Monday, March 09, 2015

சரவணப் பொய்கை - இயக்குநர் வி சேகரின் மகன் கார்ல் மார்க்ஸ் சிறப்புப் பேட்டி

  • ‘சரவணப் பொய்கை’ அருந்ததி, காரல் மார்க்ஸ்
    ‘சரவணப் பொய்கை’ அருந்ததி, காரல் மார்க்ஸ்
  • ‘சரவணப் பொய்கை’ படத்தில் ஆர்த்தி, கருணாஸ், அருந்ததி, காரல் மார்க்ஸ்’
    ‘சரவணப் பொய்கை’ படத்தில் ஆர்த்தி, கருணாஸ், அருந்ததி, காரல் மார்க்ஸ்’
  • அப்பாவுடன்...
    அப்பாவுடன்...
நடுத்தர மக்களின் வாழ்வியலை நகைச்சுவை கலந்த யதார்த்தத்துடன் திரைப்படங்களாகத் தந்தவர் இயக்குநர் வி. சேகர். அவருடைய மகன் காரல் மார்க்ஸ், ‘சரவணப் பொய்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அப்பாவைப் போல இயக்குநர் ஆகாமல் நடிப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்த காரணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இங்கே… இது அவரது முதல் பேட்டி.
கதாநாயகர்களைக் கடவுள்போல வழிபடுவதற்கு எதிராக ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தை இயக்கியவர் உங்கள் அப்பா. அவரது இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறீர்களே?
அடிப்படையில் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். எனக்குத் தெரிந்தவரை அவர் நேருக்கு மாறாக நடந்ததில்லை. நடுத்தர மக்களுக்கு விழிப்புணர்வு தரும் கதைகளை மட்டுமே அவர் படமாக்கியிருக்கிறார். வரிசையாக ஆறு 100 நாள் படங்களைக் கொடுத்தவர். நீங்களும் ஹீரோதான் படத்தில் ‘மக்களே கதாநாயகர்கள், அவர்களால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்’ என்று அழுத்தமாகச் சொன்னவர்.
சாமான்ய மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களே நிஜமான ஹீரோயிசம் கொண்டவை என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர். இன்று தனுஷும் விஜய்சேதுபதியும், சிம்ஹாவும் வென்றிருப்பது மக்களின் முகங்களாகத்தான். ஹீரோயிசத்தால் அல்ல. நானும் இந்த எளிய பாதையில் வர வேண்டும் என்றே யதார்த்த நாயகனாக என்னை அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருப்பதையே நானும் விரும்புகிறேன்.
சரவணப் பொய்கை என்ற தலைப்பைப் பார்க்கும்போது இதுவொரு பக்திப் படம்போல் தெரிகிறதே?
இது முழுக்கக் முழுக்க காதல் படம். பழனி அருகிலுள்ள சரவணப் பொய்கைக் கோயில் ஊரைச் சுற்றிக் கதை நடைபெறுவதால், இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்.
உங்கள் அப்பா குடும்பப் பாணியிலிருந்து எதற்காகக் காதல் கதைக்குத் தாவியுள்ளார்?
அவரது கதை பாணியைத் தொலைக்காட்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அவருடைய பெண் ரசிகர்களும் டிவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். அதனால் இன்றைய இளம் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் நல்ல காதல் கதையை இயக்கியுள்ளார். அதேநேரத்தில் அவரது யதார்த்தமான நகைச்சுவையும் விறுவிறுப்பான திரைக்கதையும் சரவணப்பொய்கையில் இருக்கும். அவருக்கு இந்தப் படம் ஒரு புதிய ஸ்டைலாக இருக்கும்.
என்னமாதிரியான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறீர்கள்?
கணக்கம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் ஒரு தொழிலாளியின் கதாபாத்திரம். என்னுடன் டிக்கெட் கிழிப்பவராக அண்ணன் கருணாஸ் நடித்திருக்கிறார். தியேட்டர் முதலாளியாக எம். எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார். அவருடைய ஒரே மகளாக அருந்ததி வருகிறார். அவருக்கு என் மீது காதல். வழக்கமான இளைஞர்களைப் போல் காதல் என்றவுடன் கட்டிப்பிடித்து விடாமல், நான் அவள் காதலை மறுக்கிறேன். காதல் வேறு வாழ்க்கை வேறு என்று அட்வைஸ் செய்கிறேன்.
இருந்தாலும் அந்தப் பெண் என்னை விடாமல் துரத்துகிறாள். நீ நிச்சயம் பெரிய ஆளாக வந்துவிடுவாய் என்று ஊக்கப்படுத்துகிறாள். நானோ என் தகுதியை உயர்த்திக் கொண்டபிறகு சொல்கிறேன் என்று பிடிகொடுக்காமல் நழுவுகிறேன். இதற்கிடையில் நவீனமயமாக்கப்பட்ட எங்கள் தியேட்டரைத் தொடங்கி வைக்கச் சென்னையிலிருந்து நடிகர் விவேக்கை நான் அழைத்து வருகிறேன்.
விழாவுக்கு வந்த அவருக்கு என் முதலாளியின் மகளைப் பிடித்துவிடுகிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். முதலாளியும் மகளிடம் கேட்காமல் ஓகே சொல்லி விடுகிறார். எங்கள் காதல் வெற்றிபெற்றதா இல்லையா என்பதுதான் கதை. நமக்குக் காதலிக்க கற்றுக்கொடுத்த திரையங்கம், ஒரு காதலால் உயர்ந்ததா இல்லையா என்பதும் உணர்ச்சிகரமாக இருக்கும்.
படப்பிடிப்பு அனுபவம் எப்படி?
முதல்படம் என்றாலும் இயக்குநர் அப்பாதானே என்று படப்பிடிப்புக்குக் கூலாகப் போய்விட்டேன். அண்ணன்கள் விவேக், எம். எஸ். பாஸ்கர், கருணாஸ் ஆகியோருடன் நடிக்கும்போது திணறிவிட்டேன். அப்பா காட்சியை விளக்கி ரிகர்சல் பார்க்கும்போது சாதாரணமாக இருந்துவிட்டு டேக் என்றவுடன் புலிபோல் சீறிவிட்டார்கள்.
நான் எலியாக மாட்டிக்கொண்டேன். பிறகு அவர்களே ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுத்து என்னோடு நடித்தார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னை ஒரு புதுமுகம் என்று சொல்ல மாட்டீர்கள். அதற்கு இந்த அண்ணன்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நடிக்க வரும்முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சென்னையில் பள்ளிப்படிப்பு முடிந்ததும், அப்பாவின் ஆசைக்கு இணங்க, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் இன்ஜினியரிங் படித்தேன். நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்தபோது கிராமத்து வாழ்க்கை முறையை முழுமையாக அறிந்து ஒரு மண்வாசனை இளைஞனாக வெளியே வந்தேன். அந்த அனுபவம் இப்போது கதாநாயகனாக நடிக்கும்போது கைகொடுத்தது.
பிறகு கோவையில் எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் தயாரிப்பு நிறுவனமான திருவள்ளுவர் கலைக்கூடத்தில் தயாரிப்பு உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். பிறகு நடிப்புத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் கூத்துப்பட்டரையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். சிவசங்கர் மாஸ்டரிடம் நடனம், விமலா. இராமநாராயனிடம் பரதநாட்டியம், ஜாக்குவார் தங்கத்திடம் சிலம்பம், ஃபயட்கார்த்தி என்ற மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.
சினிமா குடும்பப் பின்னணி பலமா பலவீனமா?
என்னைப் போன்ற வாரிசுகளுக்கு உடனே கதாநாயகன் ஆகும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அது லக். ஆனால் அதைத் தக்கவைத்துக் கொள்ள, சினிமா பின்புலம் இல்லாதவர்களைவிட நாங்கள் அதிகம் போராட வேண்டும். அப்பா அம்மா சம்பாதித்த பெயரைக் காப்பற்ற வேண்டிய கட்டாயம் முதல் போராட்டம். அவர்கள் பெயரைத் தாண்டிப் பயணிக்க வேண்டியது இரண்டாவது போராட்டம்.
எனக்குக் காரல் மார்க்ஸ் என்று கம்யூனிஸ்ட் தலைவரின் பெயரை வைத்திருப்பது இதுபோன்ற போராட்டங்களை எதிர்கொள்வதற்குத்தான் என்று நினைக்கிறேன். நிச்சயம் உழைப்பால் உயர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு அனைவரின் வாழ்த்துகள் இருந்தால் போதும்.

நன்றி - த இந்து

0 comments: