Monday, April 20, 2015

திரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)

இன்றைய வாழ்வு தரும் பார்வை, சுதந்திர உணர்வு ஆகியவற்றால் உறவின் வரையறைகளை மாற்றத் துடிக்கிறது இளைஞர்களின் மனம். இதைப் பற்றிப் பேசும் படமான ‘ஓ காதல் கண்மணி’ கல்யாணம் என்னும் கால்கட்டு இல்லாமலேயே காதல் வளர்ந்து நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஆதி (துல்கர் சல்மான்), தாரா (நித்யா மேனன்) இருவரும் தனித்தன்மையை யும் சுதந்திர உணர்வையும் இழக்க விரும்பாத காதலர்கள். முதிய ஜோடியான கணபதி (பிரகாஷ் ராஜ்), பவானி (லீலா சாம்சன்) வீட்டில் தங்கியிருக்கும் துல்கர், அங்கேயே நித்யாவையும் கூட்டிவந்துவிடுகிறார்.
மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீலாவைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். இளம் ஜோடியின் வாழ்வில் ஏற்படும் சலனங்களில் இவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
திருமணம் தவிர்த்த வாழ்க்கையை விரும்பும் காதலர்களைத் திருமணத்தை நோக்கித் தள்ள அவர்களது குடும்பங் கள் செய்யும் முயற்சிகள் தோல்வி யடைகின்றன. ஆனால் தொழில் நிமித்தமாக ஏற்படும் பிரிவால் வரும் வேதனை அவர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யவைக்கிறது. அதீத மான அன்புக்கும் சுதந்திர உணர்வுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் எது வெல்கிறது என்ற கேள்விக்கான பதிலாக விரிகிறது படம்.
படம் முழுவதும் இளமைத் துள்ள லின் உற்சாக அதிர்வை உணர முடி கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, மணிரத்னத்தின் வசனங்கள், காட்சி யமைப்புகள், பி.சி. ராம் செதுக்கி யுள்ள ஒளி-நிழல் சித்திரங்கள் ஆகியவை இளமையின் உற்சாகத்தையும் அனை வருக்குமான அழகியலையும் ரசனை யோடு முன்வைக்கின்றன. லீலா சாம்சனிடம் நித்யா மேனன் பாடிக் காட்டும் இடத்தில் இயக்குநர், இசை யமைப்பாளர், பாடலாசிரியர் வைர முத்து ஆகிய மூவரும் இணைந்து இனிமை யான அனுபவத்தை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். நாடகத்தன்மை யைத் தாண்டியும் அந்தக் காட்சி நம்மை ரசிக்கவைக்கிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரஹ்மான் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும் பின்னணி இசை கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது.
அகமதாபாதில் இஸ்லாமியக் கட்டிடக் கலையைப் பார்வையிடும் காட்சி அற்புதமானது. கம்பீரமான அந்தக் கட்டிடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் மனதில் ஆழமான சலனங்களை ஏற்படுத்துகின்றன.
காதலை வெளிப்படுத்தும் காட்சி களில் இளமையும் ரசனையும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊரி லிருந்து அண்ணன் குடும்பம் வரும் சமயத்தில் துல்கருக்கு ஏற்படும் பதற்றத்தை வைத்து நித்யா மேனன் விளையாடும் இடம் அழகு. பேருந்து, ரயில் பயணங்களில் பொங்கி வழியும் காதல் உணர்வுகளும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சின்னச் சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளன. காதல் வளரும் விதம் இயல்பாக இல்லை என்றாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதத்தில் காதல் காட்சிகள் உள்ளன.
காதலர்களின் பிரிவுக்கான கார ணம், மனம் மாறுவதற்கான சூழல் ஆகியவற்றில் புதிதாக எதுவும் இல்லை. முக்கியப் பிரச்சினைக்கு வருவதற்குத் திரைக்கதை ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வதில் இரண்டாம் பாதியில் படம் மந்தமாகிறது. காதலின் ஈரத்தையும் காதலுக்குள் முளைக்கும் சண்டையையும் சமாதானத்தையும் சொல்லும் காட்சிகள் கடைசிவரை திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.
படத்தின் முக்கியமான பிரச்சினைகள் இவை அல்ல. மணிரத்னம் சமகாலப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுக் கிறார். அதைப் பெருமளவில் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்துடன் சித் தரிக்கிறார். முரண்பாட்டை உருவாக்கி, வலுவான கதை முடிச்சாக மாற்றுகிறார். இந்த முடிச்சை அவிழ்க்கும் சவாலை எதிர்கொள்வதில் பலவீனமாக வெளிப் படுகிறார். புதியதொரு கேள்விக்குப் புதியதொரு பதில் இல்லை. பார்வை யாளர்களின் கற்பனைக்கு இடம் தரும் முடிவாகவும் அமையவில்லை. பழைய பதிலைத் தருவதில் தவ றில்லை. அந்தப் பதில் பாத்திரங்களின் அனுபவம் மூலம் வெளிப்படும் பதிலாக இருக்க வேண்டும். மாறாக, செயற்கையாக முன்வைக்கப்படும் பதிலாக இருக்கிறது. இதுதான் படத்தின் பலவீனம்.
மணிரத்னத்துக்கே உரிய ஒப்பனை களை மீறி வசனங்கள் பல இடங்களில் இயல்பாக இருக்கின்றன. “ஒரு சர்டிஃபிகேட் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?” என்பன போன்ற கூர்மையான வசனங்களும் உள்ளன. திருமண பந்தத்தைத் தவிர்ப்பதற்கான காரணங்களைச் சொல்லியிருப்பது போலவே, திருமணம் தவிர்த்த வாழ்க்கை யில் இருவரும் ஏற்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் வசனங்கள் சொல்கின்றன.
ரசனையும் அலட்டிக்கொள்ளாத தன்மையும் கொண்ட பாத்திரத்தில் துல்கர் சல்மான் கச்சிதமாகப் பொருந்து கிறார். படம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விதமான உணர்ச்சிகளைக் காட்ட வேண்டிய பாத்திரம் இவருக்கு. கடைசிக் காட்சியில் மட்டும் மாறுபட்ட நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்கிறது. நித்யா மேனனின் ‘துறுதுறு’ தோற்றமும் துள்ளல் நடிப்பும் படத்தின் சிறப்பம்சம். காதலின் வேகம், செல்லக் கோபம், சோகம் என எல்லா உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். பிரகாஷ் ராஜும், லீலா சாம்சனும் படத் துக்குக் கூடுதல் பரிமாணத்தை வழங்குகிறார்கள்.
இளமைத் துள்ளல் படத்தின் மிகப் பெரிய பலம். எடுத்துக்கொண்ட பிரச்சினையைக் கையாளும் விதம் பலவீனம்.


0 comments: