Saturday, March 15, 2014

இயக்குநர் ஷங்கர் vs இயக்குநர் சமுத்திரக்கனி

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 90களுக்குப் பிறகு சமூக அக்கறையை வெற்றிகரமான வியாபாரமாக மாற்றிய படம் ஜெண்டில் மேன். இதன் இயக்குநர் ஷங்கர் அப்படத்தில் இட ஒதுக்கீட்டை மையமாகக் கொண்டு திரைக்கதையை அமைத்திருந்தார். அந்தப் படத்தின் வணிக வெற்றி தந்த தெம்பிலும் அடையாளத்திலுமே அவரால் இந்தியன், முதல்வன், அந்நியன் போன்ற படங்களை உருவாக்க முடிந்தது. இத்தனைக்கும் ஜெண்டில்மேன் படம் வெளியான காலத்தில் நுழைவுத் தேர்வு முறை மருத்துவ, பொறியியல் படிப்புகளின் சேர்க்கை முறைப்படுத்தப்பட்டிருந்தது.



அரசியல்வாதிகள், அதிகாரிகள், லஞ்சம், ஊழல் ஆகிய விஷயங்கள் மீது வெகுஜனங்களுக்கு எப்போதுமே எரிச்சலும் கோபமும் உண்டு. இந்தச் சமூகக் கோபத்தின் மையத்தைத் தொடும் விதத்தில் திரைக்கதையை அமைத்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்பது ஒரு கணக்கு. இந்தக் கணக்கு ஷங்கர் படங்களைத் தவிர ரமணா, கந்தசாமி உள்ளிட்ட ஒருசில படங்களிலும் தப்பவில்லை.


வெறுமனே பொழுதுபோக்குப் படங்களை எடுப்பதற்குப் பதில் அதில் சமூக அக்கறையான விஷயங்களைச் சேர்க்கும் போது திரைப்படத்திற்கும் தனி நிறம் கிடைக்கிறது, இயக்குநரும் ஆத்ம திருப்தி அடைகிறார். ஆனால் இத்தகைய படங்களை உருவாக்குவது கத்திமேல் நடப்பது போன்றது. பாலுக்கும் காவல் இருக்க வேண்டும் பூனையின் பசியையும் ஆற்ற வேண்டும். இதில் ஷங்கர் கைதேர்ந்தவர். 


ஜெண்டில்மேனில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பிராமணரல்லாத ஒருவர் போராடுவார். ஆனால் அது நண்பனுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகத் திரைக்கதையில் அமைந்திருக்கும். இந்தச் சாமர்த்தியம்தான் ஷங்கருக்கு நாம் பிறந்த மண் என்னும் பழைய திரைப்படத்தை இந்தியன் என்னும் பெரும் வெற்றிப்படமாக மாற்ற ஒத்துழைத்தது. இந்த சட்டகத்தைத் தாண்டி எடுத்த பாய்ஸ் திரைப்படத்தில் அவர் சறுக்கலைச் சந்தித்தார். அதன் பிறகு அந்நியன், சிவாஜி என்று பழையபாதைக்கு வந்தார்.


பொழுதுபோக்குப் படம் என்பதைத் தாண்டி சமூக அக்கறை கொண்ட இயக்குநர் எனக் காட்டிக்கொள்ள ஷங்கர் விழைந்ததில்லை. ஆனால் தயாரிப்பாளராகப் பரிணாமம் எடுத்தபோது மாறுபட்ட படங்களை உருவாக்க உறுதுணையாயிருந்தார். அதனால்தான் வெயில், காதல், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போன்ற படங்களை அவர் தயாரித்தார்.


இயக்குநர்கள் சிலருக்கு வணிக ரீதியான வெற்றிப் படமும் எடுக்க வேண்டும், சமூகப் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. நியாயமான விருப்பம் தான். ஆனால் இரண்டையும் ஒரே படத்தில் நிறைவேற்ற முயலும்போது இயக்குநரின் பணி கடுமையாகிவிடும். திறம்படச் சமாளித்தால் மட்டுமே சமாளிக்க இயலும். அப்படித் தப்பித்த படத்திற்கு எடுத்துக்காட்டாக கமலஹாசனின் கதை, திரைக்கதையில் வெளியான தேவர் மகனைச் சொல்லலாம். இயக்குநர் பரதனின் செய்நேர்த்தி படத்தின் நாயகன் கமலுக்குக் கைகொடுத்தது. பெரும்பாலான இயக்குநர்கள் இப்படியான இரண்டு குதிரைச் சவாரியில் திறனை வெளிப்படுத்த இயலாமல் திணறுகிறார்கள்.


நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அப்படி ஒரு சவாரியை இயக்குநர் சமுத்திரக்கனி மேற்கொண்டுள்ளார். இந்தப் படமும் ஊழலுக்கு எதிரான சமூகக் கோபத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அரவிந்த் சிவசாமி வெளியுலகம் தெரியாமல் ஆசிரமத்தில் வளர்ந்த பிள்ளை. வெளியே வந்து புற உலகில் கலக்கும்போது அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அவனைச் சமூகப் போராளியாக மாற்றுகிறது. சமூகத்தில் புரையோடிய ஊழல் அவனை நேரடியாகப் பாதிக்கிறது. பூனை புலியாய் மாற வேண்டிய நிர்ப்பந்தம். அநீதி கண்டு எரிமலையாகிறான். இயக்குநரின் சமூக அக்கறையை எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. அமலா பால் போன்ற கதாநாயகி இருந்தும் கூட காதல் காட்சிகளில் ருசியில்லை. ஏனெனில் படத்தின் அடிநாதமான சமூகக் கோபம் கொண்ட கதாநாயகனை மடைமாற்ற இயக்குநருக்குப் பிரியமில்லை. ஆனால் இரண்டு குத்துப் பாடல்கள் இடம்பெறுகின்றன.



பொழுதுபோக்கை எதிர்பார்த்து வரும் ரசிகர்களைக் கருத்து சொல்லி ஏமாற்றக் கூடாது என எண்ணி இயக்குநர் மேற்கொண்ட திரைக்கதைப் பயணம் சரியான திசையில் செல்லவில்லை. ஊழலுக்கு எதிரான படம் திரைக்கதைக்குத் தொடர்பே இல்லாமல் இலங்கைத் தமிழர் அனுபவித்த இன்னல்களைப் பேசுகிறது. 


ஆனால் மரண தண்டனையை ஆதரிப்பது போல் கடுமையான தண்டனைகள் இருந்தால் தவறுகள் குறையும் என்கிறது. உலகெங்கிலும் மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையான தண்டனைகள் களையப்பட வேண்டும் எனப் போராடுகிறார்கள். கடுமையான தண்டனைகளால் குற்றங்கள் குறையும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்கள். ஆக ஊழலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் நிதானம் காட்டப்பட்டிருக்க வேண்டும்.



நிதானத்தோடும் ஆழ்ந்த புரிதலோடும் ஊழலெனும் சமூக சிக்கலைக் களையும் வழிமுறைகளில் கவனம் செலுத்தியிருந்தால் இந்தப் படம் இதுவரையான படங்களிலிருந்து மாறுபட்ட படமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


thanx - the hindu


  • sridhar  from Chennai
    அலசல்: திரையில் ஒழியும் ஊழல்? ஆனால் இந்தியவில் ஊழல்ஒழியும்யா ?
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
    •  Rahul kulkarie  
      படம் அருமை ............ஊழலுக்கு எதிரான படம் திரைக்கதைக்குத் தொடர்பே இல்லாமல் இலங்கைத் தமிழர் அனுபவித்த இன்னல்களைப் பேசுகிறது. செல்லப்பா உனக்கு என்ன வைத்த எரிச்சல் இலங்கைத் தமிழர் நிலைமை பற்றி சொன்னால் .

    0 comments: