Friday, July 10, 2015

பட்டம் வேணும்னா என் கூட ஒரு நாள் தங்கு...!'- பாரதியார் பல்கலை பரபர!


கோவை: முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் என் கூட ஒரு நாள் தங்கு என்று கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் மிரட்டுவதாகவும், ஒன்றரை லட்சம் பணம் தர வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் மாணவி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழக மாணவி அனிதா ராஜன், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏம்.ஏ. ஆங்கில மொழியியல் மற்றும் இலக்கியவியல் பாடத்தில் பாரதியார் பல்கலை கழக அளவில் முதலிடம் பெற்று ’கோல்டு மெடல்’ பெற்றவர். அதே பல்கலையில் 2010ல் முனைவர் பட்டம் படிக்க சேர்ந்த அவர், கணவர் இறந்ததன் காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை. அதன்பின், கடந்த 2014 ஆம் ஆண்டு இடைநின்ற முனைவர் பட்டத்தை மீண்டும் தொடர்ந்துள்ளார் அனிதாராஜன்.

இந்நிலையில், முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆங்கில மொழியியல் மற்றும் இலக்கியவியல் துறையின் தலைவரும், பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினருமான சரவணன் செல்வத்திடம் விண்ணபித்துள்ளார். ஆனால், முனைவர் பட்டம் வழங்க தன்னுடன் ஒரு நாள் தனியறையில் தங்க வேண்டும் எனவும், ஒன்றரை லட்சம் பணம் வழங்க வேண்டும் எனவும் மாணவியிடம் சிண்டிகேட் உறுப்பினர் சரவணன் செல்வம் தெரித்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த அனிதாராஜன், இது தொடர்பாக பல்கலை பதிவாளர், துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மற்றொரு சிண்டிகேட் உறுப்பினரான ஜெயக்குமார் என்பவரும், ’அட்ஜஸ்’ செய்து கொண்டு போகும்படி மாணவிக்கு அறிவுரை வழங்கியதாக கூறபடுகிறது. இதனால் ஆவேசமடைந்த மாணவி, சிண்டிகேட் உறுப்பினரின் நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர், கவர்னர், பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.

இவர்கள் சொல்லும்படியெல்லாம் நடந்தால்தான் பெண்கள் முனைவர் பட்டம் பெற முடியுமா என கண்ணீர் மல்க அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக் கழக துணைவேந்தர், தனக்கு முனைவர் பட்டம் பெற உதவிகள் செய்தாலும் 'வைவா' தேர்வின்போது பிரச்னை செய்துவிடுவேன் என பகிரங்கமாக சிண்டுகேட் உறுப்பினர் சரவண செல்வன் மிரட்டுவதாகவும், கணவரை இழந்தவர் என்பதால் தன்னை சரவண செல்வன் இப்படி நிர்பந்தப்படுத்துவதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சரவண செல்வத்திடம் படித்த முனைவர் பட்ட மாணவிகள் இவரது பாலியல் சீண்டல்கள் தாங்க முடியாமல் வேறு பேராசிரியர்களிடம் முனைவர் படிப்பிற்காக மாறிவிட்டதாகவும், ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதற்காக நடவடிக்கைக்கு சரவண செல்வம் உள்ளானவர் எனவும் மாணவி அனிதா ராஜன் தெரிவித்து உள்ளார்.

கணவரை இழந்த நிலையிலும் தனது படிப்பை தொடர நினைத்த மாணவிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமைக்கு, தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முனைவர் பட்ட மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-ச.ஜெ.ரவி
நன்றி - ஆ விகடன்

0 comments: