Thursday, April 23, 2015

தனுஷ் ராசி ஆனது எப்படி ?ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட்டி

‘வை ராஜா வை' கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த்
‘வை ராஜா வை' கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த்
‘நான் இதுவரை நடித்த படங்களைவிட கொஞ்சம் வித்தியாசமானது ‘வை ராஜா வை'. நாயகன் - நாயகி காதல், காதலில் வரும் பிரச்சினை என்று படத்தின் கதை வழக்கம் போல நகராது.
நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து தமிழில் இந்த மாதிரி யான கதைக்களத்தில் வெளிவரும் முதல் படம் என்று நினைக்கிறேன்’’ என்று உற்சாகமாகத் தொடங்குகிறார் சென்னைப் பொண்ணு ப்ரியா ஆனந்த்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்தது எப்படி இருந்தது?
பார்க்கத்தான் அவங்க அமைதி. படப்பிடிப்பு தளத்தில் வந்து பாருங்கள். வேலையில் கரெக்டா இருப்பார். படப்பிடிப்பு படுவேகமாக போகும். யாரும் அதிகமாக பேச மாட்டாங்க. காட்சி நினைத்த மாதிரி வரும் வரை ஐஸ்வர்யா தனுஷ் விடமாட்டார்.
நான் படப்பிடிப்பு தளத்தில் மிக அமைதியாக யாரையும் கிண்டல் பண்ணாமல் நடித்த முதல் படம் இதுதான். இதுவரை நான் பார்த்து பழகிய பெண் இயக்குநர்களில் மிகவும் வித்தியாசமானவர் ஐஸ்வர்யா தனுஷ்.
தனுஷ் தயாரிப்பு, ஐஸ்வர்யா இயக்கம் என ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமாக ஆகிவிட்டீர்கள் போல?
அப்படியெல்லாம் இல்லை. நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை. ‘எதிர் நீச்சல்’ படத்தில் தமிழ் பேசுற பொண்ணுதான் நாயகியாக வேண்டும் என்றார்கள். அந்த வாய்ப்பு கிடைத்தது. அதுபோலத்தான் ‘வை ராஜா வை’ படத்துக்கும் நடந்தது. நல்ல சென்னை தமிழ் பேசக்கூடிய பெண் என்பதால் வாய்ப்பு கிடைத்தது. கதை பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.
நான் மட்டுமல்ல; தமிழ் பேசத்தெரிந்த நிறைய நாயகிகள் இங்கு இருக்கிறார்கள். அந்த நோக்கத்தில் தேடினால் கட்டாயம் கிடைப்பார்கள்.
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் எப்போது ப்ரியா ஆனந்தைப் பார்ப்பது?
வர்ற படமெல்லாம் அது மாதிரியே வந்து, நானா நடிக்காமல் இருக்கிறேன்? தவிர, பாடல் காட்சிகளில் மட்டுமே வந்துவிட்டு போவது மாதிரி இதுவரை எந்த படத்திலும் நான் நடித்ததில்லை. அதனால், நாயகிகளின் நடிப் புக்கு முக்கியத்துவம் உள்ள படங் கள் நிறைய வந்தால், அதில் கண் டிப்பாக என்னை பார்க்கலாம்.
மீண்டும் ஆனந்த ஷங்கர் இயக் கத்தில் நடிக்கவிருப்பது பற்றி?
விக்ரம்தான் நாயகன். அவரது நடிப்பை படப்பிடிப்பு தளத்தில் நேரில் பார்க்க ஆவலாக இருக் கிறேன். விரைவில் படப் பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆனந்த் ஷங்கர் அற்புதமான இயக்குநர். இந்தப் படத்தின் திரைக்கதைகூட வெகு சிறப்பாக இருக்கும்.
‘வாமனன்’ முதல் ‘வை ராஜா வை’ வரை ப்ரியா ஆனந்தின் திரையுலக வளர்ச்சி எப்படி?
‘வாமனன்’ படத்தின்போது எனக்கு எதுவுமே தெரியாது. அதில் நடிக்கும்போதுதான் திரையுலகம் எப்படி இருக்கும், எப்படி காட்சிப்படுத்துவார்கள் போன்ற விஷயங்களை படிக்க ஆரம்பித்தேன். இப்போது ஓரளவு எல்லாம் தெரியும். ஒரு படப்பிடிப்புக்கு போனால் எதற்காக இந்தக் காட்சி எடுக்கிறார்கள், ஏன் இப்படி அமைக்கிறார்கள் என டக்கென்று புரிந்துவிடுகிறது.
உங்களது ஒவ்வொரு படம் வரும்போதும், அந்த பட நாயகர்களுடன் சேர்த்து கிசுகிசுவும் தவறாமல் வந்துவிடுகிறதே?
(சிரித்துக் கொண்டே) நானும் எவ்வளவு நாயகர்களைத்தான் காதலிக்க முடியும்? படப்பிடிப்பின்போது நாயகனுடன் பேசாமல் இருக்க முடியாது. பேசினால் காதல், ஒன்றாக சாப்பிட்டால் காதல் என்று கதைகட்டுகிறார்கள்.
‘நாயகனுடன் காதல்’ வகை கிசுகிசுக்கள் போரடிக்கின்றன. அதில்கூட புதுமையாக யோசிக்கலாமே..! சரி, இதெல்லாம் படத்துக்கான விளம்பரம் என்று நினைத்து விட்டுவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, என் வேலையை மட்டுமே தீவிரமாக காதலிக்கிறேன்.


நன்றி - த இந்து

0 comments: