Friday, March 14, 2014

இளையராஜா, பாலுமகேந்திரா நட்பு பற்றி... கார்த்திக்ராஜா பேட்டி @ த தமிழ் இந்து

இளையராஜாவைப் போலவே எளிமையாக இருக்கிறார் கார்த்திக் ராஜா. மை பூசாத தலை, எளிமையான ஆடை, நெற்றியில் சின்னதாய் குங்குமக்கீற்று. சினிமாவில் கவனம் செலுத்துவதைவிட, தன் தந்தைக்கு உதவியாக இருப்பதையே பெரும் பேறாகக் கருதும் அவரை மதுரையில் சந்தித்தோம். 


யுவன்சங்கர் ராஜா ஒரு பேட்டியில் ‘என்னை விட கார்த்திக்ராஜா திறமையானவர். ஆனால், அவருக்கு நல்ல வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை’ என்று கூறியிருக்கிறாரே? 

 
இல்லவே இல்லை. எனக்குக் கிடைத்ததுதான் சிறந்த வாய்ப்பு. எத்தனையோ இசையமைப்பாளர்கள் அப்பாவோடு வேலை செய்ய முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். கோடி ரூபாய் கொடுத்துகூட அந்த வாய்ப்பைப் பெற பலர் தவம்செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு, பாக்கியம் எனக்குத் தான் கிடைத்துள்ளது. 


உங்கள் சகோதரர் யுவன், வைரமுத்துவுடன் இணைந்துள்ளாரே? 

 
அவர் வைரமுத்துவுடன் இணைவதில் எனக்கு உடன்பாடில்லை. 



அவர் வைரமுத்துவுடன் இணைந்தது மாதிரி, நீங்கள் பாரதிராஜா படத்திற்கு இசையமைப்பீர்களா? 

 
அப்பா ஓ.கே சொன்னால் பண்ணுவேன். அவர் என்கிட்ட வரப் போறதில்லை. நானும் அவர்கிட்ட கேட்கப் போறதில்லை. பிறகெதுக்கு இந்தக் கேள்வி? 


யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கு உங்கள் வீட்டில் என்ன மாதிரியான ரியாக்‌ஷன் இருந்தது? 

 
எங்கள் வீட்டில் எல்லோருமே ஆதரித்தோம். அவர் தோசை சாப்பிட விருப்பப் படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எங்க வீட்டில் தோசையே பண்ண மாட்டாங்க என்றாலும் கூட, அவர் சாப்பிடுறதில ஒன்றும் தப்பில்லையே. அது அவருடைய விருப்பம். அவர் இப்பவும் எங்களுக்கு யுவன்தானே. எங்கள் உறவுகள் அப்படியேதான் இருக்கிறது. 


இளையராஜா, பாலுமகேந்திரா நட்பு பற்றி... 


ஒரு தயாரிப்பாளர், என்னை இசை அமைப்பாளராகவும், பாலுமகேந்திராவை இயக்குநராகவும் வைத்து ஒரு படம் பண்ண ஆசைப்பட்டிருக்கார். அதை பாலு சாரிடம் சொன்னபோது, ‘நோ. ஒன்லி இளையராஜா. அவரோட பையனா இருந்தாக்கூட வேண்டாம். இளையராஜாதான் என் படத்துக்கு மியூசிக் பண்ணுவாரு... பண்ணிக்கிட்டே இருப்பாரு...’ என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு அப்பா மீது அவர் உயிரா இருந்திருக்கார். 



அப்பாவும் அவரைப் பற்றி என்கிட்ட சொல்லியிருக்கார். ‘கடைசி வரைக்கும் என் மேல் உண்மையான அன்போடு இருந்த ஒரே ஆள் அவர்தான். என்ன கதையோ... என்ன சொன்னாரோ... அதில் டீவியேஷன் எதுவும் இல்லாமல் படம் எடுக்கக்கூடிய ஒரே ஆள் பாலுமகேந்திரா தான்’என்று சொல்வார். 


உங்களுக்கு விவரம் தெரிஞ்சப்ப அப்பாவுடன் இருந்த நண்பர்கள் இப்போதும் இருக்கிறார்களா? 

 
இல்லை. யாருமே இல்லை. போட்டி பொறாமையால விலகிட்டாங்க. அப்பா கூட வேலை செய்றது இப்ப நான் மட்டும் தான். யத்தீஸ்வர்(12), ஜெயேஸ்வர்(6) என்ற என்னோட ரெண்டு பசங்களும்தான் அவருக்குப் பிரெண்ட்ஸ்.


அம்மாவின் இழப்பில் இருந்து அப்பா மீண்டுவிட்டாரா? 

 
ஒன்று நல்லாத் தெரிஞ்சுக்கோங்க. அப்பா வீட்லே இருக்க மாட்டாங்க. அப்பாவுக்குத் தொழில்தான் தெய்வம். வீட்டை முழுக்க முழுக்க கவனிச்சிக்கிறது அம்மாதான். அம்மாவோட இழப்பு, அப்பாவுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு. 



ஆரம்பத்துல அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. அப்பாவை ஆன்மிகவாதியாக மாற்றியதே அம்மா தான். கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்ததில் இருந்து, தினமும் பிள்ளையார் படத்துக்கு விளக்கு வைத்து பூப்போடுறதை அம்மா வழக்கமா வெச்சிருந்தாங்க. ஒரு கட்டத்துல அம்மா வழியிலேயே அப்பாவும், பூவை எடுத்து சாமிக்குப் போட்டுவிட்டு, ஆரத்தி காட்டிவிட்டு ஆபீஸ் போக ஆரம்பிச்சாங்க. அப்படி ஆரம்பிச்ச அவரோட ஆன்மிகப் பயணம் இன்னைக்குத் திருவண்ணாமலை வரைக்கும் போயிருக்கு. 


‘உழைப்பாளி’, ‘பொன்னுமணி’ன்னு நிறைய படங்களுக்குப் ‘பின்னணி இசை’ பண்ணியிருக்கீங்க. அதில் தான் அதிக விருப்பம்போல் தெரிகிறதே? 


 
உண்மைதான். எனக்கு பேக்ரவுண்ட் மியூசிக் பண்றதுன்னா ரொம்ப விருப்பம். ஏன்னா அதை மட்டும்தான் படத்தின் இயக்குநர்களால் மாற்ற முடியாது. பாடல்கள் என்றால் அவர்கள் விருப்பத்துக்கு என்னவேண்டுமானாலும் பண்ணிட்டுப் போயிடுவாங்க. 


ஆரம்பத்தில் அப்பாவோட இசையில் கீபோர்டு வாசிச்சீங்க. இப்ப எந்த வகையில் அப்பாவுக்கு உதவுறீங்க? 

 
காலையில் டியூனை மட்டும் கொடுத்து விட்டு அப்பா வெளியில போயிடுவாங்க. திரும்ப அப்பா வரும் போது நான் எல்லாத்தையும் முடிச்சி வெச்சிருப்பேன். கேட்டுட்டு, திருத்தங்கள் மட்டும் சொல்வாரு. ரொம்ப ஈசியா சொல்லிட்டேன்ல. ஆனா, செய்றது ஈஸியான வேலை இல்லை. 

tanx - the hindu



  • Srinivasan  from Chennai
    முதிர்ச்சியான பதில்கள்...
    a day ago ·   (3) ·   (1) ·  reply (0)
  • முருகவேல்.சண்முகம்  from Chennai
    //வைரமுத்துவுடன் இணைவதில் எனக்கு உடன்பாடில்லை/// அப்பாவின் முகம் மட்டுமல்ல, குணம் கூட அப்படியே, பிரச்சினை ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் எனும்போது இவருக்கு விருப்பமில்லை என்பது, தான் அப்பாபிள்ளை என்பதை மீண்டும் தந்தைக்கு உணர்த்த விரும்புவது போன்றத்து.. யுவன் வைரமுத்து நல்ல கூட்டணி, சாதனைபடைக்க ஒரு இசை பிரியன் என்ற முறையில் ஆதரிக்கிறேன், காத்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள் இக்கூட்டணிக்கு..
    a day ago ·   (6) ·   (1) ·  reply (0)
  • syed sulthan  from Chennai
    ஒரு குடும்பத்தில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைதான் மாறுபடுமே தவிர உறவுமுறை அல்ல. குடும்ப உறவுகள் என்றுமே மாயாது. மறையாது. விலகாது.
    a day ago ·   (24) ·   (5) ·  reply (1)
    Sahul Hameed · Rahul kulkarie · Gani  · Habib  · raja   Up Voted
    • Tamilian  from Chennai
      உறவு மாறாது என்பது சரியான வாதம்.ஆனால் பிறந்த வீட்டில் ஒப்பவில்லையெனில் உறவு சரியாக இல்லாமல் போய் விடும் என்பது யதார்த்தம்.
      about 22 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • SIVAKUMAR  
    நல்ல மகன். நல்ல தந்தை. பக்குவமான பேச்சு. பண்பான அடக்கம். தெளிந்த சிந்தனை. தேர்ந்த முடிவு. ராஜாவின் மறுவடிவம்.
    about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • murugesan mayandi  from Tirupur
    அப்படியே பிடிவாதத்துடன் இருங்கள் விளங்கிடும் .யுவன் பெட்டெர்.
    about 23 hours ago ·   (3) ·   (2) ·  reply (0)
  • கி.நாவுக்கரசன் நாவுக்கரசன்  
    தந்தையின் நிழலாய் இருப்பதில் சுகம் காணும் கார்த்திக் ராஜா பாராட்டுக்கு உரியவர். அதேநேரம் சகோதரரின் மதமாற்றம் அவருக்கு ஏற்படுத்தாத பாதிப்பை வைரமுத்துவின் தொழில்முறை நெருக்கம் பாதிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

0 comments: