Saturday, June 28, 2014

Oba Nathuwa Oba Ekka" - சினிமா விமர்சனம் (இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்களப்படம்)

'வித் யூ, வித்அவுட் யூ' சர்ச்சைக்குரிய படமா?- ஒரு சிறப்புப் பார்வை

வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்புடன் 2012-ல் வெளியாகி சர்வதேச விழாக்களில் பல விருதுகளை அள்ளிக் குவித்த படம்தான், இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படம். 
 

'டைரக்டர்ஸ் ரேர்' என்ற தலைப்பில் சர்வதேச விழாக்களுக்கு செல்லும் படங்களை, பி.வி.ஆர் நிறுவனம் இந்தியா முழுவதும் விநியோகம் செய்து வந்தனர். அந்த வகையில், சென்ற வாரம் அவர்களால் வெளியிடப்பட இருந்த இப்படம், சர்ச்சைக்குள் சிக்கி பாதுகாப்பு குறித்த காரணங்களால் சென்னைத் திரையரங்குகளிலிருந்து ஞாயிறு அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. 



இலங்கை அரசால் முதலில் தடைசெய்யப்பட்டு, பிறகு வெளியிடப்பட்ட இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோஸில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ஸ்டூடியோ அமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது. 


சர்ச்சைக்குரிய விஷயங்கள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? இப்படம் இலங்கைத் தமிழர்களை தவறாக சித்தரிக்கிறதா? என்ற தேடல் படம் பார்க்க வந்த பலரிடமும் தெரிந்தது. இவர்களைத் தவிர சினிமா ஆர்வலர்களும் படத்திற்கு வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் சீட்டில் அமர்ந்தும், இடம் கிடைக்காத நூற்றுக்கணக்கானோர் நின்றபடியும் இப்படத்தைப் பார்த்தனர். 



போருக்குப் பிந்தைய கதை

 
உள்ளூர் ரசிகர்கள் எளிதில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் உள்ளதால், இப்படத்தின் கதையை விவரிக்க விரும்புகிறேன். எப்போதும் ஒரு கதை, வாழ்வில் நடந்த நிகழ்வுகளாய் சொல்லப்படும்போது, அது ஒரு மையக் கதாப்பாத்திரத்தின் துணையினால் சொல்லப்படுவதுண்டு. இயக்குனர் அக்கதாப்பாத்திரத்தின் வாயிலாக, தாம் கூற நினைத்ததை கூறிவிடுவார். சரத்சிறி எனும் நடுத்தர வயது சிங்களத்தவர் பார்வையிலே இப்படத்தின் கதை துவங்குகிறது. உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலம். 



தமிழர்களும் வாழும் மலைப்பகுதியில் அடகு கடை நடத்தி வரும் அவர் முகத்தில் எப்போதும் அவமானம், இழிவுணர்ச்சி, இனம் புரியாத வெறுமை. பைக்கில் ஏறி பயணம் செய்வது, நகைகளை வாங்கிக்கொண்டு பணம் தருவது, தொலைக்காட்சியில் டபிள்யூ.டபிள்யூ.எஃப் சண்டையைப் பார்ப்பது. இதுதான் இவரின் வாடிக்கை. 


தன் கடைக்கு நகைகளை அடகு வைக்க வரும் செல்வி (தமிழ்ப் பெண்) மீது இவருக்கு ஈர்ப்பு. உறவுகளை, உடமைகளை இழந்து நிற்கும் செல்வி தன் சொந்த ஊரான யாழ்பாணத்திலிருந்து விலகி வந்து தன் இனத்தவர் நடத்தி வரும் ஓர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். 


வறுமையால் வயது முதிந்தவரை மணக்க வேண்டியச் சூழல். இதை அறியும் சரத், செல்வியிடம் தன் காதலை கூறி, தன் வாழ்க்கைத் துணைவியாக வருமாறு வேண்டுகிறான். இனம், மதப் பிரிவினையும் கடந்து இவர்கள் இணைகின்றனர். இவ்விருவரும் மணம் முடிக்கும் இப்படலத்திலிருந்து படத்தின் மையக்கதை துவங்குகிறது. 


இதுவரை சரத் வாழ்வில் பரவிக் கிடந்த தனிமை, செல்வியின் வருகையால் உடைகிறது. தான் தேடிய ஏதோ ஒன்றிற்கான விடையை அவளிடம் காண்கிறான். தனியே சென்ற மோட்டார் பயணங்கள் இப்போது டபுள்ஸாக மாறுகிறது. வசதியான வாழ்க்கை செல்வியையும் முதலில் ஈர்க்கிறது. வீட்டில் ஆடலுடன் புன்னகை சிந்திடும் செல்வியினால், சரத் ஆறுதல் காண்கிறான். இருவரும் கட்டிலறையில் காதல் கொள்கிறார்கள். 

 
கணவனுடன் தன் ஆசைகளைப் பகிரத் தொடங்கும் செல்வி, தான் கடந்த பாதையை, தன் சின்ன சின்ன ஆசைகளை கூறத் தொடங்குகிறாள். இதற்கெல்லாம் அவன் செவிசாய்க்கவில்லை, இவன் தேடிய ஒன்றை மட்டும் அவளிடம் எப்போதும் கண்டான். அவளைக் கண்டிட இவன் மனம் விழையவில்லை. சரத்துடைய பின்னணியை அறிய நினைக்கும் செல்விக்கு அவனிடமிருந்து விடை கிடைக்காமலே இருந்தது. 


இவள் பார்க்கும்போதெல்லாம் அவன் கடையில் இருப்பான், இல்லை சோகம், சந்தோஷம், பூரிப்பு எதையும் பிரதிபலிக்காத ஒரு முகத்துடன் தொலைக்காட்சியில் சண்டைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு மண வாழ்க்கைக்குரிய உணர்ச்சிப் பரிமாற்றம் இருவரிடமும் நடக்காமலே இருந்தது. 


இப்படி வழக்கமாக செல்லும் இவர்களின் வாழ்க்கை சரத்துடன் வேலை பார்த்த நண்பன் வீட்டிற்கு வர மாற்றம் காண்கிறது. அந்நண்பர் செல்வியிடம் யதேச்சையாக உரையாடல் கொள்ள, அப்போது அவள் கணவனின் கடந்த காலத்தை பற்றி கூறுகிறான். தன் கணவன் சிங்களப் படையில் ஒரு ராணுவ வீரனாக இருந்தது செல்விக்கு தெரிய வருகிறது. 



உறவு, உடமைகளை இழந்து நிற்கும் செல்வியால், தன் இனத்தவரை அழித்தவருக்கு மனைவியாக இருக்கின்ற நிலையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தக் கடந்த காலத்தின் கசப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள், செந்நீரால் மனதில் தீட்டப்பட்டிருந்த கோலம் இருவரின் வாழ்க்கையை கரையானாய் கசிக்கத் தொடங்கியது. சரத், தான் கடந்த காலத்தில் செய்த இழிவிற்கு பிராயச்சித்தம் தேடும் பொருட்டு செல்வியை மணந்திருக்கிறார்.


செல்வி: நீ எத்தனை அப்பாவிகளை கொன்றிருக்கிறாய், எத்தனைப் பெண்களின் கற்புச் சிதைவிற்கு காரணமாக இருந்திருக்கிறாய்? 


சரத்: (இது எதற்கும் பதில் கூற முடியாத நிலையில்) நான் என் கடமையை மட்டும் செய்தேன். 
 

செல்வி: உன்னைப் போன்றவர்களால் நான் என் அப்பாவித் தம்பிகளை இழந்தேன், பெற்றோரைத் தொலைத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் என்னிடம் முன்பே உன்னைப் பற்றிக் கூறவில்லை? 

சரத்: ஏன் நான் ஒரு ராணுவ வீரன் என்று தெரிந்திருந்தால் என்னை மணந்திருக்க மாட்டாயா? 


செல்வி: நிச்சயமாக மாட்டேன்! 


இப்படியே நீண்டு கொண்டே செல்லும் உரையாடல் இருவரின் வாழ்க்கையில் பிளவினை ஏற்படுத்துகிறது. ஜன்னலை நோக்கி அமைந்திருக்கும் இருக்கையில் வானத்தை பார்த்தபடியே நீண்ட நேரங்கள் அமர்ந்தபடி இருக்கும் செல்வி தன் கணவனின் கடந்தகால வாழ்க்கை தெரிந்த பிறகு ஜீவனற்று போகிறாள். விலகிச் செல்லும் இவளிடம் அன்பைக் காட்டுகிறான், கதறி அழுகிறான், பரிவாக மனம் உடைந்து பேசுகையில், தன் நண்பர்கள் இணைந்து ஒரு அப்பாவிப் பெண்ணின் கற்பை சூரையாடியதையும், நண்பர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காக்க, அதை தான் மறைத்த உண்மையையும் அவளிடம் சரத் உரைக்கிறான். 


உண்மை செல்வியை உறையச் செய்கிறது. தான் செய்த தவறை உணர்ந்து வருந்தி வாழும் தன் கணவனை தண்டிக்க செல்விக்கு மனமில்லை. இருப்பினும் தான், தன் இனத்தவர் தன் கணவன் நண்பர் போன்றோரால் சந்தித்த இழப்பீடுகள் இவளின் நிம்மதியை சிதைத்துக் கொண்டே வந்தது. அமைதியாக ஜன்னலை பார்த்தபடி அமர்ந்திருந்த இவள், திடீரென்று ஜன்னலின் மீதேறி கீழ் விழுகிறாள். செல்வியுடன் இந்திய செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்த சரத் வழக்கம் போல் தன் பைக்கில் பயணம் செய்து வீடு திரும்பிகிறான். அப்போதுதான் தன் மனைவி தன் உயிரை அழித்துக் கொண்டதை உணர்ந்து கதறுகிறான். 


தான் செய்தது தவறு என்பதை உணராமலே மனிதன் மிருகமாய் மாறியதையும், போருக்குப் பின்பு மக்களின் மனதில் படர்ந்து கிடக்கும் அழியாத வடுக்களை விளக்கும் பொருட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதை போன்றுதான் தோன்றியது. 

 
போரின் பெயரில் அப்பாவி உயிர்களை சூறையாடிவர்கள் தன் இனத்தவரே ஆனாலும், அவர்களின் இழி செயலை உரைக்கும்படி உரைத்த பொருட்டு, தன் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளையும் தாண்டி இப்படி ஒரு படைப்பை திரையுலகிற்கு வைத்த விதத்தில் பிரசன்ன விதானகே சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரம் பெறுகிறார். 


அழகியலும் அரசியலும்

 
போருக்குப் பிந்தைய படங்கள் பலவும் உணர்வுப்பூர்வமாகவே அணுகும் வகையறா கொண்டவையாகவே பெரும்பாலும் இருக்கும். இப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததே. 


ஒவ்வொரு காட்சிகளிலும் அழகியலும் அழுத்தமும் நிறைந்திருப்பது, படத்தின் தரத்தை உலக அளவுக்கு உயர்த்திப் பிடிக்கின்றன. குறிப்பாக, காட்சிகளுக்கு வலுசேர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பின்னணி இசையைச் சொல்லலாம். பெரும்பாலும் மெளன கீதம்தான் கையாளப்பட்டுள்ளது. அதுவே, கதாபாத்திரங்கள் மீதான கவனத்தை அழுத்தமாகப் பதியச் செய்கிறது.
போரின் கொடுமையைச் சொல்வதற்கு படைப்பில் ரத்தம் தெளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இப்படம் நிரூபித்திருக்கிறது. வன்முறைகளை அப்படியே காட்டுவதைவிட, அதனால் ஏற்பட்ட வலியை உணர்வுகளால் உணர்த்துவதுதான் மக்களின் மனதை ஆழமாக தைக்கும் என்பதை அனுபவிக்க முடிகிறது. 


இப்படத்தில் மையக் கதாப்பாத்திரமான முன்னாள் சிங்கள ராணுவ வீரர்தான் ஒட்டுமொத்த சிங்கள ராணுவத்தினரின் பிரதிநிதியா? மற்றொரு மையக் கதாப்பாத்திரமான செல்விதான், எஞ்சியிருக்கும் தமிழர்களின் பிரதிநிதியா? - இப்படி ஒரு கேள்வி எழக்கூடும். அப்படி இல்லை என்பதை படத்தின் கதையும், திரைக்கதையும் உணர்த்திவிடுகின்றன. 


ராணுவத்தில் இருக்கும் ஒருவன் தன் கடமையைத்தான் செய்தேன் என்று சுலபமாகத் தப்பித்துக்கொள்ளும் சராசரி மனிதனைக்காட்டிலும் பிறருக்கு இழைத்த கொடுமைகள் மனதில் கரையானை அரிக்க குற்ற உணர்வு கொள்ளும் ஒரு மனிதார்த்த உணர்வுகளைக் கொண்ட மனிதனாகவே அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடியாதா? 


தன் குற்ற உணர்வில் இருந்து விடுபடுவதற்காக, தனக்கு மனைவியான தமிழ்ப் பெண்ணின் காலைப் பிடித்துக் கதறி மன்னிப்புக் கோரும் சரத்-தின் செயல் உணர்த்துவது என்ன? 


வீட்டில் மர்மப் பெட்டியில் இருக்கும் துப்பாக்கியை அவ்வப்போது பார்க்கும் செல்வி, தனது கணவனின் முந்தைய வாழ்க்கை தெரியவந்ததும் அந்தத் துப்பாக்கியை வைத்து அவரை கொல்ல முற்பட்டுத் தோற்பதன் மூலம் சொல்ல வருவது என்ன? 


தன் தவறுகளை மன்னித்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியவளுடன், புதிய வாழ்க்கையைத் தொடர மகிழ்ச்சியுடன் முனைகிறான் சரத். ஆனால், தன் கணவரின் மனநிலையைப் புரிந்துகொண்டாலும், அவனுடன் எஞ்சி இருக்கும் காலத்தில் வசதியுடன் வாழ முற்படாமல், தன் இனத்தவரின் வலியைச் சுமந்துகொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்த செல்வியின் செய்கை உணர்த்துவது என்ன? 



கடைசி வரை செல்வியின் எண்ண ஓட்டத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்திடாத இயலாமையில் வழக்கமான குற்ற உணர்வுடன் கூடிய தனிமை வாழ்க்கைக்கு நகரும் சரத் மூலம் சொல்ல முற்படுவது என்ன? 


இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் இப்படம், அவரவர் மனநிலை, ரசனை, அறிதலுக்கு ஏற்ப அந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடிக்கொள்ளவும், அடுத்தகட்ட நகர்வுக்கான விவாதத்தைத் தூண்டவும் சொல்கிறது இந்தப் படைப்பு. 


மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றை காதல் எப்போதும் கடந்து வெற்றிகொள்ளும் திரைப்படங்களை பார்த்துப் பழகியவர்களுக்கு, காதலும்கூட இனம், மொழி ஆகியவற்றுக்குள்ளே செயல்படும் உறவுகளை மீறி வெற்றிகொள்ளாது என்பதைக் கூறும் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்வது சற்று சிரமம்தான். 


நன்றி - த இந்து

0 comments: