Thursday, June 12, 2014

அது வேற இது வேற - சினிமா விமர்சனம் ( மா தோ ம)

தினமலர் விமர்சனம்

கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன், புதுமுகம் வர்ஷன், சானியதாரா ஜோடி இணைந்து காமெடி(!) பண்ணியிருக்கும் படம் தான் ''அதுவேற இதுவேற''.

கதைப்படி, 'பாட்ஷா' ரஜினி, 'நாயகன்' கமல் மாதிரி நியாயமான தாதாவாகி அநியாயங்களை தட்டி கேட்க வேண்டும் என்ற ஆசையில், ஊரில் இருந்து சென்னைக்கு வருகிறார் புதுமுகம் வர்ஷன். வந்த இடத்தில் போலீஸ் ஏட்டாக இருக்கும் சித்தப்பா இமான் அண்ணாச்சியுடன் தங்கும் வர்ஷன், ஊர்காரரும் உறவுக்காரருமான கஞ்சா கருப்புவின் ஐடியாபடி தாதாவாக போராட, நமக்கு கடியாகத்தெரியும் அந்த காமெடி முயற்சிகள் எல்லாம் தோல்வியைத் தழுவுகிறது.

ஒருகட்டத்தில் வர்ஷனின் தாதா ஆசை தெரிந்து அவரது ஏட்டு சித்தப்பா, தங்களது ஸ்டேஷன் பீட்டில் நடந்த ஒரு கொலையை வர்ஷன்தான் செய்ததாக அண்ணன் மகனை ஜெயிலுக்கு அனுப்பி தாதாவாக்க முயலுகிறார். விளையாட்டு வினையாகிறது. நிரந்தர கைதியாகும் வர்ஷன், சிறையிலிருந்து தப்பித்து காதலி சானியாதாராவுக்கும், சமூகத்திற்கு தான் கொலையாளி இல்லை... என்பதை சொல்லி குற்றவாளியை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தான் நிரபராதி என்பதை நிரூபிப்பது தான் 'அதுவேற இதுவேற' படத்தின் மொத்த கதையும்! இதை ரொம்பவும் மெத்தனமாக சொல்லியிருப்பது தான் இப்படத்தின் பெரும் பலவீனம்.

அறிமுக நாயகர் வர்ஷன் ரொமான்ஸ், டான்ஸ், காமெடி, கலாட்டா என புகுந்து விளையாடி இருக்கிறார். ஆனால், நடிப்பு தான் அவரையும், நம்மையும் ஒரு சேர வம்பிற்கிழுக்கிறது. பாவம்!

நாயகி சானியாதாரா. பெயர் ஒரு மாதிரியாக இருந்தாலும், பில்-டப்பாக இருக்கிறார். கவர்ச்சியில் கூச்ச நாச்சமில்லாமல் அடித்து தூள் பரத்துகிறார் பலே, பலே!

ஏட்டு சித்தப்பா இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, தியாகு என ஏகப்பட்ட சிரிப்பு நட்சத்திரங்கள், இருந்தும் சிரிப்பு மட்டும் வர மறுக்கிறது. தளபதி தினேஷ், பொன்னம்பலம், ஷகிலா உள்ளிட்டோர் ஆறுதல்!

தாஜ்நூரின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் தான் படத்தின் பெரும் பலம்! ரவிஷங்கரின் ஒளிப்பதிவும், ஓ.கே!

எம்.தியாகராஜனின் எழுத்து-இயக்கத்தில் மலிவான காமெடிகள் மலிந்து கிடப்பது சற்றே சலிப்பு தட்டுகிறது. அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், ''அதுவேற இதுவேற'' - ''காமெடி பாதி, கமர்ஷியல் மீதி!''

thanx - dinamalar 

  • நடிகர் : வர்ஷன்
  • நடிகை : சான்யதாரா
  • இயக்குனர் :எம்.தியாகராஜன்

0 comments: