Sunday, April 12, 2015

ஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா?- வைரமுத்து பேச்சால் சர்ச்சை

'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், பாடலாசிரியர் வைரமுத்து, துல்ஹர் சல்மான், ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாயகி நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் படப்பிடிப்பு இருந்ததால் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இச்சந்திப்பில் பாடலாசிரியர் வைரமுத்து பேசியது:
நான் ஊரில் இல்லாத போது, இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் இனிமேல் ஊருக்கு செல்லக் கூடாது என்று நினைக்கிறேன் என்றேன். இப்படத்தின் கதையைப் பொறுத்தவரை இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குகிற கதை. இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உண்டாக்குகிறார்களா, சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.
ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால், ஒரு வணிக எல்லைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். என்னைப் போல ஒரு படைப்பாளி, கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விடமுடியும். ஆனால், ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகளை முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி வணிக ரீதியிலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை மணிரத்னம் செய்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற நிறுவனம் இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இந்திய சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாக்குதல் என்கிற ஒரு பெரிய ராட்சத அலையில் வட்டார கலாச்சாரங்களும், மொழிகளும், பண்பாடுகளும் மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக்கூடிய நிலையில் இந்த படம் வெளிவருகிறது. இந்த அடித்தளத்தை நினைத்துக் கொண்டு இந்தப்படத்தை நீங்கள் துய்த்தால் உண்மை நம் கண்களுக்கு பிரகாசம் ஆகுமென்றே நினைக்கிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது:
எவ்வளவு தான் இசையமைத்தாலும், அடுத்த படம் பண்ணும் போது ஒரு தடுமாற்றம் வரும். பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் சொன்னார்கள், ஏன் நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்று. நீங்கள் பண்ணுவது எல்லாருக்கும் தான் பிடிக்கிறதே என்றார்கள். நமக்கு எப்போது அப்படித் தோன்றுகிறதோ, அப்போது ஒரு அழுத்தம் வரும். அது மிகவும் மோசமானது. இருக்கிறவரைக்கும் முதலில் என்ன உற்சாகத்தோடு செய்தேனோ அதே போல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் மணி சார் எனக்கு ஒரு அடித்தளம் கொடுப்பார். 23 வருடங்களாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.
துல்ஹர் சல்மான் பேசியது:
சில கனவுகள் காணும் போது, நமக்கு அதிலேயே இருக்கலாம், வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். எனக்கு கடந்த ஒரு வருடமாக அப்படித் தான் இருந்தது. எனக்கு இந்தப் படக்குழுவோடு இருக்க வேண்டும் போல் இருக்கிறது. படம் வெளியாகும்போது நான் மிகவும் கவலை அடைவேன் என்று நினைக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்திய திரையுலக திறமையாளர்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு சாதாரண மாணவன் தான். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது எனக்கு என்னவோ ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-ல் படிக்க வாய்ப்பு கிடைத்த மாதிரி இருந்தது. இந்த படத்தின் அனுபவமே எனக்கு ஒரு பல்கலைக்கழகம் போன மாதிரி தான் இருந்தது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மணி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 17ம் தேதி என்னுடைய அக்காவுக்கு பிறந்த நாள். அந்த தேதியில் படம் வெளியாகிறது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
இயக்குநர் மணிரத்னம் பேசியது:
(படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த பதில்கள் வருமாறு) திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வது தான் கதையா என்று கேட்டால் அதற்கு சில நாட்கள் பொறுத்திருந்தால் பதில் கிடைக்கும். வைரமுத்து சார் எல்லாருக்குமே படத்தைப் பற்றி புரியுற மாதிரி ஒன்று சொல்லிவிட்டார். அவரிடம் நான் 'சொல்ல வேண்டாம்’ என்று சொல்லாமல் போய்விட்டேன். சமூகத்தில் நடப்பது சரியா, தவறா என்று சொல்வதற்கு இரண்டரை மணி நேரம் படம் எடுக்க மாட்டோம். நீங்கள் அனுபவித்து பார்த்து, இந்த பாத்திரம் செய்தது சரியா என முடிவெடுங்கள். இது எப்படி இந்த சமூகத்தை பார்க்கிறது என்பது தான் படம்.
நீங்கள் பேனா, பேப்பரை விட்டுவிட்டு வந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். ஏதாவது விஷயம் இருந்தால் அதைப் பற்றி பேசலாம். இந்தியாவில் நடக்கும் விஷயத்துக்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது இல்லையா. ஒரு இயக்குநர் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்ல முடியாது. என்னுடைய களம் படம் இயக்குவது, அதில் எனது கருத்துக்கள் வெளிப்படும்.


நன்றி  -த இந்து


0 comments: