Monday, March 02, 2015

உத்தம வில்லன் - அப்டேட்ஸ்

கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பார்த்திபனின் நகைச்சுவையான பேச்சு, கே.பியைப் பற்றி கமல் உருக்கம், ஊர்வசியின் எதார்த்தமான பேச்சு என பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.
அவற்றின் சிறு தொகுப்பு இதோ:
* 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவினை நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார். அப்போது கமல் என்ற மூன்று எழுத்துக்கு என்ன அர்த்தம் என்று தெரிவித்தார். க - கலைகளில், ம-மரணமே, ல் - இல்லாதவன் என்று பார்த்திபன் கூறினார்.
* மறைந்த இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதம் ஒலி வடிவில் திரையில் கமல் - கே.பி படங்களோடு ஒளிபரப்பப்பட்டது. அதன் இறுதியில் 'I'm Proud of you my Son', ’டேய் கமல்.. ரொம்ப பெருமையா இருக்குடா’ என்ற வரிகள் முடியும் போது மேடையில் தோன்றினார் கமல்.
* கே.பாலசந்தரைப் பற்றி கமல் பேசும் போது, அவரின் பேச்சுக்கு இடையே சில மெளனமான தருணங்கள் இடம் பெற்றன. மிகவும் நெகிழ்ச்சியான பேச்சைத் தொடர்ந்து கே.பாலசந்தருக்கு கமல் எழுதிய கவிதை ஒன்று ஒளிபரப்பட்டது. இக்கவிதையை இங்கே வாசித்தால் அழுதுவிடுவேன் என்பதால் திரையில் காணுங்கள் என்று கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் கமல்.
* கே.பி. சாரின் பாதி தான் கமல் ஆகையால் நான் அவருக்கு செய்ய நினைத்ததை கமலுக்கு செய்கிறேன் என்று கமல் காலில் விழுந்து வணங்கினார் நடிகர் பார்த்திபன்.
* நாசர், தனது மகன் கார் விபத்தின் போது ஏன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று விளக்கம் அளித்த போது கண் கலங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் நடிகை கவுதமி. "கமல் கொடுத்த அறிவுரையின்படி நான் வாட்ஸ்-அப்பில் வந்த எனது மகனின் விபத்து படங்களைப் இன்று வரை பார்க்கவில்லை" என்று நாசர் தெரிவித்தபோது கமல் கையை உயர்த்தி 'சூப்பர்' என்று தெரிவித்தார்.
* இசை நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது கே.பாலசந்தர் 'உத்தம வில்லன்' படத்தைப் பற்றி பேசியது மற்றும் படம் உருவான விதம் ஆகியவற்றை திரையிட்டார்கள்.
* "எனது பாத்திரத்தின் பெயர் மார்க்கதரிசி. யார் எந்த மார்க்கதரிசி என்றால் என்னுடைய உண்மையான பாத்திரம் தான்" என்று கே.பாலசந்தர் தனது வீடியோ உரையில் கூறினார்.
* கமல் நடிப்பில் வெளியான படங்களில் வரவேற்பு பெற்ற பாடல்களுக்கு பார்வதி நாயர் மற்றும் பூர்ணா ஆகியோர் நடனமாடினார்கள்.
* ஊர்வசி, பார்வதி, பூஜா, ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் படத்தைப் பற்றி சில தகவல்களை கூறினார்கள். ஆனால், அவர்களை கிண்டல் செய்து சிரிப்பலைகளை அள்ளியது என்னவோ பார்த்திபன் தான்.
* ஊர்வசி பேசும்போது "நான் கர்ப்பமாக இருந்ததை கமலிடம் கூறவில்லை. படப்பிடிப்பிற்கு வந்த 2வது நாளே, 'என்ன கர்ப்பமா?’ என்று கமல் என்னிடம் கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சில மாதங்கள் கழித்து, நான் டப்பிங் பேசும் போது கூட 3 நாட்களில் சீக்கிரம் முடிந்து விடுங்கள் என்று கூறினார். அவர் கூறியது போல எனக்கு மூன்று நாள் கழித்து பிரசவம் ஏற்பட்டது" என்றார்.
* "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடலை மேடையில் பாடினார் பார்வதி மேனன். அவரோடு தனது இருக்கையில் இருந்தவாறே "லாலா லாலா" என்று இணைந்தார் கமல்ஹாசன்.
* பார்த்திபன், நான் ஆண்ட்ரியாவிடம் இசையமைப்பாளரைப் பற்றி கேட்கப் போகிறேன் என்று கூறிய போது அரங்கில் பயங்கர சிரிப்பலை. உடனே நான் இசையமைப்பாளர் ஜிப்ரானை சொன்னேன்பா, இப்படி ஏன் என்னை மாட்டி விடுகிறீர்கள் என்று தப்பித்தார்.
* லிங்குசாமி பேசும்போது, இதுவரை நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறோம். ஆனால், எங்களது நிறுவனம் லோகோவில் நான்கு பேர் இருப்பார்கள். இந்த விழாவிற்கு முதன் முறையாக எனது பெரியண்ணன், சின்ன அண்ணன் வந்திருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என்று அழைத்தார். அவர்கள் இருவருமே கமலிடம் போய் அவரும் மேடைக்கு வர வேண்டும் என்று கூற, அவர்களோடு மேடை ஏறினார் கமல்.


* Single Kisske என்ற பாடலை மேடையில் பாடப்பட, திரையில் அப்பாடல் உருவான விதம் திரையிடப்பட்டது, இப்பாடலில் உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று கூறினார் பார்த்திபன். அந்த ஆச்சர்யம் என்னவென்றால், அப்பாடலில் இடையே வரும் இசைக்கு கமல் ஆடிய நடனம் திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் விசில் சத்தம் அரங்கை அதிரவைத்தது.
* இவ்வளவு பெரிய படத்திற்கு நான் இசையமைக்க காரணம் கமல் சார். அவரின் இசை ஞானம் என்னை வியக்க வைத்தது என்று தனது பேச்சில் குறிப்பிட்ட்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
* இளையராஜாவோடு 100 படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். இந்த இசை ஞானம் கூட இல்லாவிட்டால் நான் மடையன் என்று தனது உரையில் ஜிப்ரானுக்கு பதிலளித்தார் கமல்
* பாடல்களைப் பற்றி மதன் கார்க்கி, லிங்குசாமி, ஞான சம்பந்தம், சுப்பு ஆறுமுகம், விவேகா, பார்த்திபன் ஆகியோருடன் கமலும் அமர்ந்து பாடல் வரிகளைப் பற்றி கலந்துரையாடினார்கள்.
* இறுதியாக இசை வெளியீட்டின் போது குறுந்தகட்டை எடுத்து வந்தார்கள். அப்போது கமல், "இந்த தகட்டை இப்போது யார் வாங்குகிறார்கள். இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அனைவருமே இப்போது இணையத்தில் தானே பதிவிறக்கம் செய்கிறார்கள்" என்று கமல் கூறினார்.
* உடனடியாக கமல், மும்பையில் இருக்கும் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு FACETIME மூலமாக கமல் வெளியிட ஸ்ருதி பெற்றுக் கொண்டார்.
* "யாருமே மொபையில் ஷுட் செய்தாதீர்கள். உங்களுக்காகவே இணையத்தில் ட்ரெய்லரை வெளியிட்டு விட்டோம். உட்கார்ந்து கண்டு களியுங்கள்" என்று ட்ரெய்லர் திரையிடும் முன்பு கூறினார் கமல்ஹாசன்.

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தை வெளியிட, மும்பையில் இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் FACETIME தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒலி வடிவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் மேடையில் தோன்றினார்.
அதனைத் தொடர்ந்து கமல் பேசியது:
இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறைய ஒத்திகை பார்த்து வந்தேன். இப்போது பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. நான் ஒத்திகை பார்த்த அனைத்தையும் என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை.
எனக்கு அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு. பாலசந்தர் சாரைப் பற்றி தாமதமான நினைவுக் கூறல் என்றாலும் அவரது இறப்புக்கு பிறகு பல மேடைகளில் பேசியிருக்கிறேன். என்னைப் போல நிறையப் பேருக்கு பாலசந்தர் அவர்கள் அடையாளமாக இருந்திருக்கிறார். எனக்கு அவர் குரு அல்ல, மகா குரு.
'உத்தம வில்லன்' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க வந்தததுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால், பல தகவல்களை சேகரிக்காமல் விட்டு விட்டேன். பார்த்திபன் பேசும் போது, கே.பி.சாரின் பாதிதான் கமல் என்றார். அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கர்வமாக இல்லாமல் உரிமையோடு, கடமையோடு ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடர்வேன்.
ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். ரஜினி கூட 'முரட்டுக்காளை' மாதிரியான படங்களில் நடித்து நடிகனாக வளர்ந்திருப்பார். ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாக மட்டுமே இருந்திருப்பேன்.
இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் அவரை மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


நன்றி - த  இந்து

0 comments: