Monday, March 23, 2015

சவாலே சமாளி - சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நக்கலடிக்கும் படமா?- கழுகு இயக்குநர் பேட்டி

  • ‘சவாலே சமாளி’ அசோக் செல்வன், பிந்து மாதவி
    ‘சவாலே சமாளி’ அசோக் செல்வன், பிந்து மாதவி
  • பிந்து மாதவி
    பிந்து மாதவி
மலை உச்சியிலிருந்து அதல பாதாளத்தில் விழுந்து வாழ்க்கையை முடித்துக்கொள்பவர்களின் உடல்களை மீட்பது அத்தனை சுலபமல்ல. உடல்களை மீட்டுத்தரத் தன் உயிரைப் பணயம் வைக்கும் இளைஞனின் கதாபாத்திரத்தைப் படைத்து ’ கழுகு’ படத்தின் மூலம் கவனிக்க வைத்தார் சத்யசிவா.
இரண்டாவதாக அவர் இயக்கிய ’சிவப்பு’ திரைப்படம் இன்னும் வெளிவராத நிலையில் ’ சவாலே சமாளி’ என்ற மூன்றாவது படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். சீரியஸான களங்களில் சில்லென்று காதலைச் சித்தரிக்கும் இவர், இம்முறை நகைச்சுவைக் கதையைப் படமாக்கிவருகிறார் என்றதும் அவரைச் சந்தத்தபோது...
சிவப்பு படம் ஏன் இன்னும் வெளியாகவில்லை?
அந்தப் படம் தணிக்கையில் சிக்கிக்கொண்டுவிட்டது; தடைசெய்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதில் உண்மை இல்லை. தணிக்கை முடிந்து ஒரு வெட்டுக்கூட இல்லாமல் ’ யூ’ சான்றிதழ் பெற்று வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.
அதைப் பார்த்த தேசிங்கு என்ற விநியோகஸ்தர் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிக்கொண்டுவிட்டார். சிவப்பு படத்தைப் பார்த்துவிட்டு ’ சவாலே சமாளி’ பட வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் பாண்டியன்.
தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் பற்றிய கதையா சிவப்பு?
ஆமாம்! தமிழகத்தில் வாழும் எல்லா ஈழ அகதிகளும் பிரச்சினை இல்லாமல் வாழ்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல. அவர்களுக்கு நம் மண்ணில் நிம்மதி இருக்கலாம். ஆனால் தங்களுக்கான வாழ்க்கை முன்னேற்றம் இந்தியாவுக்கு வெளியே இருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல நினைக்கும் ஈழ அகதிகளையும், தமிழகத்தின் கட்டிடத் தொழிலாளர்களையும் இணைத்துக் கதை சொல்லியிருக்கிறேன். இந்தக் கதையை எடுக்காதீர்கள் வெளிவர விட மாட்டார்கள் என்று சொன்னவர்கள் நெகிழும் விதமாகச் சிவப்பு இருக்கும்.
உங்களது முதலிரண்டு படங்களும் சீரியஸ் களங்கள். தற்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள கதாநாயகனும் சீரியஸாக நடிக்கக்கூடியவர். ஆனால் நகைச்சுவைப் படம் என்கிறீர்களே?
இதைச் சவால் என்று சொல்ல மாட்டேன். ஒரு இயக்குநருக்கு எல்லா ஜானரிலும் படங்களை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனது அடுத்த படம் ஒரு நல்ல குடும்பப் பொழுதுபோக்குப் படமாகவும் அதற்கும் அடுத்த படம் ஒரு முழுநீள ஆக்‌ஷன் படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நகைச்சுவைக் கதையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்ததற்குக் காரணமே என் மீது சீரியஸ் முத்திரை விழுந்துவிடக் கூடாது என்பதற்குத்தான்.
அசோக் செல்வன் இப்படியொரு நகைச்சுவைக் கதையில் எப்படி நடிப்பார் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர் சரியான தேர்வுதான் என்று நான் நம்பினேன். எனது நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டார். ஜெகனுடனும் ஊர்வசியுடனும் அவர் செய்திருக்கும் நகைச்சுவை தர்பார் அவரையும் வசூல் நாயகனாக மாற்றும்.
சவாலே சமாளி என்ன கதை?
மக்களைக் கவர முடியாமல் தவிக்கும் ஒரு தொலைக்காட்சியில் அசோக் செல்வனும் ஜெகனும் வேலையில் சேருகிறார்கள். ஊதியம் ஒழுங்காகக் கிடைத்துக்கொண்டிருந்தாலும், சேனல் முதலாளி கருணாஸ் கடன் தொல்லை காரணமாகத் தற்கொலைக்கு முயலும்போது இந்த இருவரும் பார்த்துவிடுகிறார்கள். கருணாஸுக்கு உதவப் புதுப்புது நிகழ்ச்சிகளுக்கான ஐடியாக்களைப் பிடிக்கிறார்கள். எதுவும் உருப்படாமல் போக ஒரு ஐடியா தீ மாதிரிப் பற்றிக்கொள்கிறது.
பெயர் தெரியாத தொலைக்காட்சி டி.ஆர்.பி.யில் முதலிடத்துக்கு வருகிறது. ஆனால் சொந்த வாழ்க்கையில் காதலுக்கும் குடும்பத்துக்கும் இந்த நிகழ்ச்சியால் ஆபத்து ஏற்படுகிறது. நிகழ்ச்சியின் வெற்றியையும் தக்கவைத்துக்கொண்டு காதலையும் வாழ்க்கையும் இழந்துவிடாமல் இருக்க இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. ஊர்வசி நடிகை ஊர்வசியாகவே வருகிறார். மனோபாலா இயக்குநர் மனோபாலாவாக வருகிறார். எம்.எஸ். பாஸ்கரும் நாசரும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
-அ



நன்றி  - த இந்து

0 comments: