Tuesday, March 03, 2015

திருட்டு பயலே, பிசாசு ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர்.(பி சி ஸ்ரீராம் சிஷ்யர்) சிறப்பு பேட்டி

  • பி.சி. ஸ்ரீராமுடன்...
    பி.சி. ஸ்ரீராமுடன்...
  • ‘பிசாசு’ படப்பிடிப்பில்...
    ‘பிசாசு’ படப்பிடிப்பில்...
  • ‘பிசாசு’ படப்பிடிப்பில்...
    ‘பிசாசு’ படப்பிடிப்பில்...

வெற்றிக் கூட்டணி எப்படி இருக்க வேண்டும்?- ரவிராய் சிறப்புப் பேட்டி



புகழ்பெற்ற புகைப்படப் பத்திரிகையாளராக இருந்து, ரவிராய் என்ற பெயருடன் 'பிசாசு’ படத்தின் ஒளிப்பதிவாளராகக் கவனம் ஈர்த்திருக்கிறார் வைட் ஆங்கிள் ரவிசங்கர். பி.சி. ஸ்ரீராம் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட ரவிராயைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
புகைப்படக் கலையைத் தேர்ந்துகொண்ட நாட்கள் பற்றி ஒரு சின்ன ப்ளாஷ் பேக் கூறுங்களேன்..
எனது அப்பா காமராஜுலு முழுநேரப் பத்திரிகையாளர். தினத்தந்தி, தமிழ்நாடு, மக்கள் குரல் பத்திரிகைகளில் செய்தி ஆசிரியராக இருந்தவர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எனது சித்தப்பா கணல்மைந்தன் என்னைத் திரைப்படக் கல்லூரியில் சேரும்படி சொன்னார். அவர் தமிழ்ப் பேராசிரியர். வானம்பாடி இயக்கக் கவிஞர். அவர்தான் “எல்லோரையும்போல் என்ஜினியரிங் படிக்காதே. கலைசார்ந்த ஒரு துறையை எடுத்துக்கொள் உன் வாழ்க்கைக்குப் புதுப் பரிமாணம் கிடைக்கும் ” என்றார்.
அவர் சொன்னது என்னைக் கவர்ந்துவிட்டது. புதுக் கல்லூரியில் பி. ஏ. சோசியாலஜி படித்தேன். பிறகு கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், செய்தியாளராக இருந்து பின்னர் பத்திரிகைப் புகைப்படக் கலைஞராகப் புகழ்பெற்ற சுபா சுந்தரத்திடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவர் என் அப்பாவின் உயிர் நண்பர். அவரை மாமா என்றுதான் அழைப்பேன். ஆறே மாதத்தில் என்னை போட்டோகிராபர் ஆக்கிவிட்டார்.
விகடன் பத்திரிகைக்குச் சுபா சுந்தரம் அவர்கள்தான் அட்டைப்படக் கட்டுரைக்குப் புகைப்படம் எடுப்பார். புகைப்படங்களைக் கொடுக்க நான் விகடன் அலுவலகத்துக்குச் செல்வேன். அப்படிச் செல்லும்போது அங்கே பத்திரிகையாளர் சுதாங்கனைச் சந்தித்தேன். அவர்தான் எனக்கு முதல் அசைன்மெண்ட் கொடுத்தார். அன்று தொடங்கிய பணி என்னை வைட் ஆங்கிள் ரவிசங்கராக மாற்றியது.
வைட் ஆங்கிள் என்ற பெயர் உங்களுடன் எப்படி ஒட்டிக்கொண்டது என்பதைச் சொல்லவில்லையே?
முழுநேர புகைப்படப் பத்திரிகையாளன் ஆன பிறகு ஒரு கட்டத்தில் திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்கிறோமே என்ற எண்ணம் வந்தது. இப்படி எந்தப் புதுமையும் இல்லாமல் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தால் நாம் காணாமல் போய்விடுவோம் என்று உள்ளுணர்வு என்னை எச்சரிக்கை செய்தது.
அப்போதுதான் இந்தியா டுடே ஆங்கிலப் பத்திரிகையின் போட்டோ எடிட்டர் ரகு ராய் எடுத்த படங்களை கவனித்தேன். அந்த இதழில் அவைப் புகைப்படக் கட்டுரைகளாக வெளியாகும். அவை என்னைக் கவர்ந்தன. அவர் ப்ளாஷ் இல்லாமல் இயற்கை ஒளியில் படமெடுப்பவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். தமிழ்நாட்டில் இவரது பாணியை நாம் பின்பற்றினால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
உடனடியாக அவரது பாணிக்கு மாறினேன். இயற்கையாகக் கிடைக்கும் வெளிச்சத்தை மட்டும் பயன்படுத்தினேன். படங்களில் இடம்பெறும் மனிதர்கள் மீதும் பொருட்கள், இயற்கை ஆகியவற்றின் மீது ஒளி, நிழல் இரண்டும் சரிசமமாக இழையும் பாணியில் படங்களை எடுக்கத் தொடங்கினேன் அந்தப் பாணிக்குப் பாராட்டுகள் குவிந்தன.
தவிர அகன்ற கோணங்களில் படம்பிடிப்பதில் ஆர்வம் உந்திட வைட் ஆங்கிள் லென்ஸ்களைப் பயன்படுத்தி அதிகப் படங்களை எடுத்துவந்தேன். கொஞ்சம் பூடகமான தண்மையையும் குழைத்துக்கொண்டு நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்து பாராட்டிய நெருக்கமான ஊடக நண்பர்கள் என்னை ’ வைட் ஆங்கிள் ரவிசங்கர்’ என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளிலிருந்து விலகிப் பின்னர் தனியே புகைப்பட ஏஜென்ஸி தொடங்கியபோது அதற்கும் ‘வைட் ஆங்கிள்’ என்றே பெயர் வைத்தேன்.
புகைப்பட இதழியலிருந்து திடீரென்று சினிமா ஒளிப்பதிவுக்குத் தாவியது ஏன்?
கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்த ’சுபமங்களா’ இதழுக்காக நண்பர் இளையபாரதி விரிவான இலக்கிய நேர்காணல்களைச் செய்தார். இதற்காக நவீன தமிழ் இலக்கியவாதிகளை, அவர்கள் அன்றாடப் பொழுதுகளில் எப்படி இருப்பார்களோ அப்படியே இயல்பாகப் பதிவுசெய்தேன். அது மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதேபோல முன்னணி அரசியல் தலைவர்கள் பலரையும் புகைப்படமெடுத்தேன். கலைஞர் மு. கருணாநிதியை தரையில் அமரவைத்துப் படமெடுத்தேன். முதலில் மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட அவர், படங்களைப் பார்த்த பின் தன்னை லுங்கி மற்றும் பனியனுடன் படமெடுக்க என்னை அனுமதித்தார்.
ஒரு புகைப்படக்காரனாக என்னைக் கவனித்துக் கொண்டிருந்த பி.சி. ஸ்ரீராம் சார் மனம் திறந்து பாராட்டுவார். இத்தனை பெரிய மேதை நம்மைப் பாராட்டுவதா என்று ஒவ்வொரு முறையும் நெகிழ்ந்துபோவேன். ஒருமுறை என்னிடம் “கண்காட்சி வைக்கிற மாதிரி ஏதாவது செய்” என்றார். மார்கழி இசை விழாவில் பாடும் பாடகர்கள் கலாச்சார இசையை லயித்துப் பாடும்போது அவர்களின் உடல்மொழியும், முகபாவங்களும் என்னைக் கவர, பல கலைஞர்களை மணிக் கணக்கில் படமெடுத்து அவற்றைக் கண்காட்சியாக வைத்தேன்.
என் அழைப்பை ஏற்றுக் கண்காட்சியைக் காண இரவு பதினோரு மணிக்கு வந்த அவர், நள்ளிரவு தாண்டியும் படங்களை ஆழ்ந்து ரசித்தார். படங்களை அவர் சிலாகித்த விதம் என்னை உருக்கியது. சுபா சுந்தரத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு குருவைக் கண்டுகொண்டதை உணர்ந்து மறுநாளே அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். 6 ஆண்டுகள். பி.சி. எனும் ஒளிப் பள்ளியில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது.
ஒளிப்பதிவில் அவரது சாதனைகளைப் பேச நேரம் போதாது. அதைவிட அவரது மனிதாபிமானம் உயர்வானது. தனது எல்லா உதவியாளர்களுக்கும் முதல் பட வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துவிடும் அபூர்வக் கலைஞன். சமீபத்தில் அவரைக் காணச் சென்றிருந்தேன். அப்போது பிரபல பத்திரிகையிலிருந்து அவரை வீடியோ பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் மெல்ல ஒதுங்கினேன்.
அத்தனை பரபரப்பிலும் என்னைக் கண்டு அழைத்து அருகில் அமர வைத்துக் கொண்டவர், “இவனைப் பேட்டி எடுங்கள். ‘பிசாசு’ படத்தின் ஒளிப்பதிவாளன். என் மாணவன். என்னைவிடச் சிறந்த ஒளிப்பதிவாளன்.” என்று வந்தவர்களிடம் என்னைப் பேட்டி எடுக்குமாறு செய்துவிட்டார். அந்தப்பேட்டிக்கு என்னைப் பற்றி அவரே முன்னுரையும் அளித்தார். அவர்தான் பி.சி.
திருட்டுப் பயலே படத்துக்குப் பிறகு ஏன் இத்தனை இடைவெளி?
வலுவான கதைகள் கொண்ட படங்கள் அமையவில்லை. எனவே நிறையப் படங்களை மறுத்துவிட்டுக் காத்திருந்தேன். காட்சிமொழியை நம்பிக் கதைசொல்லும் இயக்குநர்களோடு அதிகம் பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கான வாய்ப்பை மிஷ்கினும் பாலாவும் எனக்கு அளித்தார்கள்.
மிஷ்கினிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒரு ஒளிப்பதிவாளனிடமிருந்து இயக்குநரும், இயக்குநரிடமிருந்து ஒளிப்பதிவாளனும் கற்றுக்கொள்ளும் விதமாகக் கூட்டணி அமைய வேண்டும். ஒரு வெற்றிப் படத்துக்கான கூட்டணிக்கு இது முக்கியம் என்பது என் தனிப்பட்ட கருத்து.


நன்றி  - த  இந்து