Sunday, July 13, 2014

காமராஜர் ஒரு கட்சியின் அடையாளமல்ல’: இயக்குநர் பாலகிருஷ்ணன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி வெளியிட்டவர் இயக்குநர் பாலகிருஷ்ணன். அப்போது அந்தப் படம் சரியாக போகாத நிலையில் அதில் மீண்டும் சில காட்சிகளைச் சேர்த்து புதிதாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாலகிருஷ்ணன். இந்நிலையில் அவரைச் சந்தித்தோம். 



‘காமராஜ்’ படத்தை மீண்டும் வெளியிடுவதற்கு என்ன காரணம்? 

 
கடந்த முறை இந்தப் படத்தை வெளியிட்டபோது அது சரியான வகையில் மக்களைச் சென்று அடையவில்லை. பத்திரிகையாளர்கள் பாராட்டினாலும் படம் சரியாக போகவில்லை. படத்தை எடுத்து முடித்ததோடு எங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து நாங்களும் சும்மா இருந்துவிட்டோம்.


‘காமராஜ்’ படம் அப்போது மக்களைச் சென்று அடையாததற்கு அதுவும் ஒரு காரணம். அந்தப் படம் மக்களைச் சென்று அடையவேண்டும் என்பதற்காக இப்போது மீண்டும் அதை மெருகேற்றி வெளியிடுகிறோம்.

இந்த முறை எந்தெந்த காட்சிகளைப் புதிதாக சேர்த்திருக்கிறீர்கள்? 


 
கடந்த முறை படம் வெளிவந்ததும் நிறைய கருத்துக்கள் வந்தன. படத்தில் டெல்லி அரசியலை காட்டவில்லை என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. அதேபோல் கடந்தமுறை படத்தை வெளியிட்டபோது அதைப் பார்த்த ஒருவர் எனக்கு போன் செய்தார். “இந்தப் படத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் விட்டு விட்டீர்கள். காமராஜர் இறந்ததும் அவரது வீட்டை சோதனை செய்யும் அதிகாரியாக நான்தான் சென்றேன்.


அவருக்கென்று எந்த சொத்தும் கிடையாது. அவரது கார் டி.வி.எஸ் கொடுத்தது, வீடு - நடராஜன் கொடுத்தது(வாடகை வீடு), அவருக்கு சொந்தமாக 110 ரூபாய் மட்டுமே இருந்தது. இதைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டீர்களே” என்றார்.


அவற்றையெல்லாம் இந்த முறை ‘காமராஜ்’ படத்தில் பதிவு செய்துள்ளோம். அந்த அதிகாரியாகத் தான் இயக்குநர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். 15 நிமிடங்களுக்கு மேல் இவருடைய காட்சிகள் இருக்கும். அது போக 15 நிமிடங்கள் வேறு சில காட்சிகள் இருக்கும். மொத்தம் 30 நிமிட காட்சிகளை புதிதாக சேர்த்திருக்கிறோம்.

முதல் முறை வெளியான ‘காமராஜ்’ படத்தில் காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்துவிட்டார். அதனால் அவருடைய மகன் பிரதீப் மதுரம் இந்த படத்தில் காமராஜராக நடித்திருக்கிறார்.

இப்போதுள்ள அரசியல் தலைவர்களோடு ஒப்பீடுகையில் காமராஜர் எப்படிப்பட்ட தலைவர்? 

 
இப்போதுள்ள அரசியல் தலைவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் காமராஜர். அரசியல்வாதி என்றால் மக்களுக்கு சேவை செய்பவர் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் காமராஜரிடம், “நீங்க முதல்வரா இருக்கீங்களே. உங்களுக்கு அந்தப் பதவி பிடித்திருக்கிறதா” என்று கேட்டுள்ளார். அதற்கு காமராஜர், “யாருக்குப்பா வேணும் அந்த பதவி? தொரட்டி பிடிச்ச வேலை அது. எவன் பார்ப்பான் அதை. ஒரே தொந்தரவு. என்ன, இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுது. அதனால் மட்டுமே அந்த வேலையில் இருக்கேன்” என்று கூறியுள்ளார்.


காமராஜர் என்றைக்குமே பதவியைத் தேடிப் போனதில்லை. அவர் ஒரு கட்சியின் அடையாளம் அல்ல. தூய்மையின் அடையாளம். அவரிடம் காங்கிரஸ்காரர், தமிழன் இப்படி எந்த அடையாளத்தை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

தூய்மையான அரசியலின் வடிவம்தான் காமராஜர். இனி வரும் அரசியல்வாதிகளும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் பணிக்காக உருவாக்கப்பட்டதுதான் முதல்வர் பதவி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

‘காமராஜ்’ படம் முதல் முறை சரியாக போகவில்லை என்கிறீர்கள். இரண்டாவது முறை எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறீர்கள்? 


 
இந்த படம் முதலில் பண்ணும் போது பட்ட கடனையே இன்னும் அடைக்க வில்லை. 80 லட்ச ரூபாயில் செய்த படம் 30 லட்ச ரூபாய்தான் வசூல் செய்தது. அதனால் 50 லட்ச ரூபாய் கடனாகி விட்டது. திருமணமாகாதவன் என்பதால் என்னால் அதைச் சமாளிக்க முடிந்தது. பணத்தை விட காமராஜரைப் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.


காமராஜரைப் பற்றிய புது விஷயங்களைச் சேர்த்து, இம்முறை நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையோடு இந்தப் படத்தை வெளியிடுகிறோம். என் பணியை நான் சரியாக செய்திருக்கிறேன். ஒடவில்லை என்றால், சிறிது காலம் கழித்து இன்னொரு முறை முயற்சி செய்வேன்.


அடுத்ததாக என்ன படம் செய்யப் போகிறீர்கள்? 

 
‘காமராஜ்’ படத்திற்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவைப் பற்றி ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சகோதரர்களாக இருக்கவேண்டிய இரு நாட்டு மக்களிடையே ஏன் இடைவெளி கூடிக்கொண்டே போகிறது என்பதைச் சொல்லும் படமாக இது இருக்கும்.


thanx - the hindu

0 comments: