Tuesday, April 08, 2014

தனிக்கட்சி - அழகிரி பர பரப்பு பேட்டி @ த ஹிந்து

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை; திமுக வெற்றி குறித்து கிண்டல் - அழகிரி பேட்டி


நாமக்கல்லில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறும்போது, திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவது `அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா கதைதான்’ என்றார்.


சேலம் விநாயகா மிஷன்ஸ் தலைவர் சண்முகசுந்தரம் சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திங்கள்கிழமை நேரில் வந்து ஆறுதல் கூறினார்.


பின், அவர் நிருபர்களிடம் கூறும்போது, விநாயகா மிஷன் தலைவர் சண்முகசுந்தரம் எனது நீண்டகால நண்பர். அவர் உயிருடன் இருக்கும்போதே வந்து சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது முடியாமல் போய்விட்டது. இரங்கல் தெரிவிக்க மட்டுமே வந்துள்ளேன். இதில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என்று கூறினார்.


பின்னர் நாமக்கல்லில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தனிக்கட்சி தொடங்குவது குறித்து கட்சியினர் தங்களது கருத்துக்களை கூறினர். அதில் கட்சியினர் பலரும் தனிக்கட்சி தொடங்க வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், நாமக்கல் திமுக ஒன்றிய செயலாளர் பி.கணேசன் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


பின்னர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


அனைத்து கட்சியை சேர்ந்தோர் ஆதரவு கேட்டு வருகின்றனர். யாருக்கு ஆதரவு என்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறேன். இன்னும் நான்கைந்து மாவட்டங் களில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளேன். தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அந்த எண்ணம் எனக்கு இல்லை. கட்சித் தலைமை என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கருணாநிதியை சூழ்ந்துள்ள பலரது சூழ்ச்சியால் ஏற்பட்ட முடிவாகும்.


முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வனும், நானும் இணைந்து செயல்படவில்லை. பிரிந்துதான் செயல்பட்டோம். திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவது ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா கதைதான்’ அதை அப்புறம் பார்ப்போம். எந்த கட்சி வெற்றி பெறும் என்ற ஜோசியம் எனக்குத் தெரியாது’’ என்றார்.

நன்றி-த ஹிந்து

0 comments: