Thursday, December 25, 2014

மீகாமன் படத்தில் ஹன்சிகா வை ஹீரோயினாக போட்டதில் என்ன ரகசியம் ? -இயக்குநர் மகிழ்திருமேனி பேட்டி

யதார்தத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல்! இயக்குநர் மகிழ்திருமேனி

mega


“”சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்க நேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவன் உறவுகள் மூலமாக சுத்திக் கொண்டே இருக்கிறது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்… இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிஷங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் சினிமாவுக்கும் பொருந்தும். ஆமாம், இது நல்லதொரு சினிமா.” புத்தகங்கள் விரிந்து கிடக்கும் அறையிலிருந்து உதடுகள் பிரியாமல் சிரிக்கிறார் மகிழ்திருமேனி. “தடையறத் தாக்க’ தந்து கவனம் ஈர்த்தவர். இப்போது “மீகாமன்’ படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார்.



“மீகாமன்’ என்னென்ன விசேஷங்கள்….?




மீகாமன் என்றால் கப்பலின் தலைவன் என்று பொருள். மாலுமிகளின் துணை கொண்டு கப்பலை கடலுக்குள் பத்திரமாக செலுத்தும் பொறுப்புள்ளவன். அவனுடைய வழிகாட்டுதல் இல்லையென்றால் கப்பல் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாது. எங்கேயும், எந்த இடத்திலும் இலக்கை மட்டுமே யோசிப்பவன். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு அப்படியொரு பக்குவம் கலந்த கதாபாத்திரம். அதன் குறியீடாகத்தான் படத்துக்கு “மீகாமன்’ என்ற பெயர். ரொம்பவே அடர்த்தியான ஆக்ஷன் த்ரில்லர். கூடவே ரொமான்டிக் உள்ள கதை. போதை பொருள் கடத்தல் இந்த படத்தின் பேசு பொருள்.



ஒரே மாதிரியாக வந்தாலும், ஒவ்வொரு படத்திலும் ஆர்யா “ஹேண்ட்சம்….’ இதில் எப்படி வந்திருக்கிறார்….?



ஆர்யாவுக்கு ஆக்ஷன் படங்கள் அந்நியமில்லை. ஆனால் இது தனித்து தெரியக் கூடிய படமாக இருக்கும். அவரின் “ஆக்ஷன் எபிசோடு’ பற்றி பேசும் போது இந்தப் படம் முன்னுக்கு வந்து நிற்பதை தவிர்க்க முடியாது. யாரை நடிக்க வைக்கலாம் என்பதில் எனக்கு எந்தத் தீர்மானமும் இல்லை. சில யோசனைகளுக்குப் பின் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக்தான் ஆர்யா எப்படி? என்று ஆரம்பித்தார். நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரம் ஆர்யாவுக்கு அப்படியே பொருந்தி வந்தது. ஆர்யா ரொம்பவே கலாட்டா பேர் வழி. சீரியஸ் கதையில் அவர் எப்படி…? என்கிற வாதங்களும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவர் கதை கேட்ட விதம், இதை அவர் பக்குவமாக முடித்து தருவார் என்ற நம்பிக்கையை தந்தது. இதுதான்… இப்படித்தான் இருக்கும் என்று வருபவர்களுக்கு இன்னும் நிறைய ஆச்சரியங்கள் தர போகிறார் ஆர்யா.





ஹீரோயின் இடத்துக்கு சமந்தா, நயன்தாரா என “செம மியூசிக்கல் சேர்’ நடந்ததே… ஆனால் சீட்டு குலுக்கி போட்டது மாதிரி ஹன்சிகாவே வந்து விட்டாரே…?




“மீகாமன்’ என்றால் கட்டளைகள் பிறப்பிப்பவன். அதிகாரம் மிக்கவன். அவன் காதலிக்கிற பொண்ணு ஏஞ்சல் மாதிரி இருக்க வேண்டும் இல்லையா? நிறைய ஹீரோயின்கள் மனசுக்குள் இருந்தார்கள். கடைசியாக அந்த இடத்துக்கு ஹன்சிகாதான் பொருத்தமாக வந்தார். ஏற்கெனவே ஆர்யாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், சினிமாவைத் தாண்டி நண்பர்களாக பழகும் அவர்களின் தோழமை படத்துக்கு இன்னொரு பலம். காசு, பணம் தாண்டி ஹன்சிகா நல்ல உழைப்புக்கு தயாராக இருக்கிற ஹீரோயின். நேரம் கடைப்பிடித்தல், வசனங்களை முடிந்த அளவுக்குப் புரிந்து கொண்டு பேசுதல் என படப்பிடிப்பில் அசத்தி விட்டார் ஹன்சிகா. ஆர்யாவுக்கு கதையில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதில் சரி பாதி ஹன்சிகாவுக்கு உண்டு. கதையின் முழு பலத்தை தாங்கி பிடிக்கிற மாதிரி ஹன்சிகாவுக்கு இன்னும் படங்கள் இல்லாதது பெரும் குறை. அதை ஓரளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறது இந்தப் படம்.




தீவிர புத்தக வாசிப்பாளர் என்பதால் இந்த கேள்வி… தமிழில் எவ்வளவோ நல்ல இலக்கியக் கதைகள் இருந்தும் படமாக உருவெடுப்பது இல்லையே… ஏன்…?




சமுதாயம் மாதிரி… அரசியல் மாதிரி… இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ அரசனும் அப்படியே என்று சொல்லுவார்களே அதுபோல்தான். ஒரு தலைவனைப் போல் கலைஞனுக்கும் பங்கு இருக்கிறது. மக்கள் விரும்பும் ஆட்சி போல, மக்களுக்கு பிடிக்கிற சினிமாக்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இங்கு எது யதார்த்தம் என்று புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. எதைக் காட்டினாலும் அதன் ஒரிஜினல் முகத்தைக் காட்ட வேண்டும். ஈரான் படமான “தி செபரேஷன்’ பார்த்தால், நம்மூர் இயக்குநர்கள் மீது கோபம் வரலாம். மக்களின் வாழ்க்கையை, போராட்டங்களைக் காட்டுகிற படங்கள் ஒரு போதும் தோற்காது என்கிற நிலைமை வர வேண்டும். அதன் பின் இலக்கியத்தரம் பற்றி பேசலாம்.




- ஜி.அசோக்

0 comments: