Monday, May 19, 2014

மிருனாள் சென் - வங்காள சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் - ஒரு பார்வை

 கான் நகர கடற்கரையில் மிருனாள் சென்

மிருனாள் சென் பிறந்த நாள்: மே 14 - முன்னுதாரணம் இல்லாத போராளி

நாடகங்களுக்கு மாற்றாக சினிமா இந்திய நகரங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டம். வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரிதாபூர் என்னும் ஒரு சிறிய நகரத்தின் திரையரங்கு ஒன்றில் சரத் சந்தர் சட்டர்ஜியின் சோக காவியமான தேவதாஸ் வெளியாகியிருந்தது. திரையரங்கில் திரண்டிருந்த மக்களுக்குப் பெரும் கிளர்ச்சி. அந்தக் கூட்டத்தில் இருந்த சிறுவன் ஒருவன், தன் நண்பர்களுடன் அந்தப் புது அனுபவத்தில் மூழ்கித் திளைத்திருந்தான். குளோஸ் அப் காட்சி வரும்போதெல்லாம் அவன் நண்பர்கள் திரை சிறியதாக இருப்பதால் கைகால்கள் தெரியாமல் போகிறது எனப் பேசிக்கொண்டனர். 



ஆனால் அதில் ஏதோ புரிபடாத நுட்பம் இருப்பதாகவே அந்தச் சிறுவன் நம்பினான். அந்தச் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை ஒவ்வொரு நொடியாக உள்வாங்கினான். தேவதாஸும் பார்வதியும் கைகோத்தபடி செல்லும்போது திடீரென எங்கிருந்தோ மழை பொழிவது அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மழைத் துளிகள், அந்தக் காதலர்களின் காலடி ஓசையைப் போல் கூரையில் உடைந்து சிதறும் ஓசையையும் அவன் நுட்பமாக வாங்கிக்கொண்டான். இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவரெனப் போற்றப்படும் மிருனாள் சென், சினிமாவின் நுட்பங்களை இவ்வாறுதான் உள்வாங்கினேன் என்கிறார். “எல்லோருடைய குழந்தைப் பருவ வாழ்க்கையைப் போன்றதுதான் என்னுடையது. அது வண்ணமயமானதோ கறுப்பு வெள்ளையானதோ அல்ல” என்கிறார் அவர். 



மிருணாள் சென், 1923, மே 14-ல் பிறந்தவர். அவரது தந்தை தினேஷ் சந்திராவும் தாய் சரஜூபாலாவும் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களாக இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு எப்போதும் புதுப் புது ஆட்கள் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் புரட்சியாளர்கள் என்பது சிறுவனான மிருணாள் சென்னுக்கு அப்போது தெரியாது. சென்னின் தந்தை மிகப் பிரபலமான வழக்கறிஞர். தன் வாதத் திறமையெல்லாம் விடுதலைப் போராட்ட வீரர்களை மீட்பதற்காகவே செலவிட்டதால் பெரிய பொருளாதார லாபத்தை அடைய முடியவில்லை. அதுபோலப் புரட்சியாளர்களை மீட்பதிலும் அவரால் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை. ஆனாலும் சென்னின் கண்களுக்கு தினேஷ் சந்திரா ஒரு நாயகனாகத் தெரிந்தார். சென் வளர்ந்தது இந்தப் பின்னணியில்தான். 



சென் வளர்ந்து பதின்ம வயதைத் தொடும் அவரது அரசியல் பார்வைகள் விரிவடைந்தன. ஸ்பானியப் போர் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்த அந்தக் காலகட்டதில் பாசிஸத்திற்கு எதிராக எழுதிவந்த எர்னஸ்டா ஹெமிங்வே, ஸ்டீபன் ஸ்பிளண்டர் ஆகியோரின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டார். சமூகத்தில் இருந்த வர்க்கப் பாகுபாடுகளைப் பற்றி அறிந்தார். அப்போதுதான் கம்யூனிசக் கொள்கைகள் மீது சென்னுக்கு ஈடுபாடு தோன்றியது. அத்துடன் அவருக்குச் சினிமா ஆர்வமும் வந்தது. 



1950களில் மிருணாள் சென் முழுமையாக சினிமாவில் பணியாற்றத் தொடங்கினார். கம்யூனிசமும் சினிமாவும் சென்னின் இரு கண்களாக இருந்தன. அவரது தொடக்க காலப் படங்களில் சென் தன் கம்யூனிசக் கொள்ளைகளை வெளிப்படுத்தினார். அவரது முதல் படமான ராட் போர் தோல்வியைச் சந்தித்தது. அவரது இரண்டாவது படமான நீல் அக்ஸாய் நீச்சே அதன் காத்திரமான கருத்துகளால் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் பிறகு மிருணாள் சென் நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் படங்களை எடுத்தார். அவரது மூன்றாவது படமான BaisheyShravana சென்னுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. சென்னின் படங்கள் நடுத்தர வர்க்கப் பிரச்சினைகளையும் அதன் காரணகாரிங்களையும் அம்பலப்படுத்தின. அவரது சினிமாவில் தென்படும் ஒரு குழப்பமான மொழியே நடுத்தர வர்க்கத்தின் தெளிவின்மையின் வெளிப்பாடுதான். 



1969-ல் வெளிவந்த Bhuvan Shome மிருனாள் சென்னை சினிமா ஆளுமையாக மாற்றியது. இது வங்க எழுத்தாளர் பனாபூலின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மனித உறவுகளை ஆழமாகச் சித்திரிக்கும் இப்படம் வர்க்கப் பாகுபாடுகளையும் பேசுகிறது. இது தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தயாரித்த முதல் படம். இதற்கு அடுத்த அவர் எடுத்த Calcutta 71போன்ற படங்கள் அவரது கம்யூனிசக் கொளைகளைப் பறைசாற்றின. அதைத் தொடர்ந்து பல படங்கள் செய்தாலும் 2003இல் வெளிவந்த Aamar Bhuban அவருக்கு மீண்டும் பெரும் பெயரைத் தேடித் தந்தது. 



பொதுவாக சென்னின் படங்கள் சூட்சுமமானவை தோற்றத்தில் வடிவத்திலும். இந்த அம்சம் அவரது படங்களின் பலமாகவும் பலவீனமுமாகச் சொல்லப்படுகிறது.பெரும்பாலான படங்களை அவர் தான் படித்த கதைகளின் அடிப்படையில் உருவாக்குகிறார். ஆனால் அவை படங்களுக்கு ஆதாரமானவை அல்ல. அவை படத்தைத் தொடங்குவதற்கான ஊக்கி மட்டுமே. பிறகு அந்தப் படமே தன் கதையை எழுதிக்கொள்ளும் என்கிறார் சென். 


இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய நான்கு மொழிகளில் சென் படங்களை இயக்கியுள்ளார். கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ, சிக்காக்கோ, கய்ரோ உள்ளிட பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு இவரது படங்கள் விருதுகள் பெற்றுள்ளன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகிப் பால்கே விருது, இந்திய அரசின் பத்ம பூஷன் உள்ளிட பல விருதுகளையும் பெற்றுள்ளார். 


இளம் வயதில் சென் ஸ்டியோவிற்குள் வேலை தேடி வந்தபோது அவரிடம் போதிய பணம் இல்லை. அவர் யாருடைய கலை வாரிசும் அல்ல. அவருக்கு குரு எனச் சொல்லிக்கொள்ளவும் யாரும் இல்லை. போதிய தொழில்நுட்ப அறிவும் இருந்திருக்கவில்லை. ஆனால் அவர் தன் தனிப்பட்ட ஆளுமையால் இந்தியாவின் முக்கியமான சினிமா ஆளுமையாக உருவெடுத்துள்ளார். அதனால்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த சினிமா விமர்சகர் டெரக் மால்கம் சொல்கிறார், “மிருனாள் சென் துணிச்சலுக்கும் எழுச்சிக்குமான உருவகமாகவும் இளைஞர்களுக்கான முன்னுதாரணமாகவும் இருக்கிறார். அவரின் இந்த எழுச்சி வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.” 



0 comments: