Saturday, July 04, 2015

இளையராஜாவும் நல்லா இருந்த 4 பேரும் -மதன் கார்க்கி சிறப்பு பேட்டி

‘‘எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம்.
‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூறிவிட்டு, ‘‘வசனம் எழுதுவீங்களா?’’ என்று கேட்டார். செய்யலாமே, என்றேன். அடுத்த படத்தில் இணைவோம் என்றார். பிறகு ‘பாகுபலி’ தொடக்க நிலையில் இருந்தபோது ‘இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை. முழுவதும் கற்பனை’ என்று கதையைச் சொன்னார். அவரது எதிர்பார்ப்பையும் தேவையையும் புரிந்துகொண்டு எழுத ஆரம்பித்ததும் அவருக்கு என் எழுத்து பிடித்துப்போய்விட்டது.
‘பாகுபலி’ இரண்டாம் பாகத்திலும் எழுதுகிறீர்களா?
இது ஒரே கதைதான். அதை 3 மணி நேரத்துக்குள் சொல்ல முடியாது என்பதால்தான் இரண்டாம் பாகம் உருவானது. முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சில கேள்விகள் எழும். அந்தக் கேள்விக்கான விடைகள்தான் இரண்டாம் பாகத்தில் உள்ளன. அதன் 40 சதவீத எழுத்து மற்றும் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டன. அடுத்த ஆண்டு வெளியாகும்
‘பாகுபலி’ படத்துக்காக புதிய மொழி ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்களாமே?
படத்தில் ஆதிவாசி மக்கள் கூட்டம் படை எடுத்து வருவதுபோல சில காட்சிகள் வருகின்றன. அவர்கள் பேசுவதுபோல ஒரு புதிய மொழியை உருவாக்கலாமே என்ற எண்ணம் உருவானது. அதை இயக்குநரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார். புதிய ஒலியமைப்புடன் உருவாக்கிய அந்த மொழிக்கு ‘கிளிக்கி’ என்று பெயரும் வைத்தேன். இப்படியொரு முறையை ‘அவதார்’ உள்ளிட்ட சில ஆங்கிலப் படங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மென்பொருள் துணையுடன் நீங்கள் பாடல்கள் எழுதிவருவதாகச் சொல்கிறார்களே?
அப்பா பாட்டு எழுதிக்கொடுக்கிறார் என்றும், என் பாட்டை கம்ப்யூட்டர் எழுதுவதாகவும் என் மீது இப்போதும் குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. அப்பா எழுதிக்கொடுத்தால் நான் இந்நேரம் தேசிய விருது வாங்கியிருப்பேன். பாடலை எழுதும் கம்ப்யூட்டரை உருவாக்கியிருந்தால் நோபல் பரிசே வாங்கியிருப்பேன். தற்போதுள்ள டெக்னாலஜியை எனக்குத் துணையாக வைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியைத்தான் எல்லோரும் வேறு மாதிரி உணர்ந்துகொள்கிறார்கள்.
ஒரு வார்த்தைக்காக மண்டையை உடைத்துக்கொண்டு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்துக்கு மஞ்சம் என்று ஒரு வார்த்தை எழுதிவிட்டு அதற்கு எதுகை மோனை வார்த்தையை தேடிக்கொண்டிருக்கும்போது, இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் ஒரு வினாடியில் தமிழில் அதற்குப் பொருத்தமான வார்த்தைகளைக் கொட்டிவிட்டுப்போகும். அதிலிருந்து எடுத்து எழுதலாம். இதைத்தான் அந்த டெக்னாலஜி செய்யும். நேரத்தை எனது கருவிகள் மிச்சம் செய்து கொடுப்பதால் இதை உபயோகித்துவருகிறேன். அவ்வளவுதான்.
அப்பா வைரமுத்து உங்களது வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்?
கதை, பாடல்கள், எழுத்து இதிலெல்லாம் எனக்கு ஆர்வம் உள்ளது என்பதை ஒரு கணம்கூட அப்பா நினைத்துக்கூடப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. காரணம், நானும் பாடப் புத்தகங்களைத் தாண்டி எதையும் படித்ததில்லை. நான் கணினி சார்ந்து இயங்க வேண்டும் என்பது மட்டும்தான் அப்பாவின் விருப்பம். தம்பி கபிலன்தான் சின்ன வயதிலிருந்தே வாசிப்பு, எழுத்து என்று தீவிரமாக இருந்தான்.
அவன்தான் அதில் வருவான் என்று அவர் நம்பினார். ஒரு கட்டத்தில் இதுதான் சரியாக இருக்கும் என்று மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. அதனால்தான் அப்பாவின் சிபாரிசு இல்லாமல், அவருடைய பெயரை நானும் எங்கும் பயன்படுத்தாமல் வாய்ப்பு தேடிப் பெற்றேன். இப்போது என் பயணத்தைப் பார்த்து அப்பா மகிழ்ச்சி அடைகிறார்.
எப்போது இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றப்போகிறீர்கள்?
நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஆனால், அதில் அவருக்கு விருப்பம் இல்லை. ‘உன் சமையல் அறை’ படத்துக்குப் பாடல் வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் என்னிடம் கேட்டார். நானும் அதற்கான வேலைகளில் இறங்கினேன். நான்தான் பாடல் எழுதப்போகிறேன் என்றதும், ‘நான் இசையமைக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார். அதேபோல சமீபத்தில் ‘ருத்ரமாதேவி’ படத்தின் வசனம், பாடல்கள் எழுத கேட்டார்கள். வசனம் எழுத நேரம் வேண்டும். தற்போது அந்த சூழல் இல்லை. பாடல்கள் மட்டும் எழுதுகிறேன் என்று கூறினேன். ‘நீங்க பண்ண வேண்டாம்’ என்று ராஜா சார் கூறியதாக வந்து அவர்களே சொன்னார்கள். நான் அவருடன் பணியாற்ற விருப்பமாகத்தான் இருக்கிறேன். அப்பா மீது ராஜா சாருக்கு உள்ள கோபம் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கிறது.
பாடல், வசனம், அடுத்து நடிப்பா?
புகழ், பணம் எல்லாமும் அதிகம் ஈட்டும் துறைதான் நடிப்பு. அதன் பின்னால் போக எனக்கு விருப்பமில்லை. பல வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். . பாடல், வசனத்தை அடுத்து இப்போது கதை விவாதத்தில் ஈடுபட்டுவருகிறேன்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு இயக்கம் குறித்துப் படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அந்தப் படிப்பை முடித்துவிட்டு இங்கே உள்ள இயக்குநரிடம் ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த கையோடு சினிமா இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.


நன்றி- த இந்து

0 comments: