Tuesday, March 24, 2015

உலகக் கோப்பையை ஜெயிக்க-கிரேசியைக் கேளுங்கள் 25

  • ஓவியம்: கேசவ்
    ஓவியம்: கேசவ்
  • கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
    கிரேசிமோகனின் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் பார்க்க வந்த கவாஸ்கருடன் நாடகக் குழுவினர்...
சோனா, நியூஜெர்ஸி.
இந்தியா உலகக் கோப்பையை ஜெயிக்க ஒரு வெண்பா கூறுங்களேன்?
ஜெயிக்கட்டும் பிறகு வாழ்த்துவோம் வெண்பாவால். இப்போதைக்கு ஜெயிப்பதற்கு பிரார்த்தனை செய்வோம் ‘வேண்டுதல் வெண்பா’வாய்!
அடியேனுக்கு ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஜெயிக்க, அது அமெரிக்காவானாலும் அமிஞ்சிக்கரையானாலும் கிருஷ்ணர் துணை வேண்டி ‘வேண்டுதல் வெண்பா’ எழுதும் சென்டிமெண்ட் உண்டு. கிரிக் கெட்டை தமிழில் ‘கிட்டிபுள்’என்பார்கள். கிருஷ்ணரைச் செல்லமாக ‘கிட்டன், கிட்டி’என்றும் சொல்வதுண்டு. மகேந்திர சிங் தோனியும் கிருஷ்ணரைப் போல தீராத விளையாட்டுப் பிள்ளை.
கிருஷ்ணர் பாம்பின் மீது ஆடியது போல தோனி ஆட அந்தக் கண்ணனையே வேண்டு வோம். மேலும், கிருஷ்ணர் பீதாம்பரதாரி. அதாவது தமிழில் பீதகம் (மஞ்சள் வண்ண ஆடை) அணிபவன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனியும் அணிவது யெல்லோ யெல்லோதான் (Yellow Yellow Dress). எல்லாம் சரியா வருது. கப்பு (CUP) வருதா பாப்போம். இங்கே கண்ணனை கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் வேண்டிக் கொண்டு, தோனியைக் கிருஷ்ணாவை போல் வரைந்தது ‘ஹிண்டு’ கேசவ்.
‘வேண்டுதல் வெண்பா’
‘சென்னைக்கு
சூப்பர்கிங் சிங்தோனி - பீதகக்
கண்ணனைப் போல் மஞ்சள் கட்டுகிறார் என்னைக்கும்
ஆடைஆள் பாதிபாதி ஆடய்யா கோகுல
மாடய்யன் போல்பாம்பின் மேல்’.
கி.கன்னையா, திண்டிவனம்.
உங்கள் மேடை நாடகத்தைக் காண விளையாட்டு நட்சத்திரம் யாராவது வந்திருக்கிறார்களா?
என்ன அப்படி கேட்டுட்டீங்க! அஃப்கோர்ஸ் என் நாடகத்தைக் காண வரும் ரசிகர்கள் எல்லோருமே என்னைப் பொறுத்தவரையில் விளையாட்டுத்தனம் கொண்ட ஸ்டார்களே! கிரிக்கெட் பிரபலம் சுனில் கவாஸ்கர் எங்கள் நாடகத்துக்கு வந்ததைப் பெருமையாக குறிப்பிட விரும்புகிறேன்.
’சியர்ஸ் எல்காட்’ டி.வி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு ஹோட்டல் லீ மெரிடினியனில் 5 நாள் கிரிக்கெட் மேட்ச்சைப் போல் ஒரு நாள் முழுக்க நடந்தது. அதற்கு பிரதம விருந்தினராக ‘சியர்ஸ் எல்காட்’ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் கவாஸ்கர் சிறிது நேரம் தலைகாட்ட ‘டுவெல்த் மேன்’ போல் வருகை புரிந்தார். அங்கே குழுமியிருந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் வேடிக்கையாளர்களாக எங்கள் ‘அன்புள்ள மாதுவுக்கு’ நாடகம் போட அழைத்தார்கள்.
ஏற்கெனவே எஸ்.வி கேப்டனாக ‘மினிமேக்ஸ்’ கிரிக்கெட் டீம் வைத்திருந்த நாங்கள், கவாஸ்கர் பார்க்கும்பட்சத்தில் நாடகம் போட வருவதாகக் கூறினோம். கவாஸ்கருடன் அன் றைய தினம் எங்கள் குழு வினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் எஸ்.வி இடம்பெறவில்லை.
கார ணம், சியர்ஸ் எல்காட் மினிமேக்ஸ் கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங்கில் பிஸி. கோபி இருக் கிறான். ஆனால், குள்ள மாக இருப்பதால் போட்டோவுக்குக் கீழே, மறைந்துவிட்டான். நான் போட்டோ எடுக்கும் சமயம் ‘பவுண்டரி லைனில்’ டின்னர் ஃபீல்டு செய்ய முந்திவிட்டேன்.
நான்கு ரன்கள்தான் என்று நினைத்த போது ‘தேர்டு அம்பயர்’ சிக்ஸர் சொன் னால் எப்படி மைதானம் அலறுமோ, அது போலவே கவாஸ்கர் எங்கள் நாடகம் பார்க்கப்போகும் நல்ல சேதி யைக் கேட்டவுடன் எங்கள் ‘கிரேசி குழுவினர்’ ஸ்டேடியத்தில் இல்லாம லேயே சந்தோஷ சத்தமிட்டார்கள். கிச்சா மட்டும் ‘யார்ரா கவாஸ்கர்..?’ என் றான். ‘ஏண்டா… கிரிக்கெட் தெரி யாதா?’ என்று நாங்கள் தலையில் அடித் துக்கொள்ள, கிச்சா ‘யார்ரா அவன் கிரிக்கெட்?’என்று தன் கிரிக்கெட் ஞானத்தை வெளிப்படுத்தினான்.
கிரிக் கெட் சுத்தமாக, நாடகம் அசுத்தமாகத் தெரியாத கிச்சா ஆங்கிலத்தில் ஆஸ்கர் வாங்கியவன் (சிரசாசனத்தில் ஏ,பி,சி, டியை தலைகீழாகச் சொல்வான்). அவனை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப் பாளராக அமர்த்தினோம். நாடகம் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘வெயிட் எ மினிட் ஃபார் ஃபைவ் மினிட்ஸ்’ என்று சொல்லிவிட்டு பாதி நாடகத்தில் மேடையேறி ‘‘பாலாஜி (மாது) கடசீயா… நீ சொன்ன டயலாக் என்ன?’ என்று கேட்டு, உடனே அதை கவாஸ்கருக்கு மொழிபெயர்ப்பான்.
கடைசி வரை கிரிக்கெட் தெரியாத கிச்சா கவாஸ்கரிடம் ‘நீங்க என்ன வேல பாக்குறீங்க?’ என்று கேட்டு கழுத்தறுத்தான். ஒரு கட்டத்தில் கவாஸ்கர் கிச்சாவைக் கழட்டிவிட்டுவிட்டு நாடகத்தைக் கைத்தட்டி சிரித்து ரசிக்கத் தொடங்கினார்.
‘எப்படி சார் எங்கள் டிரான்ஸ்லேட்டர் இல்லாம டிராமாவைப் புரிஞ்சுண் டீங்க?’ என்று டின்னரின்போது நாங் கள் கேட்டோம். ‘கிரிக்கெட்டும் காமெடியும் மொழிக்கு அப்பாற்பட்டது’ என்று ஆரம்பித்து, கிரிக்கெட்டுக்கும் காமெடிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ‘கமெண்ட்ரி’ கொடுத்தார்.
கவாஸ் கரிடம் கிரிக்கெட் தெரிந்த எங்கள் நாடக இயக்குநர் காந்தன் டெண்டுல்கரைப் பற்றிக் கேட்டபோது ‘நீங்க வேணா… பாருங்க மிஸ்டர் காந்தன்... அந்தப் பையன் (சச்சின்) என்னைத் தொட்டுண்டு டொனால்ட் பிராட்மேனைத் தூக்கி சாப்பிடப் போறான்’என்று ஜோஸ்யம் சொன் னார். கவாஸ்கர் வாயால் ’கிரிக்கெட் ரிஷி’ பட்டம் சச்சினுக்கு அன்றே கிடைத்துவிட்டது.
சமீபத்தில் நாடகம் போட இலங்கைக்குச் சென்ற போது, ஹோட்டல் சமுத்ராவில் கமெண்ட்ரி கொடுக்க தங்கியிருந்த கவாஸ் கரிடம் கிச்சா சென்று ‘சார்… இப்போதான் நீங்க ‘கWasகர்’… அன்றைக்கு ‘கவ்Isகர்’ என்று தனது Is, Was, Past Tense- Present Tense ஆங்கிலப் புலமையைக் காட்ட, Tense ஆன சுனில் கவாஸ்கர், இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற கிலியில் ‘ரன் அவுட்’ ஆனாலும் பரவாயில்லை என்கிற ரீதியிலும் பீதியிலும் ஓடியது ஞாபகத்துக்கு வருகிறது!


நன்றி - த இந்து

0 comments: