Monday, December 29, 2014

பொங்கல் ரேஸ் - ஜெயிக்கப்போகும் குதிரை எது?

  • 'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
    'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
சமீப காலமாக பண்டிகை தினங்களில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு மேல் ரிலீஸாகாமல் இருந்தன. ஆனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் இந்த நிலை மீண்டும் மாறியிருக்கிறது. ‘கயல்’, ‘மீகாமன்’, ‘கப்பல்’, வெள்ளக்கார துரை’ என்று நான்கு படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக, அடுத்ததாக வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு ஐந்து படங்கள் இப்போதே வரிசைகட்டி நிற்கின்றன. 


பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்படும் படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்கள். இதனால் எந்தப் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் குழம்பிப் போய் உள்ளனர். இந்நிலையில் நிஜமாகவே இப்படங்கள் பொங்கல் ரேஸுக்கு தயாராக இருக்கிறதா என்று கோலிவுட்டில் விசாரித்தோம். 



‘ஐ’
விரைவில் வெளியீடு என்று பலமுறை விளம்பரப்படுத்தப்பட்ட ‘ஐ’ திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டே தீருவது என்ற தீர்மானத்துடன் உள்ளார்கள் இப்படக் குழுவினர். ‘ஐ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், தற்போது ‘யு’ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து வருகிறது. அவ்வாறு கிடைக்காவிட்டாலும் யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. “பொங்கலுக்கு முன்பு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிடுவோம். இதிலிருந்து எந்த காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை” என்கிறார்கள் இப்படக் குழுவினர். மிக விரைவில் ‘ஐ’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 



‘என்னை அறிந்தால்’
படத்தின் முதல் பாதியின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இரண்டாம் பாதிக்கான இறுதிகட்டப் பணிகள் நடந்துவருகின்றன. அதையும் விரைவில் முடித்து ஹாரிஸ் ஜெயராஜிடம் பின்னணி இசைக் கோப்பு பணிக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். “ஜனவரி 15-ம் தேதி ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும். படத்தின் பணிகள் அனைத்தும் அதற்குள்ளாகவே முடிந்துவிடும்” என்கிறார்கள் ‘என்னை அறிந்தால்’ படக் குழுவினர். 



‘ஆம்பள’
படப்பிடிப்பு தொடங்கும்போதே இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரு கின்றன. இத்தாலியில் பாடல் காட்சிகளை படமாக்கி திரும்பியுள்ள நிலையில் டிசம்பர் 27-ம் தேதி இசை வெளி யீட்டு விழா நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்கிறார்கள் படக் குழுவினர். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறது இப்படக்குழு. 



‘கொம்பன்’
‘கொம்பன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு 26-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகளான டப்பிங் உள்ளிட்டவற்றையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிந்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் ‘கொம்பன்’ குழுவினர் உறுதியாக இருக்கிறார்கள். 



‘காக்கி சட்டை’
டிசம்பர் வெளியீட்டில் இருந்து பொங்கல் ரேஸில் புதிதாக இணைந்துள்ள படம் ‘காக்கி சட்டை’. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் மட்டுமே பாக்கி இருக்கிறது. விரைவில் அப்பணியும் முடிந்து, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறுகிறது ‘காக்கி சட்டை’ படக் குழு. 


மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் ‘ஐ’, ‘ஆம்பள’, ‘காக்கி சட்டை’ ஆகியவை பொங்கல் வெளியீட்டில் இருந்து எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை அதன் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருக்கும் அட்மஸ் நிறுவனம் ஜனவரி 14-ம் தேதி படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது. ஜனவரி 14-ம் தேதி என்றால் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. 


நன்றி- த இந்து

1 comments:

'பரிவை' சே.குமார் said...

என்னை அறிந்தால் படத்தைக் காண ஆவலுடன்...