Thursday, March 12, 2015

ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை - திரை விமர்சனம் ( மா தோ ம)

படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது.
வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த மாற்றத்துக்குப் பின்னாலுள்ள காரணம் என்ன? என்பதை முன்னும் பின்னுமாக நகர்ந்து சொல்கிறது சேரனின் ஜே.கே. எனும் நண்பனின் கதை.
ஆட்டம் பாட்டம் கும்மாளம் எனத் திரியும் ஜே.கே. என்னும் ஜெயகுமாரின் (சர்வானந்த்) வாழ்க்கை சட்டென மாறுகிறது. பொறுப்பில்லாத மூத்த பிள்ளையாக இருந்த சர்வானந்த் தங்கைகளுக்காக, தம்பிக்காக, அப்பா, அம்மாவுக்காக ஓடுகிறார். கிடைக்கும் வாய்ப்புகளையும் சமயோசித புத்தியையும் சரியாகப் பயன்படுத்தி மேலே வருகிறார். ஏழு நண்பர்களின் துணையுடன் அவன் தொழில் வெற்றி நடைபோடுகிறது. இடையில் வரும் கடுமையான சவால்களைச் சாமர்த்தியமாக முறியடிக்கிறார். தன் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வெளிநாடுச் சுற்றுலாவுக்குக் கிளம்புகிறார். அந்தச் சுற்றுலாவுக்குப் பின் ஒரு ரகசியம் இருக்கிறது.
ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகி னாலே அது காதலாகவோ வெறும் மோகமாகவோ முடிந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறிதும் தயக்கமின்றி வீட்டில் அமர்ந்து பார்க்கத்தக்க விதத்தில் கதையும் காட்சியமைப்புகளும் வசனங்களும் உள்ளன.
இருப்பினும், தொடக்கத்திலிருந்து விறுவிறுப்பாக நகரும் கதை, பிற்பாதியில் தொய்வடைகிறது. அப்பா, மகன், மகள் ஆகியோர்களின் உறவுச் சித்தரிப்பு டிவி சீரியல் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளது.
தெளிவாகவே நடிக்கும் சர்வானந்த், தமிழ் உச்சரிப்பை மேம்படுத்திக்கொண்டால் நல்லது. நித்யா மேனனின் நடிப்பு மனதைக் கவர்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம்போலவே தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் தன் பாத்திரத்தைக் கையாள்கிறார். கலகலப்புக்காக சந்தானம்... ஆனால் அவர் வரும் காட்சிகள் வசன ஜாலங்களாக மட்டுமே கடந்து போகின்றன.
சித்தார்த்தின் கேமரா உறுத்தலில்லாமல் படத்துடன் இணைந்து பயணிக்கிறது. விபினின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கவில்லை. ஜி.வி. பிரகாஷ்குமாரின் பாடல்களும் சுமார்தான்.
நேர்மையுடனும் திறமையுடனும் போராடினால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையைப் பெருமளவில் சுவாரஸ்யமாக விதைத்திருக்கிறார் இயக்குநர் சேரன். அதற்காகவே வரவேற்கலாம்


நன்றி  - த இந்து


டிஸ்கி = (  மா தோ  ம)= மாற்றான்  தோட்டத்து  மல்லிகை

தியேட்டரில்  மட்டுமே  சினிமா  பார்க்க  வேண்டும்  எனும்  கொள்கை  முடிவுடன்  இருப்பதால் இந்தப்படம்  பார்க்கவில்லை. எதிர்காலத்தில்  பல  படங்கள்  ரிலீஸ்  ஆனால்  என்  கொள்கை  மாறலாம்,. நான்  டாக்டர்  ராம்தாஸ் , கலைஞர்  போல . அப்பப்ப  என் பேச்சை  என் கொள்கையை  காத்துல  பறக்க விட்ருவேன் , ஹிஹி

0 comments: