Sunday, September 28, 2014

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு -UPDATES

நிகழ்நேரப் பதிவு நிறைவு.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைப்பு
8.15 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், ஜெயலலிதா பெங்களூரில் பரப்பன அக்ராஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் பெற விரும்பினால் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில்தான் அவர் மனு செய்ய முடியும். இப்போது தசரா விடுமுறை நாட்கள் என்பதால் அக்டோபர் 6-ஆம் தேதி முடியும் வரை அவர் காத்திருக்க வேண்டும்.
4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களும் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
6.45 PM: பெரம்பலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வீட்டை அதிமுகவினர் கல்வீசித் தாக்கியதை அடுத்து திமுக-அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்குதல் நடத்திக் கொண்டனர். பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்த 50 அடி திமுக கொடிக் கம்பம் சாய்க்கப்பட்டு அதன் சிமெண்ட் அடித்தளம் முற்றிலும் பெயர்த்து எறியப்பட்டது. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. சாலை மறியல் செய்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
6.30PM: சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இதே நிலைதான். பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

6.20 PM: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்ததால், விருதுநகரில் அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்தார்.
6.15 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்கும்போதே தண்டிக்கப்பட்டதால் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
6.00 PM: ராஜ்பவனில் ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்த தமிழக டி.ஜி.பி. போலீஸ் கமிஷனர், தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவரித்தனர்.
5.52 PM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், தமிழக நிலவரம் குறித்து ஆலோசிக்க மாநில போலீஸ் டி.ஜி.பி., மாநகர போலீஸ் ஆணையர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆளுநர் ரோசைய்யாவை சந்திக்க விரைந்தனர்.
5.14 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
5.05 PM: சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. | தீர்ப்பின் முழு விவரத்துக்கு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

 
5.00 PM: பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
4.56 PM: பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றம் அருகே இருந்த அதிமுகவினர் அனைவரையும் பெங்களூரு போலீஸார் வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
4.37 PM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் எதிரொலியாக எழும் அடிப்படைக் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் இதோ
4.25 PM: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. ஊழியர்கள் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
4.22 PM: பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருத்து தெரிவித்துள்ளது.|
4.20 PM: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்ததால் மாநிலம் முழுவதும் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
4.17 PM: காஞ்சிபுரத்தில் பேருந்து எரிக்கப்பட்டது. அதைத் தீயணைப்புப் படையினர் அணைத்தனர். யாரும் காயமடையவில்லை.| படம்: கோபாலகிருஷ்ணன்
4.15 PM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் காத்திருப்பவர்கள் அமைதியாகவே இருக்கின்றனர். ஓசூர் சாலையிலும் கூட்டம் கலைந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமுகமாக இருக்கிறது.
4.10 PM: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து சென்னை அம்பத்தூரில் பேருந்து எரிக்கப்பட்டது.
4.05 PM: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பதற்றம் நிலவுகிறது. புதுச்சேரியில் அமைதியான சூழல் நிலவினாலும், அங்கிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
4.00 PM: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் மதுராந்தகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
3.55 PM: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை, இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
3.40 PM: சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டின் முன் திமுக தொண்டர்கள் உருட்டுக்கட்டைகள், இரும்புக் கம்பிகள் ஏந்தியவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3.35 PM: சென்னை ராயப்பேட்டை லாய்ட்ஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக மகளிர் அணியினர் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
3.30 PM: திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் செல்லும் பாதை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கருணாநிதிக்கு சாதகமாக போலீஸார் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தனர்.
3.28 PM: சென்னை ராயப்பேட்டை லாய்ட்ஸ் சாலையில் அதிமுக மகளிரணியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15.25 PM: சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டினுள் நுழைய அதிமுகவினர் முயற்சி செய்தனர். இதனால் அங்கு குவிந்திருந்த திமுக தொண்டர்களுக்கும் - அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலரருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி வீட்டின் மேல் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
2.52 PM: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
2.50 PM: மதுரையில் ஆங்காங்கே கல் வீச்சு சம்பங்கள் நடந்துள்ளன. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன.
2.50 PM: ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பதற்றம் நிலவுகிறது. கடைகளை மூடுமாறு அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். பலர் தாங்களாகவே முன் வந்து கடைகளை மூடினர்.
2.47 PM: ஜெயலலிதா குற்றவாளி தீர்ப்பு எதிரொலி: கோவையில் வாகனங்கள் அடித்து உடைப்பு, அதிமுக-வினர் ரகளை. அவினாசி சாலையில் அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு கூடியிருக்கும் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2.45 PM: சென்னையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அதிமுக மகளிர் அணியினர் நீதிமன்ற தீர்ப்பு வெளியானதில் இருந்து கதறி அழுது வருகின்றனர்.
2.40 PM: தீர்ப்பு வழங்கப்பட்டபோது எதிர்தரப்பு வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என வாதிட்டார். அப்போது ஜெயலலிதா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
1988, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13(2), 13(1)(e) கீழ் ஜெயலலிதாவுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனையும், அதிக பட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
2.35 PM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங், 'தி இந்து'விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்படும்.
'முதல்வர் பதவியை இழக்கிறார் ஜெயலலிதா'
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது" என்றார்.
2.25 PM: ஜெயலலிதாவின் கூட்டாளிகள் சசிகலா, வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் 1988, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
2.22 PM : சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவர் பதவியை இழக்கிறார்.
2:20 PM: சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு துவங்குகிறது.
2.10 PM: உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பகல் 3 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும்.
2.05 PM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தில் காலையில் இருந்த மகிழ்ச்சிக் கொண்ட்டாடம் சற்று குறைந்துள்ளது. அதிமுக தொண்டர்கள் சற்று அமைதியுடன் காணப்படுகின்றனர்.
2.02 PM: பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை வழங்கப்படும் என்ற தொனியில் ட்விட்டரில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். 'Jail for jaya = jj' என அவர் பதிவு செய்துள்ளார்.
1.53 PM: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகப் போவதை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1.40 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சென்னையில் பல இடங்களில் அரசு கேபிள் சேவையில் செய்திச் சேனல்கள் பல இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.37PM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால், திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கோரப்பட்டது. இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1.30 PM: போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டருகே 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்துள்ளனர். தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணியன் சுவாமி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் போஸ்டர்களை கிழித்தெரிந்தனர்.
1.25 PM: ஓசூர் செக்போஸ்டில், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உருவ பொம்மைகளை அதிமுகவினர் எரித்து வருகின்றனர்.
1.20 PM: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களை அப்புறப்படுத்த கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1.17 PM: தீர்ப்பு வழங்கப்படாத நிலையிலும், திமுக தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உற்சாகமாக காணப்படுகின்றனர்.
1.15 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சென்னை போயஸ் கார்டனில், திமுக தலைவர் கருணாநிதி உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர்.
12.55 PM: நீதிமன்ற வளாகத்திற்குள் 4 வேன்களில் 500 போலீஸார் சென்றுள்ளனர். நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்றுள்ளன.
12.47 PM: தமிழக-கர்நாடக எல்லையில், ஓசூர் கூட்டு ரோடில், தடுப்பு வேலிகளை உடைத்து கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்ற அதிமுகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
12.35 PM: தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில், கர்நாடக போலீஸார் 1000-க்கும் மேற்பட்டோரும், தமிழக போலீஸார் 500 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கொடி ஏந்திய கார்கள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
12.30 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் இருந்து அவர் விடுபடுவார். தவிர, திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டது என்ற ஜெயலலிதாவின் வாதமும் வலுப்பெறும்.
12.18 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், சென்னை அதிமுக தலைமை கழகத்தில் அக்கட்சித் தொண்டர்கள் இனிப்புகள், பட்டாசுகளுடன் குவிந்துள்ளனர். விடுதலை...விடுதலை... என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.
12.10 PM: பரப்பன அக்ரஹார நீதிமன்ற பகுதிக்குள் செல்ல போலீஸ் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிக்குள் அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
11.58 AM: நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் ஜேமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது.
11.49 AM: நீதிமன்றத்திற்குள் இருந்து வெளியே வந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியும் வெகு நேரமாக தொலைபேசியில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
11.46 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவின் உதவி வழக்கறிஞர் திவாகரன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
11.40 AM: முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் உடனடியாக எம்.எல்.ஏ. தகுதியை இழப்பார். அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படும்.
11.20 AM: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி டி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறார்.
11.05 AM: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நீதிமன்றத்திற்குள் சென்றார்.
11.02 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதி டி.குன்ஹா நீதிமன்றத்திற்குள் சென்றார். அவரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகினர். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.
11.00 AM: அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பா.மோகன் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்கு 1 கி.மீ தூரம் நடந்தே வந்தடைந்தனர்.
10.55 AM: ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தனர்.
10.54 AM: நீதிமன்ற வளாகத்துக்குள் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீஸார் அவரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
10.50 AM: சரியாக 10.42 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா காரில் இருக்கிறார். அவருடன் சசிகலா, இளவரசியும் உள்ளனர். 10.55 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
10.45 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், ஓசூர் சாலையில், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
10: 38 AM: நீதிமன்றத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பச்சை நிற சேலை உடுத்தியிருந்தார். பச்சை நிறம் அவரது ராசியான நிறம் என்பது கவனிக்கத்தக்கது.
10.35 AM: வி.வி.ஐ.பி. பாஸ்கள் அளிக்கப்பட்ட அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள், பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
10.29 AM: நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் வந்தடைந்தனர்.
10.24 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய மூவரும் ஒரே காரில் பரப்பன அக்ரஹார நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
10.15 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ தூரத்திலேயே நிறுத்தப்பட்டன. செய்தி சேகரிப்பதற்காக நீதிமன்றத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் செய்தியாளர்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
10.10AM: நீதிமன்ற வளாகத்திற்குள், அதிமுகவினர் மதுரை ராஜன் செல்லப்பா, முத்துராமலிங்கம், சசிகலா புஷ்பா, செங்கோட்டையன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம் அமைச்சர்கள் செலூர் ராஜூ, மாதரவரம் மூர்த்தி, வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, ரமணா, சின்னையா, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் எம்.பி.,சரோஜா, காஞ்சி பன்னீர் செல்வம் மற்றும் எம்.பி.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10.05 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் பெங்களூரில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். அதேவேளையில், சென்னையில் அதிமுக தலைமைக் கழகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
10.00 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.குன்ஹா பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார்.
9.58 AM: செய்தியாளர்கள் வாகனங்கள் 3 கி.மீ. தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து செய்தியாளர்கள நடந்து செல்கின்றனர்.
9.54 AM: பரப்பன அக்ராஹாரா பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் கடைகள் மூடல்.
9.48 AM: முக்கியப் புள்ளிகள் வாகனங்கள் கூட ஒரு கி.மீ-க்கு முன்னதாகவே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து அவர்கள் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9.45 AM: போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. அதிமுகவினர் மற்றும் அக்கட்சி வழக்கறிஞர்களுக்கு வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அனைவரையும் நடந்து செல்லுமாறே போலீஸார் வலியுறுத்துகின்றனர்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் செல்லும் வழியில் ஓசூர் சாலையில் அதிமுக தொண்டர்கள் குவிந்ததால், கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
9.40 AM: பெங்களூர் மடிவாலா முதல் எலக்டரானிக் சிட்டி வரையிலான 5 கி.மீ. தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
9.08 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதால், பெங்களூரில் அவர் வரும் வழி முழுவதும் கட்-அவுட், பேனர்களை அதிமுக-வினர் வைத்துள்ளனர்.
9.06 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்திற்குள் தங்களை அனுமதிக்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட அதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூர் நீதிமன்ற வளாகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு.
8.41 AM: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, சிறப்பு நீதிமன்ற கட்டிடம் அமைந்துள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறை வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8.41 AM: சென்னை - போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் புறப்பட்டனர்.
பெங்களூர் புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா. | படம்: கே.வீ.ஸ்ரீனிவாசன்
8.40 AM: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் இணைக்கப் பட்டுள்ள நமது எம்ஜிஆர், ஜெயா என்டர்பிரைசஸ் உள்ளிட்ட 32 தனியார் நிறுவனங்கள் மீதும் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. | படிக்க - 
வரலாறு காணாத பாதுகாப்பு
சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூரில் குவிந்துள்ளதால் நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தமிழக எல்லையான ஓசூரில் தங்கியுள்ளனர். 6000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக எல்லையில் இருந்து பெங்களூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக் கப்படுகின்றன. பஸ், ரயில் மற்றும் விமானம் மூலமாக பெங்களூர் வரும் அனைத்து பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நீதிபதி டி'குன்ஹாவின் அசராத அணுகுமுறை
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும், அசராத அணுகு முறையும் உள்ளது.
 
thanx  - the hindu

0 comments: