சீயக்காய் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை பயத்தமாவு அல்லது கடலை மாவால் குளிப்பாட்டலாம்.
கருகருவென முடி அடர்த்தியாக வளர கை கொடுக்கும். முடி கொட்டுவதும் நீங்கும். இளநரையும் வராது'' என்கிற வேலாயுதம், வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள, சில மூலிகை தைலங்களைச் சொன்னார்.  
பஞ்ச கர்ப்பம் தைலம்

தேவையானவை: 50 கிராம் கடுக்காய், சிறிது வேப்பிலை. கால் டீஸ்பூன் வெள்ளை மிளகு, கரிசிலாங்கண்ணி கரை சாறு - 10 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.
செய்முறை: கடுக்காயை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். மேலே சொன்ன பொருட்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். 'சடசட’ வென ஓசை வந்ததும் இறக்கி, ஆற வைக்க வேண்டும்.
குளிக்கும்போது இந்தத் தைலத்தை மிதமாகச் சூடு செய்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்கவேண்டும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும்!
கரிசாலைத் தைலம்
தேவையாவை: கரிசலாங்கண்ணி இலை சாறு - 50 மி.லி., நல்லெண்ணெய் 50 மி.லி., வெந்தயம் - 50 கிராம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய் கலந்துகொள்ள வேண்டும். அதனுடன் வெந்தயத்தை வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை நீர் வற்றும் வரை காய்ச்சி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.
நெல்லி தைலம்
தேவையாவை: நெல்லி சாறு 50 மி.லி., மருதாணி சாறு 50 மி.லி., அரைக்கீரை விதை 50 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.
செய்முறை: நெல்லிசாறுடன், மருதாணி சாறைக் கலந்து அதில் அரைக் கீரை விதையைச் சேர்க்க வேண்டும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு நீர் வற்றி வாசனை வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.
அவுரி தைலம்
தேவையானவை: அவுரி இலைச் சாறு 250 மி.லி., நெல்லிச் சாறு 100 மி.லி., நல்லெண்ணெய் அரைக் கிலோ.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அவுரி, நெல்லிச் சாறு கலந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து நீர் வற்றும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.


நன்றி - விகடன்

0 comments: