Monday, December 29, 2014

‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி -ன் ’ பாகுபலி’ கதை என்ன?

ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் என்று நம்பப்படும் ரிஷப மாமுனிவரின் முதல் மகன் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பாகுபலி வெகுண்டெழுந்து சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற அண்ணனின் முகம் வாடியதைக் கண்டு, பாகுபலி துறவறம் மேற்கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தப் போரையும் பாகுபலியின் காதலையும் பின்னணியாக வைத்து ‘நான் ஈ’ புகழ் ராஜமௌலி ’ பாகுபலி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம். 


ஹாலிவுட் வரலாற்றுப் படங்களுக்குச் செய்யப்படுவதுபோலவே புரொடெக்‌ஷன் டிசைன் செய்து பிரம்மாண்ட நகரம் ஒன்றை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதில் 9-ம் நூற்றாண்டின் ஆடைகள், போர்த் தளவாடங்கள், யானைகள், குதிரைகளுக்கான போர்க் கவசங்கள், அந்தக் காலகட்டத்தின் ஆயுதங்கள் என்று படத்தின் முன் தயாரிப்புக்கு மட்டுமே ஓராண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறதாம் ராஜமௌலியின் டீம். 


அந்த உழைப்புக்குப் பலன் கிடைத்திருப்பதாக ஆந்திராவைத் தாண்டியும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 2015 மே மாதம் வெளியாக இருக்கிறது. 



இப்படத்தில் பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும், அவந்திகாவாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். அவந்திகா கதாபாத்திரமாக 9-ம் நூற்றாண்டின் ஆடை அணிந்து பாகுபலி படத்துக்காகத் தமன்னா அருவியில் குளிப்பதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். 


இப்படத்திற்கு இசையமைத்துவரும் எம்.எம்.கீரவாணி, இதன்பிறகு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ‘டென் காமாண்ட்மென்ஸ்’ படத்தை விஞ்சும் விதமாகப் பாகுபலிக்குப் பின்னணி இசை அமைக்கப் பாடுபட்டுவருகிறாராம் இவர். இந்தப் படத்தின் வழியாக ஆஸ்கரை ராஜாமௌலி குறிவைத்திருப்பதாகப் பேச்சு. 


நன்றி - த இந்து 

0 comments: