Tuesday, July 28, 2015

30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்

30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்
''என் பிள்ளை காலையில் கொடுக்கற உணவை முகம் சுளிக்காமல் சாப்பிடணும். ஸ்கூலுக்கு கொடுத்து விடறதையும் அழகா சாப்பிட்டு, சாயங்காலம் திரும்பி வரும்போது டிபன் பாக்ஸை காலி செய்துட்டு வரணும்...'' 
- திடீர் என்று கடவுள் கண்முன் தோன்றினால், இல்லத்தரசிகள் பலர் இதைத்தான் வரமாக கேட்பார்கள். காரணம், துறுதுறுப்பாகவும், புத்திசாலியாகவும் இருக்கும் இந்தக் காலத்து பிள்ளைகளை சாப்பாடு விஷயத்தில் திருப்திப்படுத்துவது அத்தனை சிரமம்! இங்கே, இல்லத்தரசிகளுக்கு உதவும் விதமாக 30 வகை  'பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச்’ ரெசிபிகளுடன் களம் இறங்கும் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன்,
''பேன் கேக், நட்ஸ் போளி, வெல்ல அப்பம், வெஜிடபிள் தோசை, சாண்ட்விச்கள், பாஸ்தா என்று விதம்விதமான ரெசிபிகளைக் கொடுத்திருக்கிறேன். இவை நிச்சயமாக உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும்'' என்று நம்பிக்கையூட்டுகிறார்.

நியூட்ரிஷியஸ் பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, சீவிய குடமிளகாய் - ஒரு கரண்டி, துருவிய பீட்ரூட் - ஒரு சின்ன கப், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவை சிறிதளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய், பீட்ரூட் சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும். பிசைந்த  மாவை சின்ன சின்னதாக, கொஞ்சம் திக்கான பூரிகளாக இடவும். ஒரு பூரி மேல் கொஞ்சம் காய்கறி கலவையை வைத்து, இன்னொரு பூரியை மேலே வைத்து, நன்றாக ஒட்டி கையால் ஒன்றாக சமப்படுத்தவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பூரிகளை பொரித்து எடுக்கவும்.

முள்ளங்கி சப்பாத்தி
தேவையானவை:  முள்ளங்கி - ஒன்று, கோதுமை மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கியை கழுவி, தோல் சீவி துருவி வைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, தேவையான தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து... துருவிய முள்ளங்கி, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். பிறகு மாவை 3 சப்பாத்தியாக செய்து ஒன்றின் மேல் ஒன்று வைத்து ஒன்றாக சுருட்டி வைக்கவும். அதை 4 பாகமாக பிரித்து, ஒவ்வொன்றையும் மீண்டும் சப்பாத்தி மாதிரி தேய்த்து, தவாவில் போட்டு நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இது லேயர் லேயராக நன்றாக வரும். சுவையும் சூப்பராக இருக்கும்.

 வெஜிடபிள் பால்
தேவையானவை: அரிசி - 2 கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவை போல உடைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து வதக்கி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதில் தேங்காய் துருவல், அரிசி ரவை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஆறியதும் சின்ன உருண்டைகளாக செய்து, ஆவியில் வேகவிடவும்.
இது கலர்ஃபுல் ஆகவும், சுவையாகவும் இருக்கும்.

வெல்ல அவல்
தேவையானவை:  கெட்டி அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு வெல்லத்தை சேர்த்து காயவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, பாகு வரும் வரையில் மீண்டும் கொதிக்கவிடவும். பாகு, தக்காளி பதம் (கையில் வைத்து உருட்டினால், தளதள என்றிருக்கும் பதம்) வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து அவலை சேர்க்கவும். பிறகு, நன்றாக கிளறி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, கடைசியாக நெய் விட்டு இறக்கவும்.

 பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை
தேவையானவை:  பாசிப்பருப்பு - 2 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், பொடித்த வேர்க்கடலை - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - கால் கப்,  நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைத்து, நீரை வடித்து, ஆவியில் வேகவிடவும். வெந்ததும் எடுத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, தேங்காய் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து, நெய் விட்டு உருண்டையாகப் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

 பேன் கேக்
தேவையானவை: கஞ்சி மாவு அல்லது கோதுமை மாவு - ஒரு கப், நறுக்கிய பீட்ரூட் அல்லது கேரட் - அரை கப், பால் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை, தேன் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பீட்ரூட் அல்லது கேரட்டை தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும். அதனுடன் கஞ்சி மாவு (அ) கோதுமை மாவு, பால், சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (இட்லி மாவு பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்). மாவை தவாவில் கனமான தோசை போல வார்த்து, மூடிவைக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு எடுக்கவும். அதன் மீது தேனைத் தடவி துண்டு போட்டு கொடுக்கவும். இதை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
விருப்பப்பட்டால், முட்டையை அடித்து அதனுடன் மாவைக் கலந்தும் செய்யலாம்.

 வெல்ல இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - முக்கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:  சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கொஞ்சம் கொதிக்கவிடவும் (பாகு வரக்கூடாது). பிறகு மாவில் சேர்க்கவும், பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, மாவுடன் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, இட்லித் தட்டில் மாவை விட்டு, அதன்மீது தேங்காய் துருவலை தூவி வேக வைத்து எடுக்கவும். குழந்தைகளின் மனதைக் கவரும் இட்லி இது.

 தேங்காய்  வெஜிடபிள் கொழுக்கட்டை
தேவையானவை: இட்லி அரிசி - 2 கப், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - அரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து  இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு நைஸாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். இத்துடன் மாவு, தேங்காய் பல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். வெந்ததும் ஆறவிட்டு, உருண்டை பிடித்து, ஆவியில் வேக வைக்கவும்.

 நட்ஸ் போளி
தேவையானவை: மைதா - ஒரு கப், பாதாம் - 10, முந்திரி - 10, அக்ரூட் - சிறிதளவு, பேரீச்சம்பழம் - 6, காய்ந்த திராட்சை - ஒரு சிறிய கப், ஏலக்காய் - 2, பிஸ்தா - சிறிதளவு, சாரைப் பருப்பு - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,  எண்ணெய் - கால் கப், நெய், உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை: பாதாம், முந்திரி, அக்ரூட், பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை, ஏலக்காய் -  பிஸ்தா, சாரை பருப்பு ஆகியவற்றை சுடுநீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். மைதா மாவில் கேசரி பவுடர், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஊறவிடவும். நட்ஸ் கலவையை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, அரைத்த விழுதை நன்றாக வதக்கி உருண்டைகளாக செய்து வைக்கவும். மைதா மாவை இலையில் தட்டி பூரண உருண்டையை வைத்து மூடி, போளிகளாக தட்டி, தவாவில் போட்டு, நெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

 வெல்ல அப்பம்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - முக்கால் கப், துருவிய வெல்லம் - ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 கப், துருவிய தேங்காய் - ஒரு கப்.
செய்முறை: வெல்லத்தை நன்றாக தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும் இறக்கி, வடிகட்டி வைக்கவும். ஆறியதும் கோதுமை மாவு, அரிசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக கலந்து வைக்கவும் (விருப்பப்பட்டால், மசித்த வாழைப்பழம் கொஞ்சம் சேர்க்கலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை குழிக் கரண்டியால் எடுத்து ஊற்றவும். அப்பம் நன்றாக 'புஸ்’ என்று வரும். திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

 செட் தோசை
தேவையானவை: பச்சரிசி  - 2 கப், அவல் - முக்கால் கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கடைந்த தயிர் - 2 கப்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, அவல், உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை நன்றாக கழுவி, தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, நைஸாக அரைத்து உப்பு சேர்க்கவும். தவாவை சூடாக்கி, மாவை கொஞ்சம் கனமாக தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். தோசைகளை இரண்டு இரண்டாக பரிமாறவும்.
இது பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். குருமா, சட்னி தொட்டு சாப்பிடலாம்.

 மசாலா சப்பாத்தி
தேவையானவை: சப்பாத்தி - 4, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், துருவிய சீஸ் - அரை கப், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சப்பாத்தியை சின்ன துண்டுகளாக செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். பிறகு பூண்டு, தக்காளி சேர்த்து சுருள வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். பிறகு, அதனுடன் சப்பாத்தியை சேர்த்து நன்றாக கொத்திவிடவும். கடைசியில் சீஸை சேர்த்து, கொத்தமல்லி தூவி ஒரு நிமிடம் மூடி வைத்து, பிறகு இறக்கவும்.

 தேங்காய் சேவை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப்,  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு கப் அரிசி மாவுக்கு இரண்டரை கப் என்ற அளவில் தண்ணீரை எடுத்து கடாயில் விட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கி அதில் அரிசி மாவை சேர்த்து, கொழுக்கட்டை மாவு பதத்துக்கு வரும் கிளறவும். மாவை சூடாக ஓமப்பொடி அச்சில் போட்டு, இட்லித் தட்டில் பிழிந்து வேக வைத்து எடுத்தால்... சேவை தயார். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும். இதனுடன் ஆறிய சேவை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வெண்ணெய் புட்டு
தேவையானவை:  புழுங்கலரிசி - 2 கப், வெல்லம் - ஒன்றே கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், முந்திரி - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். ஒரு கப் அரிசி மாவுக்கு ஒரு கப் என்ற அளவில் நீரை எடுத்து கொதிக்க வைத்து, மாவை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மாவு வெந்ததும் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும். வெல்லத்தை பாகு வைத்து (மிகவும் கெட்டியாக இல்லாத பதத்தில்) மாவுடன் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, தேங்காய் துருவலை வறுத்து அதனுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரையில் கிளறவும். வெண்ணெய் போல் திரண்டு வரும்போது தட்டில் போட்டு துண்டுகளாக்கவும்.

 ஆலு டிக்கி
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், வேர்கடலை பொடி - கால் கப், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை தண்ணீர் விடாமல், குக்கரில் வேக வைத்து தோல் உரித்து வைக்கவும். பிறகு, நன்றாக மசித்து அதனுடன் சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து  கொஞ்சம் எடுத்து விரும்பிய வடிவில் தட்டி, வேர்க்கடலை பொடியில் புரட்டவும். தவாவில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வைக்கவும். பிறகு, திருப்பிப் போட்டு, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். இதற்கு தக்காளி சாஸ் நல்ல காம்பினேஷன்.

 ஜவ்வரிசி வடை
தேவையானவை:  ஜவ்வரிசி - ஒரு கப், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,  பொட்டுக்கடலை பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை  நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொட்டுக்கடலை பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை அரைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த மாவை வடைகளாக  தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

 ஸ்பைஸி பிரெட் ரோல்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் - தலா ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  உருளைக்கிழங்கு, கேரட்டை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். பிறகு அதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். பிரெட்டை ஒரு செகண்ட் தண்ணீரில் நனைத்து பிழிந்து காய்கறி கலவையை அதில் வைத்து, நீளவாக்கில் உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.

 ஃப்ரைடு ஊத்தப்பம்
தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு, அவல் - தலா ஒரு கைப்பிடி அளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,  வெங்காயம், கேரட் - தலா ஒன்று, நறுக்கிய குடமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், அவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். இதை மூன்று மணிநேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவை தவாவில் கனமான ஊத்தப்பமாக ஊற்றி மூடி வைத்து, வேகவிடவும். வெந்ததும் துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய குடமிளகாய், கேரட், கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இட்லி மிளகாய்ப்பொடி,  பெருங்காயத்தூள். உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, பிறகு தோசைத் துண்டுகளை சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

 சப்பாத்தி  நூடுல்ஸ் ரோல்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், நூடுல்ஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப், பால் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும். பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும். தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

 இட்லி  பனீர் மசாலா ஃப்ரை
தேவையானவை:  இட்லி - 4, பனீர் - ஒரு கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  - தலா ஒன்று, இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நல்லெண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  இட்லியை சதுரமாக 'கட்’ செய்து வைக்கவும். பனீரையும் அதே போல் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு முதலில் வெங்காயத்தை வதக்கி, பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பனீரை வறுத்து எடுக்கவும். இட்லியையும் ஃப்ரை செய்யவும். பிறகு இரண்டையும் சேர்த்து... உப்பு, வெங்காயம் - தக்காளி கலவை, இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

 புதினா  சீஸ் சாண்ட்விச்
தேவையானவை: புதினா - ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சீஸ் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெள்ளரிக்காய் துண்டு- 2, பிரெட் -  4 ஸ்லைஸ், உப்பு - சிறிதளவு.
செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். உப்பு ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய், சிறிதளவு புதினா விழுதை தடவி, சீஸ் ஒரு ஸ்லைஸ் வைத்து அதற்கு மேல் வெள்ளரிக்காய் துண்டு, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து, டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். இதேபோல மற்ற பிரெட் ஸ்லைஸ்களையும் செய்துகொள்ளவும்

 சாக்லேட் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் பார் - ஒன்று.
செய்முறை: இரண்டு ஸ்லைஸ் பிரெட்டிலும் வெண்ணெயை தடவி வைக்கவும். சாக்லேட்டை இரண்டாக செய்து, பிறகு ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.

 வெள்ளை அப்பம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - அரை கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நைஸாக அரைக்கவும். கொஞ்சம் புளித்ததும் கொத்தமல்லி, பெருங்காயம் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு விட்டு, காய்ந்ததும் குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.

 மேக்ரோனி மசாலா
தேவையானவை: மேக்ரோனி (டிபர்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மேக்ரோனியை ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியதும் நறுக்கிய குடமிளகாய், கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். பிறகு, வேக வைத்த மேக்ரோனி, உப்பு, தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.

 வெஜிடபிள் தோசை
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், நறுக்கிய மஞ்சள் நிற குடமிளகாய், சிவப்பு நிற குடமிளகாய், பச்சை குடமிளகாய் - தலா கால் கப், பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், துருவிய சீஸ் - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: தவாவில் தோசை மாவை கொஞ்சம் கனமாக ஊற்றவும். பிறகு காய்கறிகளை தோசை மேல் பரவலாக வைத்து, சீஸை மேலாக தூவிவிடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைத்து செய்யவும்). ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே எடுத்து பரிமாறவும்.

 பனீர் வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: துருவிய பனீர் - ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் - ஒன்று, துருவிய பீட்ரூட் - கால் கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் - 4, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் ஸ்லைஸில் வெண்ணெயை தடவி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸ் நடுவில் காய்கறி கலவை வைத்து, அதற்கு மேல் பனீரை வைத்து இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, டோஸ்ட் செய்யவும். மீதம் இருக்கும் 2 பிரெட் ஸ்லைஸிலும் இதே போல் செய்துகொள்ளவும்.

 வெஜ் பாஸ்தா
தேவையானவை: பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், குடமிளகாய் - அரை கப்,  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு: மைதா - கால் கப், பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சேர்த்து, மைதா மாவை வறுத்துக் கொள்ளவும். பிறகு பாலை விட்டு நன்றாக கிளறி வைக்கவும். இதுதான் வொயிட் சாஸ். பாஸ்தாவை ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைத்து, குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த பாஸ்தா, வெள்ளை சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

 குடமிளகாய் ரைஸ்
தேவையானவை:  பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப், சாதம் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு  - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து... கீறிய பச்சை மிளகாய், குடமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு, சாதம்,  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

 ஸ்பெகடி
தேவையானவை:  ஸ்பெகடி (குச்சி போல் இருக்கும் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் பாக்கெட், பேஸிக் பவுடர் - அரை டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பாஸ்தா சாஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 4 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - அரை கப், ஆலிவ் ஆயில் (அ) சூரியகாந்தி எண்ணெய் - 2 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஸ்பெகடியை உடைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும். கடாயில் எண்ணெய் விட்டு பேஸிக் பவுடர், பூண்டு, மிளகுத்தூள், பாஸ்தா சாஸ் சேர்த்து புரட்டி, வேக வைத்த ஸ்பெகடியை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியில் சீஸ் சேர்த்து இறக்கவும்.

 டோக்ளா
தேவையானவை:  கடலை மாவு - ஒரு கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - மூன்றரை டீஸ்பூன், ஈனோ - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி -  பச்சை மிளகாய் அரைத்த விழுது -  ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, ரவை, சர்க்கரை, ஈனோ, இஞ்சி - பச்சைமிளகாய் விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை அதில் விட்டு குக்கரில் வைக்கவும். 15 நிமிஷம் கழித்து எடுத்து ஆறியதும் 'கட்’ செய்து... கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தொகுப்பு: பத்மினி
படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி

ஆச்சி கிச்சன் ராணி
ராகி ரவா கொழுக்கட்டை
தேவையானவை: ஆச்சி கேழ்வரகு மாவு - ஒரு கப், ஆச்சி ரவா இட்லி மிக்ஸ் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கப், கேரட் துருவல், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். அதற்குள் ஆச்சி கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து... அத்துடன் உப்பு சேர்த்து, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, சோம்புத்தூள் சேர்க்கவும். அந்தக் கலவையை ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் சேர்த்து, கெட்டியாகக் கலந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவைத்து (பத்து நிமிடத்தில் வெந்துவிடும்) இறக்கவும். சுடச்சுட பரிமாறவும்.
மாவை பால்ஸ்களாகவும் உருட்டி வேக வைக்கலாம். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்
- பூங்குழலி நித்யகுமார், ஈக்காட்டுதாங்கல்
படம்: ஆ.முத்துக்குமார்


நன்றி - விகடன்

0 comments: