Tuesday, July 28, 2015

கூடங்குளம்: அணு அரசியல்! (மினி தொடர்: பகுதி-1)

ண்மை எப்போதும் எளிமையில் இருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல! - சர். ஐசக் நியூட்டன்.


மனிதனின் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஏதோவொரு நுண் அரசியல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தனி மனிதர்கள், குழுக்கள், இனங்கள் என அனைத்து மட்டத்தையும் அரசியல் ஆட்டிப்படைத்து வருகிறது. சாதாரண கண்களுக்குப் புலப்படாத, மிக நுண்ணிய அணுவிலும் அரசியல் புகுந்து, உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அணு சக்தி குறித்த ஆய்வை யார் செய்ய வேண்டும் என்பதைக்கூட சர்வதேச நாடுகள் தீர்மானிப்பதில் இருந்தே இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடியும்.

அணு சக்தி என்பது எளிமையானது, சிக்கனமானது, பாதுகாப்பானது, மொத்தத்தில் மக்களுக்கானது என்றால் அதில் எதிர் கருத்துக்கள் ஏற்படுவது எதனால்? அணுவை பிளந்து மின்சக்தியை உருவாக்கும் அணு உலை நிலையங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்த அணு உலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் பலன் மக்களுக்கு நேரடியாகவே கிடைக்கத்தான் செய்கிறது. இப்படி மக்களுக்கு பயன் தரக்கூடிய ஒரு சக்தியை எல்லோரும் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?


அப்படியானால், அணு சக்தி கொள்கையை உலக நாடுகள் வகுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? வடகொரியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் அணு ஆய்வுகளை செய்யவிடாமல் தடுப்பதன் மர்மம் என்னவாக இருக்க முடியும்? அணுசக்தி துறையில் உயர்ந்து நிற்கும் நாடுகளை மட்டும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற வைப்பதன் பின்னணியில் இருக்கும் அரசியல் எது? இப்படி விடை தெரியாத கேள்விகள் ஏராளம்.
உலகம் முழுவதும் 437 அணு உலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இதன் மூலமாக 3,80,250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, 66 அணு உலைகள் விரைவில் செயல்படும் வகையில், அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 99 அணு உலைகள் இயங்குகின்றன. இதன்மூலமாக, அந்நாடு 98,792 மெகாவாட் மின்சக்தியை இப்போதும் உற்பத்தி செய்துகொண்டு இருக்கிறது.



ஃபிரான்ஸ் 58 அணு உலைகளையும், ஜப்பான் 43 அணு உலைகளையும், ரஷ்யா 34 அணு உலைகளையும், சீனா 26 அணு உலைகளையும் கனடா 19 அணு உலைகளையும் கொண்டிருக்கின்றன. பக்கத்து நாடான பாகிஸ்தான் 3 அணு உலைகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா 21 அணு உலைகளில் இருந்து 5302 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 29 நாடுகள் அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தியை பெற்று வருகின்றன. இது தவிர, பல்வேறு நாடுகளில் இப்போதும் அணு சக்தித் துறை சார்ந்த ஆய்வுகள் மிகத்தீவிரமாக நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.  



இப்படி அனைத்து நாடுகளும் அணுசக்தி துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டி வரும் சூழலில், அதற்கான எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன. எல்ல நாடுகளின் ஆட்சியாளர்களும் அணு சக்தி துறையை மேம்படுத்த கூடுதல் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதற்கு சற்றும் குறைவு இல்லாமல் அணு சக்தி எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழலில் அறிஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து அணு உலைகளை மூடக் கோரி போராடி வருகிறார்கள்.



அணு சக்திக்கு ஆதரவும் எதிர்ப்பும் பலமாக இருப்பது ஏன்? அணு சக்தி ஆக்கபூர்வமானது என்றால் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? உலகின் பல நாடுகள் மக்களின் தீவிர எதிர்ப்புக்கு பயந்து அல்லது கொள்கை முடிவை வகுத்து அணு உலைகளை மூடிக்கொண்டு இருக்கின்றனவே? வளர்ச்சி அடைந்த நாடுகள் அணு உலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதற்கு முடிவு செய்திருக்கும் சூழலில், மூன்றாம் உலக நாடுகள் அணு உலைகளை அதிகமாக தொடங்க முடிவு செய்வது எதற்காக? வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவும் மூன்றாம் உலக நாடுகளில் அணு உலைகளை அமைத்து கொடுக்க ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?
அணு உலைகளை படிப்படியாக மூடிவிட்டு,  மாற்று மின்சக்தி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என தங்கள் மக்கள் மீது அக்கறை காட்டும் சில நாடுகள்,  அடுத்த நாடுகளில் அணு உலைகளை அமைக்க முழு ஒத்துழைப்பையும் தொழில் நுட்பத்தையும் கொடுத்து உதவுகின்றன. ‘அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி... தனக்கு வந்தால் ரத்தம்..!’ என்கிற மனநிலையில் வளர்ச்சி அடைந்த நாடுகள் செயல்படுவதன் பின்னணியில் இருப்பது அரசியல்... 



சாதாரண நாடுகளுக்கு உள்ளேயும் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தி வரும் சர்வதேச அரசியல் பற்றி அறிந்து கொள்ளாமல் அணு சக்தி நல்லதா, கெட்டதா என்கிற விவாதம் முழுமை பெறாது. இந்தியாவிலும் அணு உலைகளுக்கு எதிராக கலகக்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டம் இது! குறிப்பாக, கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.

இந்தியாவில் அணு சக்தி குறித்த மறு விவாதத்தை தூண்டி இருக்கும் இந்த போராட்டம் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்...

- அரசியல் அறிவோம்



- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

நன்றி -விகடன்

0 comments: