Sunday, March 23, 2014

பகத் சிங்கின் இறுதி நாள்...( WITHOUT FEAR -THE LIFE & TRIAL OF BAKATH SINGH)


புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்! 

 
லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள். 



பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார். 



கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள். ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது. எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். 



தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார். 



“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.” 



ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா? 


 
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார். 



அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.” 



நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார். 



பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.” 



சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார். 



மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள். 



பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.
“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார். 


தூக்குமேடை நோக்கி... 


 
மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள். 



“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும்
இது எங்கள் மண்ணாக இருக்கும்
இது எங்கள் வானமாக இருக்கும்
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்
மக்கள் கூடுவார்கள்
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு
மரியாதை செலுத்துவார்கள்.” 



மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங். 



“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங். 



தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார். 



அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார். 



சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 



புரட்சியால் மட்டுமே முடியும்! 


 
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். 



சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு. பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது. 


 பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார். 


ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்: 



“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.” 


பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங். 



இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும். 



குல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

 
thanx -the tamil hindu

  • rajesh  
    Lal Salam..comrade Bhagat Singh..
    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Kannan  from Suri
    புரட்சியாளர்கள் புதைக்கபடுவது இல்லை.. விதைக்கபடுகிறார்கள்.. புரட்சி ஓங்குக..
    about 4 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • s.c.jeganathan c  from Rajapalayam
    யாரையும் இறுதிவரை காடிகொடுகாமல்,மரணத்தை புன்னகையோடு தழுவிய ஒரு உண்மையான போராளியின் இறுதி நிமிடங்கள் சிலிர்க்க வைக்கின்றன.இன்று என்னால் நிம்மதியாக உறங்க முடியாது.
    about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • manimaran  from Singapore
    மனிதன் என்பவன் நெடுநாள் கனவுடன் வாழ பகத்சிங் போன்றோர் வாழ்க்கை நம்மை உந்தி தள்ளும்
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Vivekananthan Nainar  from Noida
    நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும் இது எங்கள் மண்ணாக இருக்கும் இது எங்கள் வானமாக இருக்கும் தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில் மக்கள் கூடுவார்கள் மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.”
    about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • கி. Krishnamurthy  
    புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள். இன்று அந்த விதைகள்...செடிகளாய், மரங்களாய், காய்களாய், கனிகளாய் இந்த பரந்த பாரத தேசமெங்கும் பல்கிப் பெருகியுள்ளன. ஏகாதிபத்திய, இன, மத மற்றும் பிராந்திய வெறி சக்திகளிடமிருந்து இந்த பாரத தேசத்தை இந்த இளைஞர் சக்தி நிச்சயம் பாதுகாக்கும்.
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • saam  from Coimbatore
    எம் அருமை போராளிகளுக்கு எங்களது வீர வணக்கங்கள்.... தியாகி. பகத் சின் தன்தாயாருக்கு எழுதிய கடிதத்தில் பயந்தது மட்டும் இன்று 100 % உண்மையாகிவிட்டது....

0 comments: