Wednesday, July 15, 2015

''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்களில் யாரை இயக்க ஆசை?''-விகடன் மேடை - இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பதில்கள்

“ஆயிரத்தில் ஒருவன் நான்!”விகடன் மேடை - இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பதில்கள்வாசகர் கேள்விகள்
எஸ்.சுபத்ரா, மேட்டூர்.
''ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி... இவர்களில் யாரை இயக்க ஆசை?''
'அலியா பட், நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா, தன்ஷிகா, நித்யா மேனன், ஸ்ரீதிவ்யா, லட்சுமி மேனன், அகிலா கிஷோர்... etc வரை யாரை வேண்டுமானாலும் கட்டிக்க நான் ஆசைப்படலாம். ஆனால், அவங்கள்ல யாருக்கு நம்மளைக் காதலிக்கணும்னு தோணுதோ...
அதுதானே மேட்டர்!''
பாலமுருகன் நாகராஜன், ஃபேஸ்புக்.
'' 'எந்த கேரக்டரில் நீங்கள் நடித்தாலும், அந்த கேரக்டர் வெளிப்படாமல் பார்த்திபன் மட்டுமே தெரிவது உங்களின் பலவீனம்’ என்கிறேன் நான். ஆமோதிக்கிறீர்களா? ''
'' 'ஆயிரத்தில் ஒருவன’£க ஆமோதிக்கிறேன்!''
சிவா, மதுரை.
''ஜி, இதுவரை சினிமாவில் எத்தனை கோடி சம்பாதித்திருப்பீர்கள்? ''
''ஒரு ஜி-தானே? 2ஜி-யிடம் கேட்பதுபோல கேட்கிறீர்களே?
நானும் கோடிக்கோடியாகச் சம்பாதித்திருக்கிறேன்.
என் தெருக் கோடி முதல்
நம் ஊர்க் கோடி வழியாக
உலகின் ஆயிரம் கோடி உள்ளங்களை!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கட்சி தொடங்கிய காலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினாராம்... 'ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே, உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒருவேளை சோறு எனக்குப் போட மாட்டீங்களா என்ன?’ என்று. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் எனக்கும் ஒரு வேளையாவது அன்பு ஊட்ட கோடிக்கோடியாக இதயங்கள் இருக்கின்றன... இரு கைகளை நீட்டியபடி!''
மதன ராஜ், ஃபேஸ்புக்.
''ரஜினிக்கு ஒன்லைன் ஒன்று சொல்லுங்கஜி? ''
''ரஜினி ஒரு lion..!''
பிரசன்னா ராமசுப்ரமணியன், ஃபேஸ்புக்.
''அது ஏன் தமிழ் சினிமாவில் மதுபானக் காட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை? ''
''அது ஏன் தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் தவிர்க்க முடியவில்லை?''
புகழ்மணி, ஃபேஸ்புக்.
 '' 'புதிய பாதை’ ஆர்.பார்த்திபன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ இராதாகிருஷ்ணன் பார்த்திபன்... என்ன வித்தியாசம்? ''
''புகழ் + money -தான்... மிஸ்டர் புகழ்மணி!''
அன்வர் ஹுசைன், ஃபேஸ்புக்.
''நீங்கள் திருட்டு வி.சி.டி-யில் பார்த்த படம் எது? ''
''சமீபத்தில் என் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’!
பர்மா பஜாரில் ஒரு கழிவறைக்குப் பக்கத்தில் குப்பைக் கிடங்கில் - ஒன்று அல்ல 25 ஆயிரம் டி.வி.டி-க்கள் பரிதாபமாக. அதிர்ச்சியில் அழுகையும் கோபமும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தன. அந்தக் காலத்தில் ஊர் உல்லாசிக்க பூப்பெய்தியப் பெண்ணை கோயிலுக்கு நேர்ந்துவிட்டதைப்போல, நான் உயிராக வளர்த்த என் திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் களவாட - கையாட அநாதையாக குப்பைத்தொட்டியில். அதுவும் கூனிக் குறுகாமல், குற்றவுணர்ச்சி இல்லாமல் விற்பனை செய்கிறார்கள்; அதை வாங்கியும் பார்க்கிறார்கள்.
என்னைப் போன்றவர்களின் கொதிப்பு அவர்களுக்குப் புரியவில்லை.
புரியும்! எப்பொதெனில்...
அவர்களின் செல்ல மகளை ஊரே கூடி பலாத்காரம் செய்யும் அவல நிலையைக் கண்ணுற்றுக் கதறும்போது!''
ஜெயஸ்ரீ சிவகுமார், ஃபேஸ்புக்.

''நடிகை சௌந்தர்யாவின் அகால மரணத்தை நினைத்தால், இன்றும் எனக்கு திடுக்கென உதறும். ஆர்ப்பாட்டம் இல்லாத சின்சியர் ஹீரோயின் அவர். அவர் இறப்புக்கு நீங்கள் மட்டுமே சென்றதாக ஞாபகம். அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளைப் பதியுங்களேன்...''
 '' 'ஒட்டுண்ணி மனசு’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுத மனம் தூண்டியது, சௌந்தர்யாவைச் சந்தித்த சந்தர்ப்பத்தில்!
நாய் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் உண்ணியைப் பிரித்து/பிய்த்து எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இத்தனைக்கும் சற்று முன்தான் ஒட்டியிருக்கும். அப்படித்தான் மனசும்!
சில/பல மனசோடு...
அம்மன் ஜாடையில் அம்சமாய் முகம்,
கள் வடியும் பானைகளாய் இரு கண்கள்
உச்சரிக்காமலே நச்சரிக்கும் உதடுகள்

-இப்படி அடுக்கிக்கொண்டேபோகலாம் சௌந்தர்யாவின் புற அழகை.
ஆனால், என்னை ஈர்த்தது அவர் ஒரு ரசனையின் ராட்சசி என்பதுதான். 'அந்தப்புரம்’ படப்பிடிப்பு நேரத்தில் 'இவன்’ படத்தின் 'தீட்ஷண்யா’ கதாபாத்திரத்தின் தன்மையை மேலோட்டமாகச் சொன்னேன். அவரின் அகல விழிகள் இன்னும் அகன்ற திரையாக விரிந்தன. என் ரசனைக்குரிய தீட்ஷண்யாவுடன் சௌந்தர்யாவின் மனம் ஒட்டிக்கொண்டதால், அவர் மனதோடு என் மனமும் ஒட்டுண்ணி ஆனது. அந்த ஈடுபாட்டினால்தான் என் தீட்ஷண்யா உருவத்தில் இன்னமும் சௌந்தர்யா வாழ்ந்துகொண்டிருக்கிறார்!''
ஷேக் அப்துல்லா, வாணியம்பாடி.
''இன்றைய தலைமுறை இயக்குநர்களில் உங்களுக்குப் போட்டியாக நீங்கள் நினைப்பது யார், யாரை? ''
''இன்னும் 20 வருடங்கள் தள்ளிப்போட்டு இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டால்கூட, அந்த வருடம் அறிமுகமான இயக்குநர்களின் பெயர்களைப் பட்டியலாக வெளியிடுவேன்... இந்தக் கேள்விக்குப் பதிலாக!''
கோவிந்த் கந்தசாமி, ஃபேஸ்புக்.
'' 'களவும் கற்று மற’ ஓ.கே... காதல்?''
''மர கழண்ட பின்தானே காதல்!''
ராஜ் மோஹன், ஃபேஸ்புக்.
''விளையாட்டுக்குக் கேட்கவில்லை... ஒருவேளை, நீங்கள் கட்சி ஆரம்பித்தால் என்ன பெயர் வைப்பீர்கள்? ''
''பெயர் மட்டும் வைத்தால் போதுமா? பெயருக்கு முன் எத்தனையோ கட்சிகள் ஏற்கெனவே நாட்டில்.
நியாயமாகப் பார்த்தால், பெயர் வைக்கக் கூடாது; பெயர் எடுக்க வேண்டும். அரசியலில் பெயர் எடுக்க, ஸ்விஸ் பாங்க் அக்கவுன்ட் ஆசையை மனதில் இருந்து பெயர்த்து எடுக்க வேண்டும். என் வயிற்றுக்காகவோ, என் குழந்தைகளின் வசதிக்காகவோ, அரசியலில் உண்டியலை நான் உடைக்கக் கூடாது எனில், சினிமா மூலம் ஒரு கூடும், மூன்று வேளை சோறும் எனக்கு நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
அதுவரையில் அரசியல் ஆகாது; ஆனால், அது விரைவில் ஆகும்!''
சாமுண்டீஸ்வரி, பாளையங்கோட்டை.
''நீங்கள் எடுக்க முயற்சித்து, கைவிடப்பட்டப் படங்கள் எவை? அதற்காக நீங்கள் செலவழித்த தொகை எவ்வளவு? ''
''சினை முட்டைக்குள் நுழைய முடியாமல்
முட்டி மோதும் விந்து அணுக்கள்
கருவான உயிர் அணுக்கள்
வெளியான சிசுக்கள்...
இவை, எல்லா படைப்புக்கும் நிகழும்.

இப்படி நானும் நிறைய சுமந்துகொண்டிருக்கிறேன். அப்படி வெளியாகும் முன்பே சில கருக்களுக்கு நான் பெயர் வைத்திருக்கிறேன். ஆனால், கருக்கலைப்பு எதற்குமே நிகழ்ந்தது இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ஏலேலோ’ indo-irish இசைக் கலவையில் இணைந்து, புதிய பரிமாணத்தில் பிறக்கப்போகும்
10 பாடல்கள் அடங்கிய ஒரு ட்ரீம் புராஜெக்ட்... என்றாவது நடக்கும். என்ன ஒரு மாற்றம் இருக்கும் எனில்... 15 வருட இடைவெளியில் நான் இன்னும் இளமையாகிவிட்டதால், நான் நடிக்கவிருந்த பாத்திரத்தில் வேறு ஒருவர் நடிக்கலாம். ஆனாலும் நானே இயக்குவேன்! இப்படி இசையராஜாவுடன் 'கருப்பண்ணசாமி’யும் வரும். அந்த வரிசையில் 'சோத்துக்கட்சி’, 'புதியபாதை-2’, 'திக்கிதிக்கி பேசுது மனசு’ இன்னும் நிறைய... முழுப் படமாகவோ, ஒரு படத்தில் சிறுபகுதியாகவோ வரும். இதுவரை நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் மேற்சொன்ன படங்களில் செலவழித்ததாகச் சொல்ல மாட்டேன். முதலீடு செய்துள்ளேன்!''

ரமேஷ், சென்னை.
''நீங்கள் அனுபவசாலி என்பதால் இந்தக் கேள்வி, ரீல் காதல் ரியல் காதல் ஆகும்போது அது திருமணம் கடந்த பந்தமாக வலுப்பெற நாம் என்ன செய்ய வேண்டும்? ''
''நாம் செய்யக் கூடாது; நீங்கள்தான் செய்ய வேண்டும். எந்த அனுபவசாலியிடமும் பதில் தெரிந்துகொள்ள, திருமணம் ஒரு கேள்வி அல்ல; வழிமுறை தெரிந்துகொள்ளும் கணக்கும் அல்ல; வழி தெரிந்துசெல்லும் பயணமும் அல்ல; பின் என்னதான் அது?
ஒவ்வொருவரும் இருவராக இணைந்து அறிந்துகொள்ளும் அனுபவமே திருமணம் கடந்த பந்தம். உங்கள் இருவருக்கும் இடையே third person ஆக எவரையும் நுழையவிடாதீர்கள். காதலை மட்டுமே நடுநாயகமாக வைத்துத் தீர்ப்பைச் சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள்!''
- லாம்... சலாம்... பேசலாம்!

நன்றி - த இந்து

0 comments: