Friday, July 17, 2015

பரஞ்சோதி - சினிமா விமர்சனம்

நடிகர் : சாரதி
நடிகை :அன்சிபா
இயக்குனர் :கோபு பாலாஜி
இசை :சபேஷ் முரளி
ஓளிப்பதிவு :எஸ்.சந்திரசேகரன்
நாயகன் சாரதியின் அப்பா விஜயகுமார் சாதி வெறி பிடித்தவர். ஆனால், சாரதியோ, வேறு சாதியை சேர்ந்த சங்கர் குரு ராஜாவின் மகளான நாயகி அனிசிபாவை காதலிக்கிறார். சாதி மாறிய காதலுக்கு விஜயகுமார் மற்றும் சங்கர் குரு ராஜா இருவருமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒருநாள் திடீரென சாரதி, அன்சிபாவை திருமணம் செய்துகொள்கிறார்.

இதனால், இவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். சாரதி தனது மனைவியை கூட்டிக்கொண்டு, ஊருக்கு வெளியில் உள்ள தனது தாத்தாவின் நிலத்தில் குடிசை கட்டி புது வாழ்க்கையை ஆரம்பிரக்கிறார். இவர்களுக்கு நாயகனின் தாய்மாமனான கஞ்சா கருப்பு உதவியாக இருக்கிறார். 

இந்நிலையில், ஜாதி வெறியில் பலரை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு சென்ற போஸ் வெங்கட் ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார். இவர்தான் நாயகிக்கு உண்மையான அப்பா என்பது அப்போது தெரிய வருகிறது. அவருக்கு இந்த காதல் விஷயம் தெரியவரவே, கோபமடைகிறார். காதல் ஜோடியை கொன்று போட துடிக்கிறார்.

இறுதியில், காதல் ஜோடிகளை போஸ் வெங்கட் கொன்று பழியை தீர்த்துக் கொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

நாயகனாக நடித்திருக்கும் சாரதி, கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். முதல் படம் என்றாலும் அவர் முகத்தில் எந்தப் பயமும் தெரியவில்லை. நாயகியாக நடித்திருக்கும் அன்சிபா கிளாமரால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்தான் மலையாள ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்தவர். 

தாய் மாமனாக வரும் கஞ்சா கருப்பு, சாதி கட்சித் தொண்டராக வரும் போஸ் வெங்கட் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் மற்றும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் இரண்டுக்கும் இடையிலான அண்மைக்கால நிஜ ஜாதி மோதல்கள், கவுரவக் கொலைகளை சொல்ல நினைத்து இருக்கிறார் இயக்குனர் கோபு பாலாஜி. ஆனால் படம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டுமே என்ற பயத்தில் இரண்டு சாதிகளையும் சம அந்தஸ்துள்ள சாதிகள் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவர் சொல்ல வருவதை நாம உணர முடிவது அவருக்கான வெற்றி.

சபேஷ் முரளி இசையில் பாடல்கள் சுமார் ரகம். வெண்ணிலவே பாடல் இனிமை. ஒளிப்பதிவில் சந்திரசேகரன் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘பரஞ்சோதி’ காதல் சோதி.

0 comments: