Wednesday, April 09, 2014

‘E.T. the Extra-Terrestrial’

விண்வெளி மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 


பிரபஞ்சத்தில் பூமி மாதிரியே இருக்கிற வேறு பல கிரகங்களிலும் மனிதர்களைப் போல உயிரினங்கள் இருப்பதாகவும் சொல்லப் படுகின்றன. விண்வெளி மனிதர்கள் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் நாம் புத்தகத்தில் படித்திருப்போம். அப்படிப்பட்ட விண்வெளி மனிதர்களின் குட்டிக் குழந்தை ஒன்று உங்கள் வீட்டுக்கு வந்தால் எப்படி இருக்கும்?


அமெரிக்காவில் கலிபோர்னியா நகருக்கு அருகில் உள்ள காட்டில் அதுபோல ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்குகிறது. அதிலிருந்து ஏலியன்ஸ் என அழைக்கப்படும் விண்வெளி மனிதர்கள் இறங்குகிறார்கள். 


அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்? பூமியைக் குறித்துச் ஆராய்ச்சி செய்வதற்காக. நம் பூமியில் இருப்பவர்களை செவ்வாய் கிரகத்திற்கு எல்லாம் அனுப்பி விண்வெளி ஆராய்ச்சி செய்கிறோம் அல்லவா? அதுபோல. 



பூமியில் உள்ள தாவரங்களைப் பறித்துக்கொண்டிருக்கும்போது திடீரென மனிதர்கள் வந்துவிடுகிறார்கள். ஏலியன்கள் எல்லாம் மனிதர்களிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் படபடவென ஓடிப் பறக்கும் தட்டுக்குள் ஏறிக்கொள்கின்றன. 


அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு ஏலியன் குட்டி ஓடி வருவதற்குள் அவசரத்தில் மற்ற ஏலியன்கள் பறந்துவிடுகின்றன. ஏலியன்களைத் துரத்தி வந்த மனிதர்களின் கண்களில் அந்த ஏலியன் குட்டி சிக்கிக்கொள்ள, அது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஓடி ஒளிகிறது. 



கடைசியாக எலியட் என்ற ஒரு சிறுவனுடைய வீட்டிற்குள் வந்துவிடுகிறது. அவனுக்கு ஏலியனைப் பிடித்துப்போய்விடுகிறது. அவன் சொல்வதை யெல்லாம் அது சொல்கிறது. அது அவனுக்கு விளையாட்டு பொம்மையைப் போல் தெரிகிறது. 


உடம்பு சரியில்லை என அம்மாவிடம் பொய் சொல்லி ஸ்கூலுக்குப் போகாமல் வீட்டில் இருந்து கொண்டு ஏலியன் குட்டியுடன் பொழுதைக் கழிக்கிறான். அவன் தங்கை கெர்டிக்கும் அதை ரகசியமாக அறிமுகப்படுத்துகிறான். 



அவன் தங்கையும் அவனும் சேர்ந்து அந்த ஏலியன் குட்டியை அவர்கள் அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து வளர்க்கிறார்கள். அதற்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள். அம்மா, தங்களுக்குக் கொடுக்கும் உணவை அதற்குக் கொடுக்கிறார்கள். தங்கள் ஆடைகளை அதற்கு மாட்டி அழகுபார்க்கிறார்கள். அதுவும் அவர்களுடன் சந்தோஷமாக விளையாடுகிறது.



ஆனாலும் அந்த ஏலியன் குட்டிக்குத் தங்கள் கிரகத்திற்குப் போகும் ஆசையும் இருக்கிறது. எலியட்டுக்கும் கெரிடிக்கும் விளையாட்டுத் தோழனாக ஆகிவிட்ட ஏலியனை விட்டுப் பிரிய இஷ்டமில்லை. 


ஒரு பக்கம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சிக்காகக் குட்டி ஏலியனைத் தேடுகிறார்கள். இன்னொரு பக்கம் ராணுவமும் ஏலியனைத் தேடுகிறது. 


குட்டி ஏலியன் என்ன ஆனது என்பதை ‘E.T. the Extra-Terrestrial’ படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி - த இந்து

0 comments: