Wednesday, April 01, 2015

கொம்பன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு: ஓய்வு பெற்ற நீதிபதிகள் பரபரப்பு அறிக்கை தாக்கல்

கொம்பன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்துக்கு தடை கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கொம்பன் படம் வெளியானால் தென் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் என்றும், எனவே, ஏப். 2-ல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கொம்பன் திரைப்படத்தை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் வழக்கறிஞர்கள் பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜரானார். அவரது தரப்பு வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, எங்களை 3 நிமிடங்கள் மட்டுமே படத்தை பார்க்கவிட்டனர்.
அந்த 3 நிமிடத்திலும் ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்தன. படத்துக்கு தணிக்கை வாரியம் விடுமுறை நாளில் சான்றிதழ் வழங்கியது தவறு. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றனர்.
தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, ஓய்வு பெற்ற நீதிபதிகளை படத்தை பார்க்கவிடாமல் மனுதாரர் தரப்பினர் அநாகரீகமாக நடந்து கொண்டனர். இதனால் நீதிபதிகள் படத்தை முழுமையாக பார்க்காமல் வெளியேறி விட்டனர் என்றார்.
இயக்குநர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி, தணிக்கை வாரியம் படத்தை முழுமையாக பார்த்த பிறகே சான்றிதழ் வழங்கியுள்ளது. மனுதாரர் தரப்பினரோ, நீதிபதிகளோ படத்தை முழுமையாக பார்க்கவில்லை. கதை, கதாபாத்திரங்கள் கற்பனையானது என திரையிட்ட பிறகே படம் தொடங்குகிறது என்றார்.
தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் லட்சுமணன் வாதிடும்போது, சட்டத்துக்கு உட்பட்டுதான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து, கொம்பன் வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக, சென்னையில் கொம்பன் படம் பார்க்கச் சென்றபோது நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரவிராஜபாண்டியன், ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் ஆகியோர் பேக்ஸ் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
மோசமான சூழல்
மதுரையில் நேற்று கே.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் திரையுலகில் ஜாதிய வன்முறையுடன் படம் எடுப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் மோசமான சூழல் நிலவி வருகிறது. கொம்பன் படத்தை 3 நிமிடங்கள்தான் பார்க்க அனுமதித்தனர்.
அந்த 3 நிமிடத்திலும் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன. இதனால்தான் அப்படத்தை சீராய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியம் அனுப்பியது.
தணிக்கை வாரிய உறுப்பினர்கள் 11 பேரில் 2 பேர் படம் வெளியிடத் தகுதியற்றது என்றும், 3 பேர் பெரியவர்கள் மட்டும் பார்க்கக் கூடியது என்றும், 3 பேர் யாரும் பார்க்க முடியாத படம் என்றும் கூறியுள்ளனர்.
இதிலிருந்து அப்படத்தில் எந்த அளவு ஆட்சேபகரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால்தான், படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார்.


நன்றி  -த  இந்து

0 comments: