Thursday, July 09, 2015

சிம்புவின் காதல் பற்றி டி ராஜேந்தர் - விகடன் மேடை பதில்கள்

விகடன் மேடை”தி.மு.க-வை நம்பி ஏமாந்தவன் நான்!”வாசகர் கேள்விகள்... டி.ராஜேந்தர் பதில்கள்
கோ.தாமரைக் கண்ணன், திருப்பூர்.
''அரசியலில் உங்களால் மறக்க முடியாத விஷயம் எது?''
''நன்றி மறக்காதவன் சார் இந்த டி.ஆர். ஊர்ல எனக்கு டீ வாங்கிக் கொடுத்தவங்களைக்கூட இன்னைக்கு வரைக்கும் ஞாபகம் வெச்சிருக்கேன். தி.மு.க-வுக்காக எம்.ஜி.ஆரை எதிர்த்து அரசியல் பண்ணினவன் நான். ஆனா, அதே தி.மு.க எனக்கு அரசியலில் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்துச்சு. இப்போ உக்காந்து விகடன் மேடைக்குப் பதில் சொல்லிட்டு இருக்கேனே, இந்த தி.நகர் வீடு... இதுதான் சார் என் ஆன்மா. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை கலைஞர் ஆட்சி. அப்போ நான் தி.மு.க-வில் இருந்து விலகி இருந்தேன். அப்போ இந்த வீட்டு மாடியில் ரெக்கார்டிங் ஸ்டுடியோ கட்டினேன். அதுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினேன். கட்டி முடிச்ச பின்னாடி பல நாட்கள் என் ஏரியாவில் மட்டும் பவர்கட் பண்ணிடுவாங்க.
தீப்பந்தத்தோட வீடு தேடிவந்து பிரச்னை பண்ணுவாங்க. ஏன்னா, சட்டசபையில் ஜெயலலிதா அம்மையாரை அவமதிச்ச விஷயத்தில் நான் கலைஞரை விமர்சித்தேன். 'கலைஞரை துரியோதனன் ஆக்கி, துரை முருகனை துச்சாதனன் ஆக்கி, ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தி அவரை திரௌபதி ஆக்கலாமா?’னு அந்த அம்மையாருக்கு ஆதரவாப் பேசினேன். அதுவும் எங்கே பேசினேன்? அ.தி.மு.க கூட்டத்தில் பேசலை. சர்வ கட்சிக் கூட்டத்தில் பேசினேன். 25 ஊர்களில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசினேன். தி.மு.க ஒரு அணியாகவும், அ.தி.மு.க ஒரு அணியாகவும் சண்டை போட்டுட்டு இருந்தப்ப, பழநி சட்டமன்றத் தொகுதியில் தாயக மறுமலர்ச்சிக் கழகம் சார்பில் என் மனைவி உஷா போட்டியிட்டு 40 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினாங்க. இதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு என் வீடு இடிக்கப்பட்டது. எம்.எம்.டி.ஏ அனுமதி இல்லைன்னு சொல்லி, வீட்டில் அத்தனை காவல்துறை அதிகாரிகள் வந்து குவிஞ்சாங்க. 'ஒரே ஒரு போன். மேலிடத்துல பேசுங்க. எல்லா பிரச்னையும் சரியாகிடும்’னு காவல்துறை அதிகாரிங்க சமரசத்துக்கு வந்தாங்க. 'நான் மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு வரும்போது சித்தாந்தத்தோடுதான் வந்தேன்; செங்கல்லைத் தூக்கிட்டு வரலை. காரோடு வரலை; வெறும் காலோடுதான் வந்தேன். கட்டின இந்த வீட்டை இடிச்சாலும் ஒரு குடிசை போட்டு உட்கார்ந்தாவது கலைஞரை எதிர்ப்பேன்’னு பதில் சொன்னேன். வீட்டை இடிச்சுட்டாங்க.
'கட்டின வீட்டை இடிச்சாலும் யார் காலையும் நான் பிடிக்க மாட்டேன்’னு போஸ்டர் அடிச்சு ஒட்டினேன். 'தாய்மார்களே... தந்தைமார்களே... தி.மு.க-வுக்கு ஓட்டு போடுங்க’னு மைக் பிடிச்சுக் கத்தினதுக்குப் பரிசா, டம்மு டம்முனு என் வீட்டில் கடப்பாரையில் ஓட்டை போட்டாங்க. 'உள்ளங்கையை விரித்துக் காட்டு உதயசூரியன்’, 'பாளையங்கோட்டை சிறையினிலே... பாம்புகள் பல்லிகள் நடுவினிலே... அஞ்சாமல் இருந்தது யாரு... அந்தக் கலைஞரின் புகழைப் பாடு’னு பாட்டு போட்டுப் போட்டு ஓட்டு கேட்டனே... நான் பட்ட பாட்டையெல்லாம் மறந்துட்டு வீட்டை இடிச்சாங்க. நான் தி.மு.க-வுக்காகக் கொட்டினது சொற்கள்... அதற்குப் பரிசா வீட்டை இடிச்சு என் முன்னாடி கொட்டினாங்க கற்கள். அப்புறமும் அடங்கலை. முதல் மாடியை இடிச்சதும் மெஷின் வெச்சு, மிச்சம் வைக்கிற கம்பிகளையெல்லாம் அறுத்தாங்க. கலைஞர் 'என் தம்பி ராஜேந்தர்’னு சொன்னதை நம்பி, நம்பி வேலைபார்த்ததுக்கு கம்பியைக்கூட விட்டுவைக்கலை சார்.
மழைக்காலத்துல வீட்டுக்குள்ள மழை அப்படியே கொட்டும். பல வருஷமா அந்த ஓட்டையை நான் அடைக்கலை. நம்பி ஏமாந்ததுக்கு நினைவுச் சின்னமா இந்த வீடு இருக்கட்டும்னு அப்படியே போட்டு வெச்சிருந்தேன். இதைத்தான் என் இத்தனை வருஷப் பொது வாழ்க்கையில மறக்கவே முடியலை!''
தி.விமல், பூதலூர்.
''உங்களை முதல்ல சன் டி.வி-யில் பார்த்தோம்; அப்புறம் விஜய் டி.வி-யில் பார்த்தோம்; எந்த டி.வி-யில் உங்களை நிலையாப் பார்க்க முடியும்?''
''சார்... மனுஷனுக்கு ஆவியே நிலை கிடையாது. டி.வி எப்படி சார் நிலையா இருக்கும்? கடவுள் எந்த வாய்ப்புகளைக் கொடுக்கிறாரோ, அதைத்தான் சார் நாம பயன்படுத்த முடியும்!''
கலியமூர்த்தி, கோவை.
''டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றியையும், பா.ஜ.க-வின் தோல்வியையும் எப்படிப் பார்க்கிறீங்க?''
''அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி ஆச்சர்யப்பட வைக்குது. பா.ஜ.க-வின் தோல்வி அதிர்ச்சியடைய வைக்குது. சிந்திக்கத் தெரிந்த டெல்லிவாழ் மக்களைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கிறேன்... இந்தியாவின் தலைமைக் கேந்திரத்தில் வாழும் அவர்கள், நாட்டின் அரசியல் நிலைமையை மாற்றியிருக்கிறார்கள். பாரம்பர்யமிக்க காங்கிரஸ் கட்சி பூஜ்யம் நிலைக்குச் சென்றுவிட்டது. நாடாளுமன்றத்தை பா.ஜ.க கையில் வைத்திருக்கும்போதும், நிலையில்லாத இந்த ஆட்சிக்கு எந்தக் கட்சி சரி எனச் சிந்தித்து மொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள். இப்படி ஒரு சிந்தனை மாற்றம் மற்ற மாநில மக்களிடையே வருமா எனச் சிந்தித்தால், ஒண்ணும் சொல்லத் தோணலை!''
அ.கேசவன், கல்லணை.
''லிட்டில் சூப்பர் ஸ்டாரா இருந்த சிம்பு, யங் சூப்பர் ஸ்டார் ஆனார். எப்போ சார் 'சூப்பர் ஸ்டார்’ ஆவார்?''
''எல்லாம் இறைவனின் அருளிலும், காலத்தின் கையிலும் இருக்கு; சிம்புகிட்ட நிறையத் திறமைகள் இருக்கு; கடவுள் நம்பிக்கை இருக்கு. கடவுள் அருளால் நல்லா வரணும்... வருவார். (டி.ஆர் பேசிக்கொண்டிருக்கும்போதே செல்போன் ரிங் அடிக்க...) பார்த்தீங்களா... மணிகூட அடிக்குது. சீக்கிரமே நல்லது நடக்கும்!''
நடராஜன், நாமக்கல்.
''டி.ஆர்-னாலே பிரம்மாண்ட செட்கள்தான் ஞாபகத்துக்கு வரும். அதில் உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?''
''நான் சின்ன வயசுல பாமர ரசிகனாத்தான் படம் பார்க்கப் போவேன். நம்ம ஆளுங்கள்ல பல பேர் ஏழைப்பட்டவன் சார். படம் பார்க்க வர்றவங்கள்ல ஒருத்தன் அண்ணனா பொறந்திருப்பான். அவன், தன் தங்கச்சிகளைக் கரையேத்த கஷ்டப்பட்டிருப்பான். ஒருத்தி குடும்பத்தோட மூத்த பொண்ணா பொறந்திருப்பா. அவ, தன் தங்கச்சிகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்னு கல்யாணமே பண்ணிக்காம படிக்கவெச்சுட்டு இருப்பா. அவ கரையே ஏறமாட்டா. ஆனா, தலையெல்லாம் நரை போட்டிருக்கும். அத்தனை கஷ்டங்களையும் மறக்கத்தான் சினிமா பார்க்க வர்றாங்க. யதார்த்தமான சொந்த வாழ்க்கை சுட்டு எரிச்சுட்டு இருக்கு. சினிமா மட்டும்தான் சார் சிரிக்கவெச்சுட்டு இருக்கு. யதார்த்த வாழ்க்கையின் கஷ்டங்களை மறக்கடிக்கிற மாதிரி சினிமாவில் ஒரு ஜிகினா இருந்தா அவங்க சந்தோஷப்படுவாங்க. அதுக்குத்தான் ஃபேன்டஸி செட் போடுறோம். பறந்து பறந்து அடிக்கிற ஃபைட் பார்த்தா, நம்மால பண்ண முடியாததை இன்னொருத்தன் பண்றானேனு ரசிகன் சந்தோஷப்பட்டு கைதட்டுவான் சார். நிஜ வாழ்க்கையில பூங்காவுல பாட்டுப் பாட முடியாதுல்ல... அதனால நாங்க அங்கே பாடி ஆடுறோம். ரசிகர்கள் கொடுக்கிற காசை வாங்கிட்டு நாங்க அவங்களைத் திருப்திபடுத்துறோம். செட் போடுறதுல எனக்கு நிறைய முன்னோடிகள் இருக்காங்க. அதில் ஒருவர் எஸ்.எஸ்.வாசன். 'சந்திரலேகா’, 'ஒளவையார்’ மாதிரி நம்மாள ஒரு படம் எடுக்க முடியுமா? இன்னும் இரண்டு மேதைகள்... பி.ஆர்.பந்துலு மற்றும் டி.ஆர்.ராமண்ணா. இவங்க எல்லாம் எவ்வளவு அழகா மசாலாவை சினிமாவுக்குள் கொண்டுவந்திருப்பாங்க தெரியுமா? 'நான்’, 'மூன்றெழுத்து’, 'குலேபகாவலி’, 'தங்கச்சுரங்கம்’ இவையெல்லாம் என்ன மாதிரியான படங்கள்! 'சொர்க்கம்’ படத்துல 'பொன்மகள் வந்தாள்...’ பாட்டுக்கு பிரமாண்டமான தங்க காசு செட் போட்டிருப்பாங்க. எவ்வளவு கிரியேட்டிவிட்டி! ஏ.பி.நாகராஜன் பண்ணின 'திருவிளையாடல்’, 'திருமால் பெருமை’, 'சரஸ்வதி சபதம்’, 'கந்தன் கருணை’ படங்கள் அட்டகாச சாதனைகள். இப்படி எத்தனை ஜாம்பவான்கள் வாழ்ந்த நாடு இது. 'கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் ஆட...’னு சொல்வாங்களே... அதுமாதிரி அந்த மயில்கள் ஆட, அதைப் பார்த்து நான் ஆடியதுதான் என் பட செட்கள்!''
ரஹீம் கஸாலி, சென்னை.
''வைகைப்புயல் வடிவேலு 'என் ராசாவின் மனசிலே’ படத்தில்தான் அறிமுகம்னு நாங்க நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, அதுக்கு முன்னாடியே நீங்க இயக்கிய 'என் தங்கை கல்யாணி’ படத்தில் அவர் நடிச்சிருக்காரே... எப்படி பிடிச்சீங்க அவரை. அவரின் இப்போதைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''
'' 'என் தங்கை கல்யாணி’ படத்தில் வடிவேலுவை நடிக்கவெச்சது எதிர்பாராத நிகழ்வு. படத்தில் ஒரு சின்னப் பையன் சைக்கிள் பெல்லைத் திருடிருவான். அதை ஒரு கேரக்டர் பார்த்துப் பிடிச்சுக் கொடுத்திருவார். அந்தக் கேரக்டருக்கு நடிக்க வேண்டியவர் வரலை. அப்போ ஷூட்டிங் வேடிக்கை பார்த்தவங்கள்ல வெடவெடனு இருந்த ஒருத்தரைக் கூப்பிட்டு, 'நடிக்கிறீங்களா?’னு கேட்டேன். 'ம்ம்’னு தலையாட்டினார். 'டயலாக் பேசுவீங்களா?’னு கேட்டேன். 'நல்லா பேசுவேன் சார்’னு ஆர்வமா சொன்னார். நல்லா நடிச்சார். அன்னைக்கு மணியைத் திருடுறவனைப் பிடிக்கிற மாதிரி நடிச்சார். அதுலேருந்து மக்களோட மனசையெல்லாம் பிடிச்சுட்டார். 'மோனிஷா என் மோனலிசா’, 'சொன்னால்தான் காதலா’னு என் படங்களில் நடிச்சார். எனக்கு நல்ல நண்பராவும் ஆனார். அவரோட இந்த அபரிமிதமான வளர்ச்சியைப் பார்த்து ஆச்சர்யப்பட மாட்டேன்; ஆனந்தப்படுறேன்!''
அ.யாழினிபர்வதம், சென்னை.
''டி.ராஜேந்தரின் காதலுக்கும் சிலம்பரசனின் காதலுக்கும் என்ன வித்தியாசம்?''
''டி.ராஜேந்தர் மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். அவனுடையது அன்புக்குரிய காதல்; ரொம்ப எளிமையான காதல். சிலம்பரசன் வசதியான இயக்குநரின் வீட்டில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். அவனுடையது ஹைடெக் காதல். ரெண்டு பேர் உள்ளத்திலும் பரிசுத்தமான அன்பு மட்டுமே இருக்கும். சிம்பு வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை... அதனால்தான் காதலில் அவர் பட்டுக்கொண்டிருக்கிறார் இத்தனை தொல்லை!''
து.பார்வதி, வேலூர்.
''எல்லாத்தையும் ஒரு கைபார்த்த டி.ஆர் எடிட்டிங்கை மட்டும் ஏன் விட்டுட்டார்?''
''நீங்க வேற... டி.ராஜேந்தரின் உஷா என்று ஒரு பத்திரிகை தொடங்கி அதுக்கு எடிட்டரா இருந்தேனே! எனக்கு எடிட்டிங் ரொம்பப் பிடிக்கும். ஆனா, படங்களுக்கு எடிட்டர் ஆகிறதுல விருப்பம் இல்லை. ஏன்னா, சினிமா எடிட்டர்களோட வாழ்க்கை அவ்வளவு கடினம். சினிமாவில் வேலைபார்க்கிற இயக்குநர்ல இருந்து கடைசி லைட்மேன் வரைக்கும் விதவிதமான இடங்களைப் பார்ப்பாங்க. ஆனா, எடிட்டர் மட்டும்தான் சின்ன ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்து வேலைபார்ப்பாங்க. சின்ன ரூமுக்குள்ள இருந்தாலும் படத்தோட பிரம்மாண்டத்தை, வேகத்தை யோசிச்சு வானம் அளவுக்கு அவங்க சிந்திக்கணும். நான் சினிமாவில் மரியாதை நிமித்தமா மாலை போடணும்னு ஆசைப்பட்டா, முதல்ல எடிட்டர்களுக்குத்தான் போடுவேன். என்னால ரூமுக்குள்ள அடைஞ்சுக் கிடக்க முடியாது. நான் மியூசிக் கம்போஸ் பண்ணினாகூட, நடந்துகிட்டு, இடத்தை மாத்திட்டு கம்போஸ் பண்ற ஆளு. நான் சுதந்திரமான பறவை மாதிரி வாழுற ஆளு. அதான் எடிட்டிங் பக்கமே போகலை!''
- அதிரடி சரவெடி தொடரும்

நன்றி - ஆ விகடன்

0 comments: