Tuesday, July 01, 2014

தேசிய டாக்டர்கள் தினம்

மாட்டுவண்டி மட்டுமே ஓடிக் கொண்டிருந்த காலம் தொட்டு, உலகையே வாகனமாக மாற்றிய சமீபகாலம் வரை... மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் மாறாமல் இருப்பது டாக்டர்களுக்கு மட்டும் தான்.சட்டை அணியாத வெள்ளை மனிதர்கள் முதல் கோட், சூட் அணிந்த நாகரிக மனிதர்கள் வரை, இடம், பொருள், கவுரவம் பார்க்காமல் 'கையெடுத்து கும்பிடுவது' டாக்டர்களைத் தான். ஜூலை 1, தேசிய டாக்டர்கள் தினம். விபத்துக்களும், இறப்புகளும் பெருகிய நிலையில், தினம் தினம் மனித சதையோடும், உறவினர்களின் உணர்வுக் குவியலோடும் வாழ்க்கை நடத்தும் டாக்டர்களின் சேவையை நினைவுகூறுவது அவசியம்.சேவைக்கு மரியாதை தரும் டாக்டர்களின் உன்னத அனுபவங்களை, அவர்களே கூறுகின்றனர்.
டாக்டருக்கு உயிர் கொடுத்தேன்!


டாக்டர் கே.ஜி.ஸ்ரீனிவாசன், கே.ஜி., ஸ்கேன் மையத் தலைவர், மதுரை: ஸ்கேன் பார்ப்பதை சிலர் தவறாக நினைக்கின்றனர். அந்தக்காலத்தில் இந்த வசதி இல்லை. ஒரு நோயாளியின் உடல்நிலையை, ஸ்கேன் பரிசோதனை முடிவுகளை வைத்து உடனடியாக சொல்லிவிடலாம். எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர், மாலை 4 மணிக்கு பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாதத்தில் கை, கால் இழுத்துக் கொண்டது. அவரை உடனடியாக 'எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, மூளைக்குச் செல்லும் ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. ஸ்கேன் பரிசோதனையின் போது, நோயாளிக்கு குறிப்பிட்ட மருந்து செலுத்தி தான் பார்க்க முடியும். ஆனால் இவருக்கு 87 வயது, சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் வரலாம் என்பதால், மருந்து செலுத்தாமல் பார்த்தோம். சரியான நேரத்தில் பிரச்னையை கண்டுபிடித்ததால் உடனடியாக 'த்ராம்போலைஸ்' முறையில் அடைப்பு சரிசெய்யப்பட்டது. அதிகபட்சமாக 87 வயதில் இந்த சிகிச்சை இவருக்கு தான் செய்யப்பட்டது.இரண்டு மணி நேரத்தில் கை, கால் சரியாகி, மாலை 6 மணிக்கு தானாக சாப்பிட்டார். இப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். ஒரு டாக்டரை காப்பாற்றியதன் மூலம், ஒருலட்சம் நோயாளிகளை காப்பாற்றிய உணர்வு ஏற்பட்டது.
இந்தியில் வாழ்த்தியது மறக்காது:


டாக்டர் ஏ.சீனிவாசன், ஆரம்ப சுகாதார நிலையம், தாடிக்கொம்பு:1997ல் பழநி சென்று விட்டு பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் அந்த பஸ்சில் பயணித்தனர். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பஸ்சை மருந்துக்கடை அருகில் நிறுத்தச் சொல்லி மாத்திரை வாங்கி, அவரது நாக்கின் கீழ்பகுதியில் வைத்தேன். மாரடைப்பை தடுக்கும் ஊசி போட்டேன். இருதயத்தை நன்றாக அழுத்தி, மூச்சு வரவழைத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அவர் குடும்பத்தினர் இந்தியில் என்னை வாழ்த்தியது இப்போதும் நினைவில் உள்ளது.2007ல் திண்டுக்கல்லில் கடும் மழை, அகரம் பாலம் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. நள்ளிரவில் பிரசவவலி ஏற்பட்ட பெண்ணை பாலத்தைத் தாண்டி கொண்டுவர முடியவில்லை. தகவல் கிடைத்ததும், காரை எடுத்து சென்று கர்ப்பிணியை அழைத்து வந்தேன். வெள்ளத்தில் எனது காரும் சிக்கியது. கஷ்டப்பட்டு பாலத்தை கடந்த போது அப்பெண்ணிற்கு பனிக்குடம் உடைந்தது. வேறுவழியின்றி காரிலேயே பிரசவம் பார்த்தேன். இப்போது பார்த்தாலும் அந்த குடும்பத்தினர் என்னை வாழ்த்துவர்.
மலக்குடலை அறுத்த 'போலி டாக்டர்':


கே.கதிர்காமு, அறுவை சிகிச்சை துறைத்தலைவர், அரசு மருத்துவக் கல்லூரி, தேனி: ஏழை கர்ப்பிணி, போலி டாக்டரிடம் பிரசவம் பார்த்துள்ளார். அந்தப் பெண், கர்ப்பிணியின் மலக்குடலை பிறப்புறுப்பு வழியாக உருவி அறுத்து விட்டார். ரத்தமும், மலமும் வெளியேறியதால் பதறிப்போய், வேறு மருத்துவமனைக்கு போகச் சொல்லிவிட்டார். குழந்தையும் வயிற்றுக்குள் இறந்து விட்டது. தாய் எந்த நிமிடமும் இறந்து விடும் அபாய நிலையில் இங்கு கொண்டு வந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, இறந்த குழந்தையை அகற்றினேன். மலக்குடலை அடிவயிற்றுடன் இணைத்து மலம், தற்காலிகமாக வேறு பாதையில் வெளியேற ஏற்பாடு செய்தேன். புண் ஆறிய பின் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, மலக்குடலை இணைத்து, இயற்கையான பாதையில் வெளியேற ஏற்பாடு செய்தேன். அதன் பின் அந்த பெண் குழந்தை பெற்று தற்போதும் நல்ல முறையில் வாழ்கிறார்.
மயங்கி விழுந்த இளம்பெண்:


டாக்டர் டி.ஞானக்குமார், அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம்: 20 வயது பெண் வயிறு வீங்கி நாடித்துடிப்பு, ரத்த அளவு, அழுத்தம் குறைந்த நிலை யில் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டார். அவரை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம். சி.டி., 'ஸ்கேன்' எடுக்கும் போதே மயங்கி விழுந்தார். பரிசோதனையில் அவரின் இரைப்பையில் சிறு ஓட்டை இருந்தது தெரிந்தது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தபின், அந்த பெண் கண் விழித்தார். அப்போது தான், என் தலைமையில் பணியாற்றிய மருத்துவக் குழுவினர் மகிழ்ச்சியடைந்தோம். இது போன்ற சம்பவம், என் மருத்துவ சேவையில் மறக்க முடியாதது.
இறக்கும் தருவாயில் சிறுவர்கள்:


பி.எல்.சரவணன், சர்க்கரை நோய் நிபுணர், சிவகங்கை: திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்தபோது, கண்டனூரைச்சேர்ந்த இரண்டு வயது சிறுவன் 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, இறக்கும் தருவாயில் என்னிடம் வந்தான். அவனுக்கு சிகிச்சை அளித்து, காப்பாற்றியது என் நினைவில் நீங்காத ஒன்று. தற்போது அந்த மாணவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு இன்று வரை, இலவச சிகிச்சை அளித்து வருகிறேன். இதே போல் 20-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு, சர்க்கரை நோய் தொடர்பான இலவச சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களிடம் வரும் நோயாளிகளின் நிலைமை தெரியாது என்பதால், நாங்கள் மருந்து எழுதி கொடுக்கும் சீட்டிலேயே, 'வசதி இல்லாதவர்கள் முடிந்ததை கொடுக்கலாம்' என குறிப்பிட்டுள்ளோம். ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக, என் வருமானத்தில் 20 சதவீதத்தை செலவிடுகிறேன். வசதி படைத்தவர்களின் பங்களிப்பு மூலம், ஏழை குழந்தைகளுக்கு உதவுகிறோம். 'இவரால் பெற்ற உதவி' என்பதை உணர்த்தும் வகையில், மருந்து சீட்டில் விபரங்கள் குறிப்பிட்டிருப்போம்.
இரவில் தேள்கடி; காலையில் பசி:


பி.ரவி, குழந்தைகள் நலம், விருதுநகர்: பத்தாண்டுகளுக்கு முன் மருத்துவமனை பணியில் இருந்த போது, காலை 7 மணிக்கு, மூச்சுவிட முடியாமல் திணறிய இரண்டு வயது குழந்தையை, பெற்றோர்கள் தூக்கி வந்தனர். கண்கள் செருகி இருந்தது. சோதித்து பார்த்த போது, பவுடர் டப்பா மூடியை விழுங்கி இருந்தது. மூடியை வெளியே எடுத்ததும், குழந்தை பிழைத்தது. தற்போது அந்த குழந்தை, ஆண்டுக்கொரு முறை வந்து, என்னை பார்த்துச் செல்கிறது. இதேபோல் 12 ஆண்டுகளுக்கு முன், ஒரு குழந்தைக்கு தேள் கடித்தது. இரவில் நல்லமழை, ஜெனரேட்டரும் இல்லை. மெழுகுவர்த்தி மூலம், இரவு முழுவதும் சிகிச்சை அளித்தேன். காலையில் கண் விழித்து பசிக்கிறது என்ற போது, மனம் சந்தோஷத்தில் நிறைந்தது.



நன்றி  - தினமலர்

0 comments: