Sunday, April 26, 2015

NOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)

அவர்கள் அவரிடமிருந்து அனைத்தையும் பறித்தார்கள். ஆனால் அவரது கனவை மட்டும் அவர்களால் தொட இயலவில்லை. அவரது அனைத்து உடைமைகளையும் உடைத்து எறிந்தார்கள். ஆனால் அவரது ஆற்றலை அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அவர் அயர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டினா நோபிள்.
கிறிஸ்டினா நோபிள் குழந்தைகள் அறக்கட்டளையை நிறுவி சேவையாற்றும் அவருடைய உண்மைக் கதைதான் நோபிள் எனும் இங்கிலாந்து / அயர்லாந்து திரைப்படம். வறுமையான குடும்பத்தில் பிறந்தார் நோபிள். தந்தை குடிகாரர். தாய் நோயுற்றவள். துரதிர்ஷ்டமான சம்பவங்கள் நிறைந்தது அவரது குழந்தைப் பருவம். தாய் மரணத்துக்குப் பின்னர் உடன்பிறந்தவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு நோபிளுக்கு வந்தது.
ஏழ்மையான சூழலில் அயர்லாந்தின் குடிசை ஒன்றில் வாழ்ந்துவந்த நோபிள், கம்யூனிச நாடான வியட்நாமின் நகரத்துக்கு வந்தார். தனது வாழ்வைத் துயரத்திலிருந்து மீட்கக் கடுமையாகப் போராடினார். தந்தையிடமிருந்து பிரிய நேர்ந்தது. பாலியல் வல்லுறவுக்கு ஆளானார். அதனால் விரும்பம் இல்லாத கர்ப்பம் ஏற்பட்டது. தனக்குப் பிறந்த மகனை விட்டும் பிரிய நேரிட்டது. இப்படி அடுக்கடுக்கான பல சோதனைகள் என வாழ்வு அவரைச் சகல திசைகளிலும் புரட்டியெடுத்தது.
அவரது உறுதியும் துணிச்சலும் எந்தத் துன்பத்தையும் எதிர்கொண்டு சமாளிக்கும் தைரியமும் துயரத்தைத் துரத்தின. துன்பச் சகதியிலிருந்து மீண்டார். தான் மீண்டதுடன் நின்றுவிடவில்லை அவர். தன்னைப் போல் துயரப்படும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கத்தில் விளிம்பு நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கான அறக்கட்டளையை நிறுவினார்.
இந்தக் கதையை நேரிடையாகச் சொல்லாமல் ஃப்ளாஷ்பேக் உத்தியைக் கையாண்டு, முன் பின்னாக நகர்த்தி, நோபிளின் வாழ்வை ஒரு சுவாரஸ்யமான சினிமாவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீபன் பிராட்லே. நோபிள் வேடமேற்றிருக்கிறார் பிரபல நடிகை டைர்ட்ரே ஓ கனே.
கடந்த ஆண்டு, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சாந்தாபார்பரா சர்வதேசத் திரைப்பட விழாவில், 2014 ஜனவரி 31 அன்று இத்திரைப்படம் முதலில் திரையிடப்பட்டது. சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் பரிசையும் வென்றது. இது தவிர்த்து அமெரிக்காவில் நடைபெற்ற வேறு சில திரைப்பட விழாக்களிலும் பரிசுகளை வென்றுள்ளது இப்படம்.
பின்னர் அயர்லாந்தில் கடந்த வருடம் செப்டம்பர் 19-ல் வெளியானது. பார்வையாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரது பலத்த வரவேற்பைப் பெற்ற இப்படம் வரும் மே 8 அன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வியட்நாமின் இன்னொரு முகத்தைப் பார்க்க அமெரிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


நன்றி - த இந்து

0 comments: