Friday, October 24, 2014

கேணகிறுக்க சிம்மன் - ‘கே.பி.டி. சிரிப்புராஜன். - கிரேசியைக் கேளுங்கள் 4 - மறக்க முடியாத ரசிகர்

‘ஹிண்டு’ கேசவ் வரைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் படம்.
‘ஹிண்டு’ கேசவ் வரைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் படம். 

கிரேசியைக் கேளுங்கள் 4 - மறக்க முடியாத ரசிகர்

கி.மனோகரன், பொள்ளாச்சி. 


‘பழைய ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம்...’ என்ற சத்தம் காணாமலே போய்விட்டதே..?
அந்த Dates (காலம் & பேரீச்சம் பழம்) காணாமலே போய் கால் நூற்றாண்டு ஆச்சு சாமீ. இப்போ ஏது ஈயம் பித்தளையெல்லாம்? எங்கும் பிளாஸ்டிக் மயம்தான். மனசே உடைஞ்சு போனாலும் மாற்று அறுவை சிகிச்சை மூலமா பிளாஸ்டிக் மனசை பொருத்திடுவாங்க போலிருக்கு! 



எஸ்.சித்ரா கணேசன், ஆழ்வார்குறிச்சி.
கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கு... உங்க ஸ்டைலில் பொருள் கூறுக? 


திமுசுக்கட்டை: ஜாமெட்ரிகா (Geometry) லட்சணம்! 

ஜிகர்தண்டா: மதுரை மல்லி மாதிரி… இது மதுரை ஜில்லி. திமிர்தண்டா பேசுறவனையும் ஜிகர்தண்டா குளிர வைக்கும்! 


சாஃப்ட்வேர்: சாஃப்ட்வேரின் தமிழாக்கம் ‘மென்பொருள்’. இது வைரஸ் வராத வரையில் மென்னுதின்னும் அளவுக்கு மாலாடு. வைரஸ் வந்தால் பொருள் விளங்கா உருண்டை. ஆனால், இப்போ மென்பொருளுக்குத்தான் ‘மவுஸு’.



கட்டணக் கழிப்பறை: காசு கொடுத்து காலைக் கடன்பட்டு… கான்ஸ்டி பேஷனில் வேந்தன் கலங்கும் அறை. 


ஆன்ட்டி: அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா. அது மாதிரி அங்கிளுக்கு மீசை முளைக்கலேன்னா ஆன்ட்டி. 


உணவகம் நில்லாப் பேருந்து: இது பஸ் இல்லை. ப்ளஸ் டூ பரீட்சையைப் போல் பசி வயித்தைப் புரட்டும் சிலபஸ். 



அருள், சென்னை-17 

 
கந்தையானாலும் கசக்கிக் கட்டலாமா..?
துவைக்கும்போது அந்தத் துணி கந்தையாகும் அளவுக்கு ஏன் வெறித்தனமாக கசக்க வேண்டும்? ‘கந்தையாக்காமல் கசக்கிக் கட்டு’ இது என் புதுமொழி! 



ஜெ.சம்சுதீன், லட்சுமாங்குடி. 


 
‘இம்சை அரசன் 23-ம் புலிக்கேசி’போல புதிதாக ஒரு படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்? 



‘கே.பி.டி. சிரிப்புராஜன். எண்பதுகளில் ‘ஜூனியர் விகடன்’ இதழில் நான் எழுதிய நகைச்சுவை சரித்திர கதை இது. ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனும், இணையாசிரியர் மதனும், ‘உங்களுக்கு சரித்திரம் தெரியுமா?’ என்று கேட்க, அடியேன் உடனே ‘சோழ தேசத்தை ஆண்டவர்கள் சோழர்கள், சேர தேசத்தை ஆண்டவர்கள் சேரர்கள், பாண்டிய தேசத்தை ஆண்டவர்கள் பாண்டியர்கள்’ என்று, எனது சரித்திரத் தரித்திரத்தை சொன்னவுடன், இருவரும் ‘சபாஷ்! இவ்வளவு சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே…. நீங்கள் ஏன் ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதக் கூடாது’ என்று சொல்லி, என்னை எழுதக் கட்டளையிட்டார்கள். பித்து பிடிச்சான்பாளையம் என்கிற ஊரை ஆண்ட ’கேணகிறுக்க சிம்மன்’ என்கிற குறுநில மன்னனின் மகன் ‘சிரிப்பு ராஜன்’ கதையை எழுதினேன். 



திவ்யா, விழுப்புரம். 



உங்கள் நாடகத்தை ரசித்தவர்களில் உங்களால் மறக்க முடியாதவர்..? 



1984-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். கிரேசி குழுவினருக்கு மும்பை ‘ஷண்முகானந்தா’ சபாவில் நாடகம் போடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்களில் மும்பைக்காரர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள். மைனர் குழு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமே. 



அந்த சமயம் பார்த்து எங்கள் நாடக கதாநாயகி திருமணம் செய்துகொண்டு விலக, புதிதாக வேறு ஒரு சுந்தரத் தெலுங்கியை நாயகியாக்கினோம். நாடக ஒத்திகை முழுக்கவும் ‘மாது’ என்பதை அவள் தாய் மொழியில் ‘லேது’ என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். 



அப்போது எங்கள் நாடக ஒத்திகையை ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனின் தாய்மொழி தெலுங்கு என்பதால், அந்த நாயகி ‘மாது’வை ‘லேது’ என்று சொல்லும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தான். அப்போதே அந்தச் சிறுவன் நாடு முழுவதும் ரொம்ப பாப்புலரான இளம் இசை மேதை. இன்று தெய்வமாகிவிட்ட அந்த மேதை யார் என்பதை ‘ஹிண்டு’ கேசவ் சித்திரமாக வரைந்துள்ளதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 






அந்த ‘இளம் இசை மேதை’க்காக நான் எழுதிய இரங்கல் வெண்பா இது: 



‘மாண்டலின் கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
ஆண்டவன் கட்டளை ஆதலால் - மாண்டலின் (அமரராகி)
ஆனாரே; வாசிக்கப் போனாரே வைகுண்டம்
ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’. 



மா.மோகன், திருத்துறைப்பூண்டி.
ஆண்களிடம் எதைக் கேட்கலாம்? பெண்களிடம் எதைக் கேட்கக் கூடாது?
ஆண்களிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், ஆண்களிடம் கேட்ட எதையும் பெண்களிடம் கேட்கக் கூடாது! 



எஸ்.கோமதி, திருநெல்வேலி.
‘சூப்பர்’ புரியுது. அது என்ன ‘டூப்பர்’?
சொல் வீரன் ‘சூப்பர்’. அதை நடை முறையில் செய்து காட்டும் செயல் வீரன் 'DOப்பர்'. 



ரமேஷ், சேலம்
உங்களால் மறக்க முடியாத தீபாவளி?
1952 அக்டோபர் 16-ம் தேதி வந்த தீபாவளி. ஆனால், அன்றைக்கு நடந்ததெல்லாம் எனக்கு மறந்துவிட்டது. பிறந்த குழந்தைக்கு எப்படி சார் ஞாபகம் இருக்கும்? ஆம், அன்றுதான் அடியேன் பிறந்தேன். பிறந்த குழந்தை அழ வேண்டும் அல்லவா? எனவே... ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்பது மாறி, அன்றைக்கு ‘நான் அழுதால் தீபாவளி’ என்றானது. 



சீனுவாசன், மதுரை.
சீரியஸாக ஒரு கேள்வி. பாரதப் பிரதமர் மோடியின் ‘சுகாதார இந்தியா இயக்கம்’ பற்றி… என்ன நினைக்கிறீர்கள்?
உடம்பு ‘பெருக்காமல்’ இருக்க பீச்சில் வாக்கிங் போகிறோம். அதே பீச்சைப் ‘பெருக்கினால்’ உடம்பும் லீன் ஆக இருக்கும்… ஊரும் கிளீன் ஆக இருக்கும். இதற்கு பிரதமரே முன்‘மோடி’ யாக (முன்னோடி) இருப்பது தான் மகத்தான விஷயம்!
- கேட்போம்…
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள - [email protected]



நன்றி - த இந்து 

0 comments: