Friday, April 10, 2015

தமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் | கோப்புப் படம்: கே.ஆனந்தன்
ஜெயகாந்தன் | கோப்புப் படம்: கே.ஆனந்தன்
புகழுக்கு வளைந்து போகக்கூடியவர் அல்லர்: சுகுமார்
இந்திய இலக்கிய உலகின் ஓர் சகாப்தம் ஜெயகாந்தன் அவர்கள். எழுத்துத் துறைக்கு பலர் வருவதற்கு முன்னோடியாக இருந்தவர். "சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் இருக்க முடியாது என்றார்" கமலஹாசன். அதுபோன்று ஜெயகாந்தனின் பாதிப்பு இல்லாத எழுத்தாளர்கள் இருக்க சாத்தியமில்லை எனலாம். ஜெயகாந்தனின் எழுத்தால் கவரப்பட்டு எழுத வந்தவர்கள் பலர். ஜே.கே. பதவிக்கும், புகழுக்கும் வளைந்து போகக்கூடியவர் அல்லர். ஜே.கே.இன் இழப்பு இலக்கிய உலகுக்கு மட்டுமின்றி அடித்தள மக்களுக்கும் பேரிழப்பு.
ஆற்றல்மிக்க எழுத்தாளர்: சுல்தான் அப்துல்காதர்
ஆழமான கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் நம்முள் செலுத்தும் ஆற்றல் மிக்கவர். நல்ல எழுத்தாளர் நம்மை விட்டு பிரிந்தது வேதனையளிக்கிறது. அன்னாரின் ஆன்ம சாந்தி அடையட்டும்.
எப்போதும் எழுத்துக்களாக வாழ்கிறார்: அரங்க கோவிந்தராஜன்
ஜெயகாந்தன் என்னும் எழுத்துலக ஆசான் மறைந்தார். எழுத்தாளர்களுக்கு இப்படித்தான் எழுதவேண்டும் என்று சொல்லி கொடுத்தவர். ஏகலைவனைப்போல் கற்றவர்களில் நானும் ஒருவன். எப்படி சினிமா உலகில் இப்ப ரஜினி, கமல் என்றால் அவர்களுடனேயே வாழ்வது போன்று வாழ்கிறார்களோ, அது போல் எழுதுபவர்களும் ஜே.கே யுடன் வாழ்கின்றோம். அவர் மடியவில்லை எப்போதும் எழுத்துக்களாக வாழ்கிறார். வாழ்க ஜெயகாந்தன் புகழ்!
அவரின் எழுத்துக்கள் எல்லாம் அனுபவத்தின் வடுக்கள்: கோகுலா
இங்கு பலரும் அவரின் எழுத்தை கதை என்று குறிப்பிடுகின்றனர், அது தவறான கருத்து, அவரின் எழுத்துக்கள் எல்லாம் அனுபவத்தின் வடுக்கள், யதார்த்தங்கள், வலிகள், அவர்மேல் விழுத்த மலர்களின் வாசனைகள், தெறித்த சாக்கடையின் நாற்றம், உணர்ந்த நகைச்சுவைகள், அழுகைகள், கோபங்கள் மக்களிடம் எதிர்பார்த்த மாற்றங்கள். அவரின் எழுத்துக்கள் என்றும் மறையாது அது எங்கோ மீண்டும் மீண்டும் தோன்றி வளர்ந்து மாண்டு பின் மீண்டம் தோன்றி இப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும்.
இனியொரு ஜெயகாந்தன் இல்லை: வாட்சர்
கண்டதைச்சொல்லுகிறேன் உங்கள் கதையைச்சொல்லுகிறேன் அதைக்காணவும் கண்டு நாணவும் உமக்குக்காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ ? என்று செருப்படியாகச்சொன்னவன். இனியொரு ஜெயகாந்தன் இல்லை. இவன் ஒருவனே என்றென்றும் போதும்.
முதிர்ந்த பிராயத்தில் விளங்கிற்று உம்எழுத்து: எம்.ரமணன்
ஈரெட்டு ஆண்டுகளில் நானிருந்த போது ஊரெட்டும் புகழும் உம் எழுத்தை விடலை நான் படிக்க முற்பட்டேன் முடியவில்லை ஆயினும் என்? முதிர்ந்த பிராயத்தில் விளங்கிற்று உம்எழுத்து. எழுத்தாய், சித்திரமாய், குரலாய் நீ பகர்ந்த பொது உடமை இன்னும் ஏற்கவில்லை இவ்வுலகம் ஆயினும் என்? தமிழுலகும் மட்டன்றி ஏழுலகும் பூவுலகும் தானறியும் காந்தனை ஜெய மாந்தனை பொது உடமை வேந்தனை -ஓர் போதில் - மண்ணும் அறியும் விண்ணும் அறியும் காண்.
அவரது படைப்புகள் எப்பொழுதும் வழிகாட்டும்: ஜீவா
வாசகர்களை அறிவு மிகுந்தவர்களாக உயர்த்திக் காட்டியவர். முன்னுரை தொடங்கி நூலைப் படித்து முடிக்கும் வரை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்று கதா பாத்திரங்களுடன் சில காலம் வாழச் செய்தவர்; எத்தனை நாட்கள் கடந்த பின்பும் எழுத்தின் தாக்கம் குறையாமல் நம்முடன் வலம் வந்த இலக்கிய ஆசான் மறைந்தாலும் அவரின் படைப்புகள் எப்பொழுதும் வழி காட்டும்.
தமிழ் எழுத்துலகின் பேரிழப்பு: ஹூசைன்
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளில் பாமரமக்களின் வாழ்க்கையை, தலைமுறையை சிந்திக்க வைத்த படைப்புகள் ஏராளம் அன்னாரின் மறைவு தமிழ் எழுத்துலகின் பேரிழப்பு. அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.
தமிழ்ச் சமுதாய ஆணிவேரை அசைத்தவர்: ஜாஃபர்சாதிக்
தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள். பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன்! குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும். ஜெயகாந்தன் மறைந்தல்லும் அவர் எழுதியவை நிச்சயம் அவர் பெயர் கூறும். நம் சமுதாயம் தான் இவர்களை உருவாக்கியது. நிச்சயம் நமது மீடியாக்கள் இவரை போல் நல்ல எழுத்தாளரை உருவாக்கவேண்டும்.
முழுமையான மனிதராக வாழ்ந்து காட்டியவர்: ரமேஷ்
இந்த நூற்றண்டின் மிக முக்கியமான மனிதரை நாம் இழந்து விட்டோம். ஒரு எழுத்தாளராக மட்டுமில்லாமல் ஒரு மேன்மையான மனிதராக முழுமையான மனிதராக வாழுந்து காட்டியவர். அவருக்கு வணக்கங்கள்.
தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை தேடித்தந்தவர்: எஸ்.கணேஷ்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் . ஒரு எழுத்தாளர் எழுத்தின் மூலம் சாதனை செய்த சிற்பி ஜெயகாந்தன். அவருடைய சிட்டியும் ஜோசெப்பும் சாரங்கனும் ஹென்றியும் கங்காவும் என்ன சொல்வது. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் என்றும் பெருமை தேடி தந்த ஜெயகாந்தன் நம் மனதில் என்றும் வாழ்வார்.
காலத்தை வென்ற படைப்பாளி: ராம்
என்னுடைய அம்மா கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து கொண்டிருந்த காலம் அது, அப்போது ஆனந்த விகடனில் ஜெயகாந்தனுடைய கதைகள் வந்து கொண்டிருந்த காலம், அதை படிக்க அவருக்கு மிகுந்த ஆசை ஆனால் அந்த புத்தகம் வாங்க அவரிடம் பணம் இருக்காது, அவர் ஒரு பொது நூலகத்தின் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று ஜெயகாந்தன் கதை இடம் பெற்ற அந்த பகுதியை மட்டும் கிழித்து எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவந்து விடுவர், இப்படி கொண்டு வந்த கதையின் மொத்த பாகத்தையும் ஒரு புத்தகம் போல தைத்து வைத்து இன்றும் பாதுகாக்கிறார், அந்த அளவுக்கு ஜெயகாந்தன் புத்தகங்கள் என்றால் எங்களுடைய அம்மாவிருக்கு அவ்வளவு விருப்பம், இன்றைக்கும் எதாவது எங்கள் அம்மாவிடம் எதாவது பரிசு வேண்டுமா என்று கேட்டல் முடிந்தால் ஒரு ஜெயகாந்தன் நாவல் எதாவது வாங்கிவா என்றுதான் சொல்லுவார், என் அப்பா எங்கள் அம்மாவிருக்கு கொடுத்த முதல் காதல் பரிசும் அவருடைய நாவல் ஒன்றைத்தான். நிச்சயம் அவருடைய மரணம் என் அம்மாவை பாதித்திருக்கும். காலத்தை வென்ற படைப்பாளி ,கால எல்லையற்ற எழுத்துலகில் நிச்சயம் அவர் புகழ் 1000 ஆண்டுகளாவது வாழும்.
இனி ஒரு ஜேகேவை என்று காண்போம்?: பரம்மா
60களில் பிறந்தவர்களுக்கும் தண்ணீரும் முக்கியமோ ஜே.கே. ஒரு ஆதர்ஷ புருஷன். எப்படி உணவும் தண்ணீரும் தினசரி வாழ்வில் முக்கியமோ அப்படி இவரது எழுத்துக்களை தரிசிப்பது அன்றாட வாழ்வின் அவசியமாயிற்று அந்த நாட்களில். இப்படியும் ஒரு எழுத்தாளாரா? எப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்தித்து அதை எழுத்தில் வடிக்க முடிகிறது என்பது அன்றைய நாட்களின் ஒரு தவிர்க்க முடியாத பிரமிப்பு. எனக்கு விருது வழங்கி அதை கவுரவிக்கிரார்கள் என்று சொன்ன எழுத்தின் ஆளுமை. இனி ஒரு ஜேகே வை என்று காண்போம்? அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்கும்.
பல தத்துவங்களை தரிசித்தவர்: ஜெயகாந்தன்
ஒரு படைப்பாளி பன்முகத்தன்மை கொண்டவன் என்பதற்கு உதாரணம் ஜேகே. தத்துவவாதி என்பதை விட பல தத்துவங்களை தரிசித்தவர் அவர். பல இசங்களை அவர் சோதித்து பார்த்தாலும் சமுக ஆய்வுகளுக்கு அவரின் தேர்வு மார்க்சியமே ஆனால் அவர் பரிந்துரைத்த சில மருந்துகள் காந்திய தயாரிப்புகள் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அதுதான் ஜேகே!
வாழ்வை தெளிவோடு கற்பித்தவர்: அருள்மங்கை
பேசுவதற்கு ஏதுமில்லை. ஐய, உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று பல முறை நினைத்தேன்... தங்களை, அம்மாவை, காதம்பரியை அவ்வப்போது பார்க்க வேண்டும் என்றும் நினைத்தேன்.. காதம்பரியே என்னை மறந்திருபாள். அவளோடு கல்லூரியில் நான் படித்தவள் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் உங்கள் எழுத்துக்களே என்னை வளர்த்தவை... நீங்கள் எம் தமிழ் தந்தை.. வாழ்வை தெளிவோடு கற்பித்தவர். வணங்குகிறேன்
அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: திலீபன்
ஜெயகாந்தன் மறைவு மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது படைப்புகளை அதிகம் படித்ததில்லை.அவரது 'சட்டை' என்ற சிறுகதை என்னை அதிகம் பாதித்தது.இன்றைய உலக வாழ்வையும்,சமுதாய யதார்தங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.இலக்கிய உலகில் அவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிறைவு செய்ய இயலாது.



நன்றி  - த இந்து

0 comments: