Thursday, April 30, 2015

ANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவி)

கடந்த ஆண்டு நடந்த ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘ஆன்ட் ஸ்டோரி’ நாயகியான கொல்கத்தாவை சேர்ந்த ஷீனா சோஹன், இயக்குநர் முஸ்தபா சர்வார் பரூக்கி.
கடந்த ஆண்டு நடந்த ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘ஆன்ட் ஸ்டோரி’ நாயகியான கொல்கத்தாவை சேர்ந்த ஷீனா சோஹன், இயக்குநர் முஸ்தபா சர்வார் பரூக்கி.


எறும்பு தின்பண்டங்களை மட்டுமா அரிக்கும்? மனதை அரித்து மன நோயாளியாக மாற்றுவதற்குகூட எறும்பைக் குறியீடாகக் கொள்ளலாம்.
எம்எல்எம் எனப்படும் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் சாதாரண மக்களை எப்படியெல்லாம் பாதிக் கிறது என்பதை சமீப ராஜதந்திரம் படம் வரை தமிழில் பார்க்கிறோம். சமீபத்திய படங்களில் எம்எல்எம் பற்றிய பேச்சு எப்படியோ வந்துவிடுகிறது. வங்கதேசத்தில் கூடத்தான். ‘எறும்பின் கதை’ படத்திலும்.
வங்கதேசம் பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். பாபர் மசூதி இடிப்பின்போது அங்கு இந்து மக்கள் மீதான வன்முறைகள் பற்றி ‘லஜ்ஜா’ நாவலில் எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரின் துரத்தப்பட்டு இந்தியாவில் வாழ்கிறார்.
3 வருடங்களுக்கு முன்பு நான் தாக்கா சென்றிருந்தபோது, வங்கதேசத் திரைப்படம் ஏதாவது ஒன்றை பார்க்க விரும்பினேன். அங்கு திருப்பூரைவிட பனியன் உற்பத்தி அதிகம். கூலி குறைவு. கொத்தடிமைத்தனமான பனியன் தொழிலாளர் வாழ்க்கையைக் கண்டேன் . திரைப்படம் பார்க்கும் ஆசையும் இருந்துகொண்டே இருந்தது.
உள்ளூர் நண்பர்கள் வேண்டாம் என்றனர். ‘‘இந்தியாவில் எடுக்கப்படும் இந்தி படங்களின் மோசமான பதிப்புகள்தான் எங்களூர் படங்கள்’’ என்றனர். இதை மறுக்கும் விதமாக சில அபூர்வமான படங்களும் வெளிவருகின்றன. சமீபத்தில் வந்த வங்கதேச படம் ‘எறும்பின் கதை’.
தாக்காவை அதன் அழுக்குத்தனத்தோடு சரியாகக் காட்டியிருக்கும் படம். நகரத்தின் புனித வாழ்க்கையும் நுகர்வு சார்ந்து பழகும் மக்களின் இயல்பும் ‘மித்து’ என்ற வேலையில்லாத இளைஞனை ரொம்பவும் பாதிக்கிறது. எம்எல்எம்-ல் சேருகிறான். ஓட்டை கைபேசி வைத்திருக்கிறான். நிர்வாகம் நல்லதாக வாங்கச் சொல்ல, புதியது வாங்கச் செல்கிறான். பழைய கைபேசி விற்கும் ஒருவனிடம் இருந்து பாதி விலைக்கு வாங்குகிறான்.
அது ஒரு நடிகையின் கைபேசி என்பதும், அவளிடம் இருந்து தொலைந்துபோனது என்றும் பின்னர் அவனுக்குத் தெரிகிறது. அவள் கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்றுக் கொள் என்கிறாள். அவள் தரும் அன்பளிப்பை மறுத்து எம்எல்எம்-ல் சேரச் சொல்கிறான். அவளும் சேர்ந்து புகைப்படம் எடுத்து விளம்பரம் தர, எம்எல்எம்-க்கு வலு சேருகிறது.
அவளது கைபேசியில் இருந்த வீடியோ காட்சி ஒன்றை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தன்னுடன் நட்பைத் தொடர்ந்தால் அதை வெளியிட மாட்டேன் என்றும் கூறுகிறான். அவளும் ஒப்புக்கொள்கிறாள். திரைப்படத்தில் நடிப்பதுபோல, பத்து நிமிடத்துக்கு கணவன் - மனைவியாக நடிக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான். அவள் ஏற்றாலும் பிறகு, எரிச்சலடைந்து அவனைத் துரத்திவிடுகிறாள். தனது உதவியாளர் மூலம் வீடியோ காட்சியைப் பெற முயற்சிக்கிறாள். வீட்டுக்குச் சென்று மிரட்டுகிறாள். வீடு களேபரமாகிறது.
எம்எல்எம் நிறுவனத்திலும் சோதனை. கம்பெனி மூடப்படுகிறது. முதலீட்டாளர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். வீட்டுக்கு வந்து தொல்லை தருகிறார்கள். நடிகையின் வீடியோ தொந்தரவு வேறு. ஓடி ஒளிகிறான். நண்பனின் துணிக்கடையில் இரவு நேரங்களில் துணிபொம்மையுடன் படுத்துக்கொள்கிறான். தொந்தரவுகள் அவனை அலைக்கழிக்கின்றன. மனநிலை பிசகு ஏற்படுகிறது. ‘‘அம்மா நான் பழையபடி ஆகணும். பள்ளிக்குப் போகணும்’’ என்று அரைக்கால் சட்டை, பை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.
திருமணமாகாத தங்கை, ‘‘அண்ணா, இந்த தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க நீ நடிக்கிறாய்தானே.. ஆமாம் என்று சொல், சொல்’’ என்று கதறுகிறாள். உடம்பில் எறும்பு ஊர்வதுபோல அவனை பிரச்சினைகள் சூழ்ந்து அரிக்கின்றன. பிரச்சினைகளால் மாறும் மனநோயின் கூறுகளை அவனது நடவடிக்கைகள் காட்டிக்கொண்டே இருக்கின்றன.ஒரு இளைஞனை தடுமாற வைக்கிற எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இந்த காட்சிகளை இந்தியச் சூழலிலும் வெகுவாகப் பொருத்திப் பார்க்கலாம்.
இதில் அழுக்கான தாக்கா, வறுமை சார்ந்த வாழ்க்கைகள், தடுமாறும் அரசியல் என சமூகப் பாதுகாப்பு இல்லாத வங்கதேச மக்கள் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளலாம். இதில் வரும் அப்பா கதாபாத்திரம் நோயாளியான நிலையில் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார். அரசியல்வாதி களும் அப்படித்தான் எதையும் கண்டுகொள்ளாமல் தாக்காவை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறார்களோ என நினைக்கச் செய்தது.

நன்றி - த இந்து


சுப்ரபாரதிமணியன்

0 comments: