Friday, July 17, 2015

டெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (2015) -சினிமா விமர்சனம்

நடிகர் : அர்னால்டு
நடிகை :எமிலியா கிளார்க்
இயக்குனர் :ஆலன் டெய்லர்
இசை :லார்ன் பால்பி
ஓளிப்பதிவு :கிராமர் மோர்கெந்தவு
டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் ஹாலிவுட்டில் மிக பிரபலமான டெர்மினேட்டர் சீரிஸின் ஐந்தாவது பாகமாகும். பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் ஸ்கை டான்ஸ் புரொடக்சன்ஸ் இணைந்து வெளியிட்டிருக்கும் இப்படத்தை ஆலன் டெய்லர் இயக்கியிருக்கிறார். அர்னால்டு ஸ்வாஸ்னேகர், ஜசோன் கிளார்க், எமிலியா கிளார்க், ஜெய் கோர்ட்னி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

2029 -ல் நடப்பதுபோல படமாக்கப்பட்டிருக்கும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் -ல், ஸ்கைநெட் என்னும் செயற்கை நுண்ணறிவு கணினி புரோகிராம் தனது திறனாய்வு சக்தியை பயன்படுத்தி மனிதர்களை முற்றிலுமாக அழிக்க பல திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 

மக்களை காக்கும் தலைவராக இருக்கும் ஜான் கானர் (ஜசோன் கிளார்க்), ஸ்கைநெட்டை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய தாக்குதல் சக்தியை உபயோகிக்கிறார். ஜான் கானரின் தன்னை அழிப்பதற்கு முன்,  ஸ்கைநெட் ஒரு டைம் மெஷினை ஆக்டிவேட் செய்து ஜான் கானரின் தாயான சாரா கானரை கொலை செய்ய 1984 ஆம் ஆண்டிற்கு, ஒருவகையான டி 800 டெர்மினேட்டரை அனுப்பி வைக்கிறது. 

இதனை அறியும் ஜான் கானர் தனது நம்பிக்கைக்குரிய கைல் ரீஸுடன் தனது தாயை காப்பாற்ற டைம் மெஷினில் 1984 ஆம் ஆண்டிற்கு செல்ல முன்வருகிறார். 1984-ஆம் ஆண்டிற்கு பயணிக்கும்போது, 2017 -ல் ஜான் தாக்கப்படுவதை காணும் கைல், அவனுடைய இளம் வயதில் நடந்த சம்பவங்களை நினைவில் வைத்து கொள்கிறார்.  

ஸ்கை நெட்டால் ஜான் கானரின் தாய் சாராவை கொல்ல அனுப்பப்பட்ட டி- 800 ரக டெர்மினேட்டர் 1984 ஆம் ஆண்டை அடைகிறது. அதனை சாராவும், கார்டியனும் (அர்னால்டு சுவாரஸ்னேகர்) செயலிழக்க செய்கின்றனர். கார்டியன் (அர்னால்டு ஸ்வாஸ்னேகர்) , சாராவிற்கு பாதுகாப்பு அளிக்க அவரின் 9 வது வயதில் அனுப்பப்பட்ட டெர்மினேட்டர் என்பது பின்னர் தெரியவருகிறது. 

கைல் ரீஸும் 1984 ஆம் ஆண்டிற்கு வந்த பிறகு, டி - 1000 எனும் டெர்மினேட்டரால் தாக்கப்படுகிறார். சாராவும், கார்டியனும் அதனை ஆசிட் மூலம் அழிக்கின்றனர். பின்னர் அவர்கள் இருவரும் ஸ்கைநெட் தயார் செய்ததுபோல ஒரு டைம் மெஷினை தயார் செய்து உள்ளதாகவும், அதனை பயன்படுத்தி ஸ்கைநெட்டின்  ஆரம்பகால தொழில்நுட்ப வளர்ச்சியை அழிக்க 1997 ஆம் ஆண்டிற்கு செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

இந்த திட்டத்தில் சாரா, கார்டியன், கைல் வெற்றி பெற்றார்களா? வருங்காலத்தில் இருக்கும் ஜானின் நிலை என்ன? ஸ்கைநெட்டின் அதி நவீன அழிக்கும் திறனால் மனிதர்களுக்கு ஆபத்து நேர்ந்ததா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் திரைக்கதையை அமைத்துள்ளார்.   

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தில் கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பான காட்சிகள் குறைவாக இருப்பதால் பார்வையாளர்களால் படத்தை முழு கவனத்துடன் ரசிக்க முடியவில்லை. 

வெவ்வேறு டெர்மினேட்டர்களின் வடிவமைப்பு, டைம் மெஷின் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் துணையோடு இயக்குனர் திறம்பட படமாக்கியிருக்கிறார். அர்னால்டின் அதிரடியில் சண்டை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

ஆனால், திரைக்கதையில் பல காட்சிகள் கடந்த காலத்தில் நடப்பதாக உள்ளதால் பார்வையாளர்களுக்கு அவ்வபோது காட்சியமைப்பில் குழப்பம் ஏற்படுகிறது. ஸ்கைநெட் அனுப்பும் டெர்மினேட்டர்களின் எண்ணிக்கையிலும் குழப்பம் நிலவுகிறது. 

படத்தில் முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்திருக்கும் அர்னால்டு ஸ்வாஸ்னேகர், ஜசோன் கிளார்க், எமிலியா கிளார்க், ஜெய் கோர்ட்னி ஆகியோர் அவரவர் கதாப்பாத்திரங்களை உணர்ந்து இயல்பான மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தில் அர்னால்டின் அசைக்க முடியாத திரைத்தோற்றம் இருந்தாலும் இந்த பாகம் முன்பு வந்த பாகங்களைவிட சற்று மெதுவாகவே நகர்வதாக கருத்து நிலவுகிறது. 

மொத்தத்தில் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ விறுவிறுப்பில்லை

நன்றி   மாலைமலர்

0 comments: