Thursday, March 05, 2015

முங்காருமழே ( கன்னடம்) 80 மடங்கு லாபம் சம்பாதித்ததா?

தமிழில் நடிப்பேன்! - கோல்டன் ஸ்டார் கணேஷ்

2006 இல் ஒரு கோடி செலவில் எடுக்கப்பட்ட "முங்காருமழே' திரைப்படம் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடி சுமார் 80 கோடிகளை வசூலித்தது. இன்று வரைக்கும் கன்னட சினிமாவின் உச்ச சாதனை அதுதான். அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த கணேஷின் 9 படங்கள் அடுத்தடுத்து வெள்ளிவிழாப் படங்களாக அமைந்தன. இன்று சுமார் 25 படங்களைக் கடந்து கன்னட சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாகியுள்ள "கோல்டன் ஸ்டார்' கணேஷை சந்தித்தோம்.

 கன்னட சினிமா எப்படிச் செல்கிறது... மற்றைய தென் இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டால் கன்னட சினிமாவின் வியாபாரம் விஸ்தீரணமடையவில்லையே..
 எமது படங்களின் பட்ஜெட் குறைவு என்பதனால், வியாபாரம் குறைவு. அதனால் ரிஸ்க்கும் குறைவு. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள். இல்லாவிட்டால் தூக்கிக் கடாசிவிட்டு போய் விடுவார்கள். மேலும் கன்னட சினிமா ரசிகர்கள் தனித்துவமானவர்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மட்டுமே கர்நாடகாவில் ஓடும். அதுதான் நியதி. இது எல்லா ஸ்டாருக்கும் பொதுவானது. மற்றைய மொழிப்படங்கள் என்ன மாதிரியான வெற்றி வீதத்தை வைத்திருக்கிறதோ அதேயளவு வெற்றிவீதத்தை நாங்களும் வைத்திருக்கிறோம். எனவே புரியாத ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

 கடந்த வருடத்தில் சுமார் 160 படங்கள் கன்னடத்தில் வெளியாகியுள்ளன. ஆனால், வெற்றி பெற்ற படங்களை விரல்விட்டு எண்ணலாமே...
 எந்த மொழியில்தான் இந்தப் பிரச்னை இல்லை. நீங்களே சொல்லுங்கள் கடந்த வருடத்தில் தமிழில் வெளியான மொத்தப்படங்களுக்கும், வெற்றிபெற்ற படங்களுக்கும் இடையேயான விகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கன்னட சினிமாவின் விகிதமும் அதேயளவாகத்தான் இருக்கும்.

 சொந்தத் தயாரிப்பு நிறுவனம் எப்படிப் போகிறது..
 இரண்டு படங்கள் தயாரித்தேன். அடுத்த வருடத்தில் இன்னும் இரண்டு படங்கள் தயாரிக்கவுள்ளேன்.

 டைரக்ஷன் எப்போது...
 டைரக்ஷன் சம்பந்தமாக இப்போது எந்த எண்ணமும் இல்லை. சிறிது காலத்திற்கு புது முக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம் என இருக்கிறேன்.

 எப்படியான கதையில் நடிக்க ஆசை..
 இப்போதுள்ள மனநிலையில் காலேஜ் சம்பந்தமான ஒரு படம் நடிக்கலாம் என நினைக்கிறேன்.

 தமிழில் எப்போது நடிப்பீர்கள்..
 நல்ல கதை கிடைத்தால் எப்போதுமே நடிக்கத்தயார்.

 உங்களுக்கு கல்யாணமானபோது பல பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது அது கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த அன்பை எப்படி எதிர் கொண்டீர்கள்...
 திருமணம் என்பது வாழ்க்கையில் அனைவருமே கடக்க வேண்டிய விஷயம். கல்யாணம் இல்லாமல் எப்படி ஒரு வாழ்க்கை சாத்தியமாகும். நான் திருமணம் செய்திருக்காவிட்டால், நீங்களே என்னிடம் வந்து "ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை...?' என கேட்டிருப்பீர்கள். சில ரசிகைகள் தற்கொலைக்கு முயன்றபோது கடும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். ஆனால், எல்லாவற்றையும் கடவுளின் கருணைப்பார்வைக்கு விட்டுவிட்டு அமைதியாக இருந்தேன். பலரால் விரும்பப்படும் போது சில சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டிவரும், இறைவனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு போகவேண்டும். எனது வேலை மக்களை மகிழ்விப்பது, அதை நான் சரியாக செய்து வருகிறேன்.

 உங்கள் படங்களில் பெரியளவில் மெசேஜ் இல்லையே..
 படம் எடுப்பவர்களை விட படம் பார்ப்பவன் புத்திசாலி. அவனுக்கு என்னால் மெசேஜ் சொல்ல முடியாது. எனது படங்களை அவன் தனக்கு ஏற்றாற்போல புரிந்து கொள்ளலாம். மெசேஜ் சொல்ல நான் என்ன செல்ஃபோனா (சிரிக்கிறார்).

 தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு கர்நாடகாவில் பெரிய மரியாதை உண்டே...?
 கலைக்கு மொழி இல்லை. கன்னட சினிமாவில் திறமைக்கு மரியாதை உண்டு. திறமைக்கு மாநில, மொழி, வர்க்க பேதம் இல்லை. சினிமாவுக்கு ஒரே மொழிதான் உண்டு. அது மற்றவர்களை மகிழ்வித்தல். படம் பார்ப்பவன், அப்படத்தின் ஒளிப்பதிவாளன் தமிழனா இல்லை கன்னடமா என்றெல்லாம் யோசித்து படம் பார்க்க வர மாட்டான்.

 வேறு மொழி டப்பிங் படங்களை கர்நாடகாவில் வெளிவராமல் தடைசெய்து வைத்திருப்பதை நீங்களும் ஆதரிக்கிறீர்களே...
 டப்பிங் படங்களால் சினிமா தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதனால் தான் அதை எதிர்க்கிறேன். விரும்பினால் ரீமேக் செய்யுங்கள். டப்பிங் கூடவே கூடாது.

 சினிமாவுக்கு மொழி இல்லை, எல்லை இல்லை என்கிறீர்கள். ஆனால், காவேரி சம்பந்தமாக ஒரு சிறு பிரச்னை வந்தால் கூட முதலில் தமிழ்ப்படம் திரையிடப்பட்ட இடங்கள் தானே தாக்கப்படுகின்றன...
 (சிறிது நேரம் யோசித்த பிறகு சொன்னார்) நோ கமண்ட்ஸ்...

 பெங்களூர் மாதிரியான இடங்களில் உள்ள மால்களில் பிற மொழிப்படங்களைத்தானே அதிகமாகத் திரையிடுகிறார்கள். கன்னடப் படங்களை திரையிடுவதை கௌரவக் குறைவாக சில மால்களில் பார்க்கிறார்களே....
 இது எமது கைகளில் இல்லையே. விநியோகஸ்தர்களைத்தான் கேட்க வேண்டும். மல்டிபிளக்ஸ்கள் வெளிமாநிலங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

 இப்போது ஷூட்டிங் நடைபெறும் படங்கள்...
 "ஸ்டைல் கிங்' படத்தை சேகர் இயக்குகிறார். அவர் ஒரு தமிழர். "புகுரி' படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. "தபாங்' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறேன்.

 "தபாங்' போன்ற ஆக்ஷன் படங்கள் உங்களுக்கு சரி வருமா..
 ஏன் இல்லை...? "தபாங்' படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டானது. அதன் தமிழ் ரீமேக் "ஒஸ்தி' படுதோல்வியடைந்தது. ஆனால், தெலுங்கு ரீமேக் சூப்பர் டூப்பர் ஹிட். தமிழ் ரீமேக் ஏன் தோல்வியடைந்தது என்பதையும், தெலுங்கு ரீமேக் ஏன் வெற்றியடைந்தது என்பதையும் புரிந்து கொண்டால். கன்னடத்தில் இலகுவாக ஹிட் கொடுக்கலாம்.

 "எந்திரன்', "லிங்கா' படங்களின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் நீங்களும் நெருங்கிய நண்பர்களாமே...
 ஆம். அருமையான மனிதர். "காலிபேட்டா' படத்தில் இருந்து அந்த நட்பு ஆரம்பமானது. "கூல்' படத்தில் அது இன்னும் விரிவடைந்தது.

 தமிழ் ஹீரோக்களுடனான நட்பு உண்டா... யார் யார் உங்களுக்கு நெருக்கமானவர்கள்...?
 எனது குடும்பத்தை விட வெளியில் யாருடனும் பெரிதாகப் பழக மாட்டேன். ஷூட்டிங் முடிந்தவுடன் நான் நடத்தும் நிறுவனத்தை நிர்வகிக்க சென்று விடுவேன். அனாவசியமாக நேரம் செலவு செய்வது எனக்குப் பிடிக்காது. இதனால் நண்பர்கள் குறைவு.

 எந்த பின்னணியும் இல்லாமல் வந்து கன்னட சினிமா உலகில் உங்களைப் போல தாக்குப் பிடிப்பது கடினமே...
 அப்படி எல்லாம் பிரச்னை இல்லை. எல்லாமே வதந்தி.

 ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து பல மிரட்டல்களை நீங்கள் எதிர்கொண்டதாக சொல்வார்களே...
 இல்லை. மீண்டும் சொல்கிறேன். எல்லாமே வதந்தி. சிவராஜ்குமார் எனது நெருங்கிய நண்பர். எனது முந்தையப் படத்தின் ஆடியோவை சிவராஜ்குமார்தான் வெளியிட்டார். சிவராஜ் குமாரின் வெள்ளி விழாவை நாங்கள்தான் முன்னின்று நடத்தினோம்.

 உங்களின் கனவு என்ன...
 எனக்கு விதிக்கப்பட்டதை விட அதிகமாக கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார். நன்கு சம்பாதிக்க வேண்டும். மற்றவர்களுக்கு, குறிப்பாக அனாதைகளுக்கு உதவ வேண்டும். இதுதான் என் ஆவல். "என்னை நடிகனாக்கு' என இறைவனை தினம் தோறும் வேண்டி இருக்கிறேன். எனது வேண்டுதல்களுக்கு மேலாக இறைவன் எனக்குக் கொடுத்துள்ளார். அதற்கு நான் நேர்மையாக இருக்க வேண்டும்.

 அண்மையில் பார்த்த தமிழ்ப் படம்..
 "மெட்ராஸ்' பார்த்தேன். அருமை. அண்மைக் காலத்தில் இப்படி ஒரு படத்தை நான் ரசித்துப் பார்த்ததில்லை என்றே சொல்லலாம். இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுங்கள்.
 -அருளினியன்.


நன்றி  - தினமணி




0 comments: