Thursday, March 05, 2015

ஒல்லி கில்லி ஆக விரும்பும் பெண்கள் செய்யும் தவறுகள் - ஆரோக்ய டிப்ஸ்

“ஒல்லியாக இருந்தால்தான் அழகு’ என்ற தவறான கருத்தின் அடிப்படையிலும், அவசரமான காலகட்டத்திலும் இன்றைய வளர் இளம்பெண்களில் பலர் உணவில் அக்கறை இல்லாமல் உள்ளனர்.
அதிகம் சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்ற பயத்திலும், சாப்பிட நேரமின்மையாலும் உடலுக்குத் தேவையற்றவை உணவாகவும், உடலுக்குத் தேவையான ஊட்டுச்சத்துகள் கிடைக்காமலும் போய்விடுகிறது.
இதன் காரணமாக பலருக்கும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், ரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே “ஆரோக்கியமே அழகு’ என்பதை வளர் இளம் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காலை சிற்றுண்டி சாப்பிடாமல் பள்ளி, கல்லூரிக்கு பணிக்குச் செல்வதை பெரும்பாலான மாணவிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் தவறு. இரவு உணவு செரித்து, வயிற்றுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் “பிரேக் ஃபாஸ்ட்’ எனப் பெயரிட்டனர் என்பதை பெற்றோர் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு உதவுவது அவசியம்.
பள்ளி, கல்லூரிகளுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய காலை 7 மணிக்கே வீட்டை விட்டு புறப்பட வேண்டியிருந்தால், என்ன சாப்பிடுவது என மாணவிகள் கேட்கலாம். காபிக்குப் பதிலாக சத்துமாவுக் கஞ்சி குடியுங்கள் அல்லது  காய்றிகளை உள்ளடக்கிய பிரட் ஸாலட் சாப்பிடுங்கள்.
தினமும் கஞ்சி அல்லது “பிரட் ஸாலட்’ என்பதற்குப் பதிலாக, வாரத்தில் சில நாள்கள் இட்லி அல்லது  இடியாப்பம் அல்லது கருப்பையை வலுப்படுத்தும் உளுந்து கலந்த வடை உள்ளிட்டவற்றைச் சாப்பிடலாம். வெறும் வயிற்றோடு இருக்கக் கூடாது என்பது மட்டும் முக்கியமானது.
பள்ளி – கல்லூரியில் மதிய உணவாகச் சாப்பிட “ஃடிபன் பாக்ஸ்’-ல் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருள் சத்தானதா என மாணவிகள் கருத்தில் கொள்வது அவசியம். பெரும்பாலான மாணவிகள் “நூடுல்ஸை’ மதிய உணவாக எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு பெற்றோரே காரணம்.
நூடுல்ஸால் உடலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேபோன்று காய்கறிகளை உள்ளடக்கிய சத்தான மதிய உணவை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புவதில் பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம். மதிய உணவாக தயிர் சாதம் கொடுத்து அனுப்பினால்கூட, அத்துடன் சேர்த்து காய்கறி இருப்பது மிகவும் நல்லது. தயிர் சாதத்துக்கு ஊறுகாய் என்பது எந்த வகையிலும் சத்தை அளிக்காது.
பள்ளி-கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் நொறுக்குத் தீனிக்குப் பதிலாக சீசனுக்கு ஏற்ற பழத்தைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பப்பாளி உள்ளிட்ட நிறமி கொண்ட பழங்களைச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவும் காய்கறிகளை உள்ளடக்கிய ஊட்டச்சத்தாக இருப்பது அவசியம்.

ஊட்டச் சத்து உணவில் வளர் இளம் பெண்கள் இவ்வாறு தொடர்ந்து கவனம் செலுத்தும் நிலையில், அவர்களது அறிவுத் திறன் பெருகும். கர்ப்பப் பை, சினைப் பை உள்ளிட்ட இனப் பெருக்க உறுப்பின் ஆரோக்கியம் ஓசையின்றி பராமரிக்கப்படும். திருமணமாகும் நேரத்தில் எந்தவித உடல் நலப் பிரச்னைகளும் ஏற்படாது. இல்லறம் இன்பமாக அமையும்.
- ஜே. ரங்கராஜன்


நன்றி  - தினமணி

0 comments: