Saturday, September 06, 2014

பட்டைய கெளப்பணும் பாண்டியா - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், ‛பரோட்டா சூரி' துணையுடன் விதார்த், காமெடியில் கெளப்ப நினைத்திருக்கும் படம் தான் ‛‛பட்டைய கெளப்பணும் பாண்டியா'' படம் மொத்தமும்!

ஒற்றை, ஓட்டை மினி பஸ்சை வைத்துக் கொண்டு சொகுசு ‛ஆ'மினி பஸ்களுக்கு சொந்தக்காரராக துடிக்கும் பஸ் முதலாளி இமான் அண்ணாச்சி!அவரது மினி பஸ்சில் முறையே டிரைவராகவும், கண்டக்டராகவும் வேலை பார்க்கும் ‛காமெடி' சகோதரர்கள் நாயகர் விதார்த்தும், ‛பரோட்டா' சூரியும்!

பழனிக்கும் - பாப்பம்பட்டிக்கும் டெய்லி நான்கு டிரிப் அடிக்கும் அந்த மினி பஸ், தினமும் இரண்டு டிரிபிலாவது பஞ்சர், வண்டி பிரேக் டவுன், டீசல் இல்லை, கூட்டமில்லை... என்று ரோட்டோரம் நின்று விடுவது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் டிரைவர் விதார்த்தின் சின்சியர் காதலுக்காகவும், நர்ஸ் காதலிக்காவும், காத்திருந்து காத்திருந்து காலதாமதமாக, ‛ட்ரிப்' அடிப்பதாலும், தினமும் கலெக்ஷன் காசை விட செலவு ஜாஸ்தியாகி இமான் அண்ணாச்சியின் ‛ஆ'மினி பஸ் கனவில் மண் அள்ளிப்போடுகிறது அந்த மினி பஸ்!

இந்நிலையில் டிரைவர் விதார்த் விழுந்து விழுந்து... காதலித்தாலும் திரும்பிக்கூட பார்க்க மறுக்கிறார் கதாநாயகி கண்மணி எனும் மனீஷா யாதவ். காரணம் அவரது ‛ஆஸ்துமா' அம்மா, கண் தெரியாதா அக்கா எனும் தமிழ் சினிமாவின் வழக்கமான டிராஜிடி பேமிலி பேக்ரவுண்ட்! அப்புறம் அப்புறமென்ன.? கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, இஷ்டப்பட்ட நாயகியின் கண் தெரியாத அக்காவுக்கு சக டிரைவரை மாப்பிள்ளையாக்கி, அவர்களது குடும்ப கஷ்டத்தை போக்கி டிரைவர் விதார்த், விரும்பிய பெண்ணை கைபிடிப்பதும், அவருக்கு கண்டக்டரும் உடன்பிறந்த தம்பியுமான சூரி துணை நிற்பதும் தான் ‛பட்டைய கெளப்பணும் பாண்டியா' படத்தின் மொத்த கதையும்! இவர்களது லட்சியத்திற்கு எல்லா விதத்திலும் உதவிபுரியும் மினிபஸ் முதலாளி இமான் அண்ணாச்சியின் ‛ஆ'மினி பஸ் கனவு இறுதிவரை நிறைவேறவில்லை என்பது ஹீ., ஹீ... கிளைக்கதை! அவ்வளவே!!

விதார்த், வேல்பாண்டியனாக ஆடுகிறார், பாடுகிறார், பஸ் ஓட்டுகிறார், ஹீரோயினை விழுந்து விழுந்து லவ் பண்ணுகிறார்... ஆனால் இண்டர்வெல் வரை கதாநாயகியின் மனதில் ஒட்ட மறுத்தாலும், ரசிகர்களின் மனதில் பச்சக் என ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பக்காவாக நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பின் கதாநாயகியின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் விதார்த், ரசிகர்கள் நெஞ்சில் இருந்து பிய்த்துக் கொண்டு போகிறார். காரணம் முன்பாதி முழுக்க சூரியும், இவரும் பண்ணும் காமெடி, படத்தை தூக்கி நிறுத்துகிறது. பின்பாதி டிராஜிடி, வழக்கமான பாணியிலேயே படமாக்கப்பட்டிருப்பதால் சற்றே சலிப்பு தட்டுகிறது. வித்தியாசத்தை விரும்பும் விதார்த்தும், வித்தியாசமான விதார்த்தை விரும்பும் ரசிகர்களும் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் கோட்டை விட்டிருப்பதால் ‛கொட்டாவி' விடுகின்றனர். ஆனாலும் விதார்த்தின் நடிப்பில் நல்ல துடிப்பு!

வழக்கு எண் 18/9 படத்தின் அறிமுக நாயகி மனீஷா யாதவ் தான் இப்படத்திலும் நாயகி. அம்மணி, முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பிலும், துடிப்பிலும் மிஞ்சி இருக்கிறார். கண்மணியான இவரது பேமிலி பேக்ரவுண்ட் கண்ணீரை வரவழைப்பது காமெடி படத்திற்கு ப்ளஸ்ஸா மைனஸ்ஸா தெரியவில்லை!

‛பரோட்டா' சூரி தான் படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஓப்பனிங் சீனில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை மனிதர் திறந்த வாயை மூடவில்லை, ரசிகர்களும் தான்!

இளவரசு, இமான் அண்ணாச்சி, ஜெயபிரகாஷ், முத்துக்காளை என ஏகப்பட்டோர் நடித்திருந்தாலும், மனதில் நிற்பது சூரிக்கு அப்புறம் கோவை சரளாவும், இமான் அண்ணாச்சியும் தான்!

அருள் தேவின் இசை, டிஎம் வேந்தரின் ஒளிப்பதிவு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தாலும், நாயகர் விதார்த்துக்கு, ‛வருத்தப்படாத வாலிபர் சங்கம்' சிவகார்த்திகேயன்(போஸ் பாண்டி) மாதிரி வேல்பாண்டி எனும் பெயரும், ‛ஜன்னல் ஓரம்' படம் மாதிரி, பஸ், பழனி மலை பேக்ரவுண்ட் என அரைத்த மாவையே அரைத்திருப்பதில் ‛பட்டைய கெளப்பணும் பாண்டியா' எஸ்.பி.ராஜ்குமாரின் இயக்கத்தில் காமெடியைத்தவிர மற்ற விஷயங்களில் கோட்டை விட்டிருப்பதாகவே தோன்றுகிறது!

ஆகமொத்தத்தில், ‛பட்டைய கெளப்பணும் பாண்டியா' - முன்பாதி பட்டைய கெளப்புகிறது - பின்பாதி கொட்டாவியை கிளப்புகிறது!
 
 
 
 thanx  - dinamalar 

0 comments: