Thursday, March 20, 2014

பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்!

பள்ளி மாணவர் ஒருவர் கையில் ஜாதிக் கயிறு.
பள்ளி மாணவர் ஒருவர் கையில் ஜாதிக் கயிறு. 
 
 
 
சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில்பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும். 



பள்ளிக்கு வரும் மாணவன் குளித்துவிட்டு, ஒழுக்கமாக உடை அணிந்து, புத்தகங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பம். அதற்கு மாறாக இன்றைய பெரும்பாலான மாணவர்களின் தலைமுடி முதல் காலணிவரை இருப்பது எல்லாம் நாகரிகம் என்ற போர்வையில் ஒழுக்கமின்மைதான். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் இந்த விஷயம் கை ஓங்கி இருக்கிறது. (இது எல்லாம் எங்கள் பள்ளியில் இல்லை என்பவர்களுக்கு வாழ்த்துகள்). 



முதல்காட்சி. பள்ளிக்கு வரும் ஒரு சில மாணவர்களின் பாடநூல்களில், எழுதும் குறிப்பேடில் அவருடைய பெயருடன் ஜாதிப்பெயரை எழுதி வருவது. இதை முதன்முதலில் பார்த்த எனக்குத் திக்கென்று வாரிபோட்டது. இந்த உலகம் என்ன என்று புரியாத பிஞ்சு மனதில் ஏதோ ஒரு விஷவிதையை அந்த மாணவனின் ஜாதிய அபிமானிகளால் விதைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இதைப் பற்றிக் கேட்டால், பத்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன்தான் எழுதச் சொன்னான் என்கிறான். 


அவனிடம் கேட்டால், எங்கள் ஊர் ஜாதி அமைப்பைச் சேர்ந்த கல்லூரி அண்ணன்கள் எழுதச் சொன்னார்கள் என்கிறான். எது எப்படியோ, சின்னஞ்சிறு பிஞ்சுக் கையால் பெயருடன் ஜாதி எழுதப்பட்டுவிட்டது. கண்டிப்பாகச் சமூகத்தைக் கெடுக்கும் சீர்கேட்டிற்கு அந்தச் சின்னஞ்சிறு மாணவன் காரணமில்லை என்பது நமக்குத் தெரியும். இப்படி எழுதாலாமா? என்கிற கனிவான கேள்விக்கு, அந்த மாணவனின் பதில், வெறும் அழுகை மட்டும்தான். அவனது அழுகை, இன்னதென்று புரியாமல் தவறு செய்துகொண்டிருக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்த அழுகையாகத்தான் பார்க்கிறேன். 


இரண்டாவது காட்சி. மாணவனின் வலது கையில், கைப்பட்டை அணிவது. அதுவும் சாதாரணக் கைப்பட்டை அல்ல. ஜாதி நிறத்தில் அமைந்த கைப்பட்டை. இது ஒரு குறிப்பிட்ட ஜாதி மாணவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா என்றால் இல்லை. அந்தந்த பள்ளியில் இருக்கும் ஒரு சில மாணவர்கள், தம் ஜாதிக் கட்சியின் பட்டையை (பேண்ட் - Band) அணிகிறார்கள். ப்ரெண்ட்ஷிப் பேண்ட் அணிவது, ரெட் ரிப்பன் பேண்ட் அணிவது கேள்விப்படிருக்கிறோம். 


இந்தப் புதிதான பேண்ட் பேஷனை நினைத்தால். சிரிப்புடன், அந்த மாணவர்கள்மீது பரிதாபம்தான் எழுகிறது. கைகளில் சாமிக் கயிறுபோய், வெள்ளை இரும்பு வளையம்போய், செம்புவளையம்போய், ரப்பர் பேண்ட் போய், தற்போது கருப்பு-வெள்ளை, சிவப்பு-பச்சை, வெள்ளை-மஞ்சள், சிவப்பு-மஞ்சள், நீலம்-வெள்ளை, நீலம்-சிவப்பு கலந்த ஜாதிக் கயிறுகள் அணிந்திருக்கிறார்கள், நாளைய சமுதாயத்தை முன்னேற்றப்போகிற மாணவர்கள். 


மூன்றாவது காட்சி. குழுவாக அமையும் மாணவர்கள் தம் பெயரைக் கைகளில் எழுதிக் கொள்வது. ஏதோ பேனாவில் எழுதுவது என்று தயவுசெய்து நினைத்துக்கொள்ளாதீர்கள். முதலில் காம்ப்பஸ் (compass) எடுத்துக் கொள்ளவேண்டும். எழுதப் போகும் மாணவனின் கையை இன்னொரு மாணவன் பிடித்துக்கொள்ளவேண்டும். கை நடுநடுங்கக் கூடாது. காம்பஸை முனையைக் கொண்டு, வலதுகை அல்லது இடதுகையில் மெதுவாக, ரத்தம் அதிகமாக வெளியேறபடி கீறிக்கீறி எழுதவேண்டும். வலியைப் பொறுத்துக்கொள்ளும்படி எழுதவேண்டும். பீட்ருட் நிறம்போல எழுத்து அமையவேண்டும். எழுதி முடித்தபின் சந்தோஷத்தில் குதிக்கவேண்டும். இரண்டுநாள் கழித்துப் புண் ஆறிவிட்டபின், பொக்குவை நீக்கிவிட்டுப் பார்த்தால், உங்கள் பெயர் உங்கள் கையில் தழும்பாக அமையும். எவ்வளவு அற்புதம் இது. இந்த அற்புதத்திற்குத் தலைகுனியவேண்டியவர்கள் நம் பெற்றோர்கள். இரண்டாவதாகத் தலைகுனியவேண்டியவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கண்டிக்கமுடியாததற்காகத் தலைகுனியவேண்டும். அறிவுரை கூறியும் திருந்தாத மாணவர்களை நினைத்து ஆசிரியர்கள் தலைகுனியத்தான்வேண்டும். 


இந்த மூன்று காட்சிகளைப் பார்த்தபின் நமக்குச் சில கேள்விகள் எழத்தான் செய்யும். அதில் முதல் கேள்வி, ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார்கள்? என்பது. அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அறிவுரையும் கலந்தாலோசனையும்தான் தரமுடியும். அந்த மாணவர்களின் ஜாதிக் கைப்பட்டையை அறுத்தால், ஆசிரியர்களுக்கு ஷாக் அடித்துவிடும். எந்த ஆசிரியர் ஒரு மாணவனின் கைப்பட்டையை அறுக்கிறாரோ, அவர் ஒழுக்கத்தைப் பேணுபவர் ஆகமாட்டார். அவர் அந்த ஜாதியத்திற்கு எதிரானவர். மாற்று ஜாதியைப் பள்ளியில் மறைமுகமாகத் தூண்டுபவர் என்று பார்க்கப்படுகிறது. ஓருவேளை அதே ஜாதி என்றால், உறவுப் பகை உருவாகிவிடுகிறது. எனவே, ஆசிரியர்களின் வார்த்தைகள் – இந்த மாதிரி எல்லாம் பள்ளிக்கு வரக்கூடாது. பள்ளிக்கு வெளியே அணிந்துகொள். பள்ளிக்குள் வேண்டாம்.


 நீ படிக்கிற பையன். உங்கள் வீட்டில் கேள்விப்பட்டால் வருத்தப்பட மாட்டார்களா?. நீ நல்ல பையன்தானே– என்பதுதான். இதை மீறி கண்டித்தாலோ, மாணவனுக்கு ஏதாவது நேர்ந்தாலோ ஆசிரியர்களின் பணிக்கு உத்தரவாதம் இல்லை. அடிப்படையாக ஒரு மனிதனுக்குப் பணி பாதுகாப்பு அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். 


இதைச் சரி செய்ய நாம் என்ன செய்யவேண்டும்? இதைச் சரி செய்ய ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு முக்கியமானது. 


பெற்றோர்களைப் பொறுத்தவரை, தன்னுடைய பிள்ளையின் (மாணவனின்) ஒழுக்கச் செயல்பாடு என்ன? சமீபத்தில் மாறி இருக்கிறதா? அவனுடைய பேச்சில், நடையில் எந்த மாற்றம் நிகழ்கிறது? அவனுடைய நண்பர்களின் தன்மை எப்படி? பிள்ளையின் கவனம் படிப்பிலா, பொறுக்கித்தனத்திலா? அவனைத் தனியாக அழைத்து அன்புடன் பேசுகிறேனா? இது சரி, இது தவறு என்று சொல்கிறேனா? என்பதில் கவனம் கொள்ளவேண்டியுள்ளது. 



அறிவுரையுடன் ஆசிரியர்கள் நின்றுவிடாமல், மாணவனை அழைத்துக் கலந்தாலோசிக்கவேண்டும். உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை எனில். தலைமையாசிரியர் வழியாகப் பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்துவிடவேண்டியதான். தவறு செய்யும் மாணவனைக் கண்டிப்பதோ, தண்டிப்பதோ ஆசிரியரின் பணி இல்லை. மாறாக ஒழுக்கத்தைக் கற்றுத்தரவேண்டும் நாம். ஒழுக்கம் தவறினால், கண்டிப்பாகப் பெற்றோரிடம் முறையிடுவது நமது கடமை. அதுவும் நாம் நேரடியாக இல்லாமல், தலைமையாசிரியர் வழி அமையவேண்டும். 


ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு சரியாக அமையும் பட்சத்தில் பிரச்சினை அதிகமாக வளர வாய்ப்பில்லை. மாணவர்களின் கல்வி அதிகமாகப் பாதிப்பதில்லை. இதுபோன்ற சமூகச் சீர்க்கேட்டினால் பாதிக்கப்படுவது ஆசிரியரோ, பெற்றோரோ, ஜாதியோ இல்லை. மாணவர்கள் மட்டும்தான். அவர்களுடைய ஒழுக்கம், கல்வி பாதிக்கப்படுகிறது. 



கோயில் செல்கிறோம். அங்கு அனைவரும் ஒன்றாகத்தான் சாமி கும்பிடுகிறோம். ஹோட்டல் செல்கிறோம். ஒன்றாகத் தான் சாப்பிடுகிறோம். பேருந்தில் ஒன்றாகப் பயணிக்கிறோம். அங்கு சாதிப் பார்க்கப்படுவதில்லை. பள்ளி என்பது கோயில் போன்றது. இங்கு கல்விதான் கடவுள். ஜாதியம் அல்ல. பள்ளியில் மாணவர்கள் கல்வியை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள். வெளியே பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் பாடுபடுகிறார்கள். நடுவில் நுழைந்திருக்கும் ஜாதி நரிக்கூட்டம்தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது. 


பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளைத் தயவுசெய்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஆசிரியர்களே! எப்போதும்போல், மாணவர்களுடன் அன்புடன் உரையாடி புத்திமதி கூறித் திருத்துங்கள். ஜாதிய அபிமானிகளே! உங்கள் அரசியலுக்கு மாணவர்களைப் பலிகடா ஆக்காதீர்கள். அவர்கள் படித்து முன்னேறவேண்டும். அவர்கள் கைகள் இப்போதைக்குச் சுமக்க வேண்டியது புத்தகம்மட்டும்தான். உங்கள் ஜாதி பேண்ட் அல்ல. ஜாதிகளுக்கு மாணவர்கள் ஒன்றும் ஜாதிப்பரப்புச் செயலாளர்கள் இல்லை. அவர்கள் மாணவர்கள். இந்த பரந்த இந்தியாவைத் தாங்கப் போகிறவர்கள். தயவுசெய்து யாராக இருந்தாலும் ஜாதியத்தை மாணவர்களிடம் புகுத்தாதீர்கள். 


மாணவப் பருவம் என்பது வாழ்க்கையின் முக்கியமான பருவம். அந்த சமயத்தில், அவர்களை ஜாதியின் பெயரால் மடை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். 


நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்றால், தயவு செய்து ஜாதி என்கிற விஷவிதையை மாணவர்களின் மனதில் யாரும் விதைக்காதீர்கள். அது நிச்சயமாக வருங்காலத்தில் நல்ல கனியையோ, நிழலையோ தரப்போவதில்லை. 


ரா.தாமோதரன் - தொடர்புக்கு [email protected]


THANX - THE HINDU 


  • Kasi Viswanathan  from Mumbai
    ஜாதி அடையாளம் பள்ளி சான்றிதழில் தன உள்ளது அதற்க்கு என்னசெய போகிறிர்கள் அது இல்லை என்றல் ஜாதியும் இல்லை பள்ளியில் இருந்துதான் ஜாதி தொடங்குகிறது உங்களால் முடியுமா
    2 days ago ·   (67) ·   (41) ·  reply (5)
    கோபி  · Anandg  · Anandg   Up Voted
    • Raj  from Mountain View
      I wonder 7 people voted down!!! What kind of people they are? Loves evil!
      a day ago ·   (1) ·   (0) ·  reply (2)
      • Abni  
        அவர் கமெண்டை நானும் ஏற்றுக்கொள்ள முடியாததற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது... /ஜாதி அடையாளம் பள்ளி சான்றிதழில் தன உள்ளது அதற்க்கு என்னசெய போகிறிர்கள் அது இல்லை என்றல் ஜாதியும் இல்லை பள்ளியில் இருந்துதான் ஜாதி தொடங்குகிறது //// சாதி என்பது 1000 ஆண்டுகளுக்கு மேலாக நம் தெனிந்தியாவில் உள்ளது அப்பொழுது சாதி சான்றிதல் என்று ஒன்றே இல்லை பிறகு எப்படி சாதி இருந்தது.....அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்த பட்டனர்... அவர்களின் உறவுகள் அழிக்கப்பட்டன, சிறு தவறுக்கு கூட கொடுமையான தண்டனைகள், சொத்துக்கள் ஏமாற்றி அபகரிக்க பட்டன..சம உரிமைகள் மறுக்கப்பட்டன... இன்னும் பல பல கொடுமைகள் ... அதை சமன் செய்யத்தான் சலுகை தருவதற்காக சாதி சான்றிதல் கேட்கப்படுகின்றது. இது கூட புரியாமல் சாதிசான்றிதல் தான் சாதிக்கு காரணம் என்று கமெண்ட் செய்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
        a day ago ·   (31) ·   (6) ·  reply (2)
        தமிழ்   Up Voted
        • babu சிவா  from Chennai
          அன்பரே ,நீங்கள் சொல்வது எப்படி சரியாகும் ....நீங்கள் சொல்வது போல் ,,,ஜாதி இப்பொழுது வேறு ஒரு பரிமாணத்திற்கு மாறுதல் அடைந்துள்ளது ....அம்பேத்கர் அவர்கள் ஜாதியை இந்தியாவில் இருந்து ஒழிகவே இந்த நடைமுறையை கொண்டுவந்தார்கள். அந்த முறை இப்போது வேறு ஒரு நிலைபாட்டுக்கு சென்று விட்டது ...ஆனால் இப்போது பிஞ்சு மனதில் நஞ்சை விதைகிரார்கள் ஒரு சிலர் இதை அரசியலில் ஆதாயம் தேட நினைகிறார்கள், நீங்கள் சொல்வது போல பல சிற்றுகளில் இந்த கொடுமை நடக்கிறது ,அதை தடுக்க இது முயலவில்லை , இந்த செயல் முறைகள் ஜாதியை மேலும் வளர்க்கும் என்பது தான் கவலை அளிக்கிறது... சாதிசான்றிதல் தான் சாதிக்கு காரணம் அல்ல ...ஆனாலும் அதுவும் ஒரு காரணம் தான் ..
          a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
          Padhu   Up Voted
        • Padhu  from Bangalore
          எதற்காக BC , SC ,OBC என்று பிரித்து வைத்து இருக்கிறார்கள். அதன் மூலமாக சலுகைகளை பெறலாமே. எதற்காக ஜாதி சான்றிதல்?? எனக்கு என்னோட பள்ளி பருவத்தில் ஜாதி சான்றிதல் கேட்கும் பொழுது தான் தெரியும் நான் என்ன ஜாதி என்று... நான் என்ன ஜாதி என்று எனக்கு தெரிய வைத்தது என்னோட ஜாதி சான்றிதல் தான்..
          about 24 hours ago ·   (5) ·   (0) ·  reply (0)
      • Abni  
        சாதி சான்றிதழில் சாதி இருபதற்கு பல காரணங்கள் இருக்கிறது... அம்பேத்கர் போன்றவர்கள் ஆராய்ந்து அறிந்துதான் அதை செய்துள்ளனர். இன்னும் நீங்கள் பார்க்காத பல குக்கிராமங்களில் சாதி ஒரு சாபக்கேடாக உள்ளது அது சரி செய்யும் வரையில் சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்குவதற்காகவே சாதி சான்றிதல் கேட்க்கபடுகின்றது... நம்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினை சேர்ந்த அனைவரும் உயர்சாதியினருக்கு சமமாக வரும் வரை இது இருக்கும்.. காசி அவர்களுக்கு பல உண்மை புரியவில்லை... அவர் ஊரில் உள்ள கீழ் சாதியினர் நன்றாக வாழ்வதை பார்த்து விட்டு. நம் நாட்டில் உள்ள அணைத்து கீழ் சாதியினரும் முன்னேரிவிட்டனர் என்று நிதைதார் போலும்.
        a day ago ·   (4) ·   (0) ·  reply (0)
    • ச‌ங்க‌ர்  from Chennai
      ப‌ள்‌ளி‌யி‌ல் ஜா‌தி தொட‌ங்கு‌கிறதா இ‌ல்லையா எ‌ன்று பா‌ர்‌ப்பதை ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டு, ந‌‌ம் நா‌ட்டு பாராளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் பெய‌ர்களை பாரு‌ங்க‌ள். த‌ங்களது ஜா‌தி, மத, குல அடையாள‌ங்களுட‌ன் இரு‌ப்பவ‌ர்க‌ள் ஏராள‌ம். மே‌ல் ஜா‌தி‌யின‌ர் த‌ங்களது அடையாள‌ங்களை கா‌ட்டி‌‌கி‌க் கொ‌ள்ளு‌ம்போது உறு‌த்தாத ந‌ம் க‌ண்களு‌க்கு ‌கீ‌ழ் ஜா‌தி‌யின‌ர் த‌ங்களது அடையாள‌ங்களை அர‌சிய‌ல் காரண‌த்‌தி‌ற்காக மு‌ன்‌னிறு‌த்து‌ம் போது நம‌க்கு அ‌ச்சுறு‌த்தலாக தோ‌ன்று‌கிறது.
      about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (1)
      • இனியன்  
        பள்ளி மாணவர்களின் பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கின்ற செயலை எந்த சாதி முதலில் செய்தது, இரண்டாவதாக செய்தது, மூன்றவதாக செய்தது போன்றவற்றை 'ஆராய்ச்சி' தளத்துடன் நிறுத்திக் கொண்டு, சமூக தளத்தில் அந்தந்த சாதியில் சமூக பொறுப்புணர்வும் அறிவு நேர்மையும் உள்ள முன்மாதிரியாளர்கள் தத்தம் சாதி குழந்தைகளை அத்தகைய நஞ்சைக் கலக்கின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் அந்தந்த சாதிகளில் உள்ள பிள்ளைகள் நன்கு படித்து, நல்ல பணியில் சேர்வார்கள்.அத்தகைய ஆக்கபூர்வமான முயற்சியே சமுகத்தை 'ரவுடிகளின்' ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து, முன்னேற வழி வகுக்கும்.
        about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    • இனியன்  from Chennai
      'ஜாதி அடையாளம் பள்ளி சான்றிதழில்' நீதிக்கட்சி, காங்கிரஸ் ஆட்சிகளிலிருந்து கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது. கட்டுரையில் வெளிப்பட்ட அதிர்ச்சிதரும் போக்குகள் எப்போது தொடங்கி, எப்படி வளர்ந்து, இன்று எத்தகைய அபாயக்கட்டத்தில் இருக்கிறது என்பதை சமூகப் பொறுப்புணர்வுடன் ஆராய்ந்து, அதைக் களைய வேண்டும். எனது பார்வையில் இந்த போக்குகள் 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டு, பள்ளி மாணவர்களும் குடிக்க ஆரம்பித்து, சாதிக்கட்சிகள் 'எங்கிருந்தோ' கிடைக்கும் பணத்தில் 'குவார்ட்டர், பிரியாணி, செலவுக்குப் பணம்' விநியோகித்து பள்ளி மாணவர்கள் வரை தமது 'தொண்டர் படையை' விரிவு செய்ததில் தொடங்கியதாக தெரிகிறது. அந்தந்த சாதியில் இதை இழிவாக உணர்பவர்கள் அந்தந்த அமைப்புகளை புறக்கணிப்பதும் இந்த நோய் எதிர்ப்பு வழிகளில் ஒன்றாகும்.
      a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
    • கொற்றவன் Kotravan  from Chennai
      அங்கிலேயன் வரும் முன் பள்ளிகளே கிடையாது அப்போது எல்லாம் இந்தியாவில் சாதியே இருந்தது இல்லையா!! சாதி அடிப்படையில் ஒடுக்குமுறை இருப்பதால் சாதி அடிப்படையில் பிரதிநிதித்துவம்/ இடஒதுக்கீடு தர அதற்கான சான்றிதழை கேட்கின்றனர்.
      about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    • ராஜவேல்  
      அரசு சலுகைகள்தேவை படாதவர்கள் ஜாதி சான்றிதழ் தர தேவை இல்லை. ஜாதி சான்றிதழ் சலுகை கோருபவர்களுக்காக கேட்கப்படுகிறது. ராஜவேல்
      a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Vimala  from Bangalore
    பிஞ்சு மனதில் ஜாதியா? கொடுமை...
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • sadhasivasaravanan  from Chennai
    இது ஜாதி சதி இதுக்கு என்ன நீதி
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • sadhasivasaravanan  from Chennai
    இது ஜாதி சதி இதுக்கு என்ன நீதி ?
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • sadhasivasaravanan  from Chennai
    இது ஜாதி சதி
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Selva  from Mumbai
    இது போன்றதொரு காட்சியை நான் இரு ஆண்டுகளுக்கு முன் புதுவையில் வேலை பார்க்கும் போது பார்த்திருக்கிறேன். அங்கு வேலை பார்பவர்களும் சரி, வேலை தேடி வரும் மாணவர்களும் சரி இந்த போக்குதான் நிலவுகிறது. குறிப்பாக வடமாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது மிக மிக அதிகம். இதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குறிப்பாக இரு கட்சியினரிடையே நடைபெறும் அரசியல் விளையாட்டில் மாணவர்களின் வாழ்க்கை முற்றிலும் கேள்விகுறி ஆகிறது. இதற்கு கடுமையான சட்ட மற்றும் அரசியல் தீர்வு தேவை, அதுவும் மிக விரைவில்..,,,
    a day ago ·   (4) ·   (1) ·  reply (0)
    Selva   Up Voted
  • Gopi  from Bangalore
    இந்த ஜாதி கட்சிகள் இருக்கும் வரை ஜாதிகள் ஒழியாது ...!
    a day ago ·   (6) ·   (1) ·  reply (0)
  • vaidehimadavan  
    முதலில் அரசு ஜாதி என்பதை வகுப்பு (கம்யூனிட்டி) என்று பிரிக்காமல் இருந்தால் எல்லோரும் ஒர் ஜாதி எல்லோரும் ஒர் குலம் என்பது நிலவும்.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • HARIHARA Subramanian at ramco 
    ஒரு தினம் சிற்றுண்டி சாப்ப்பிட சிறிய ஓடேல் ஒன்றில் ஒருவர் என்னை பார்த்து நீங்கள் கோனார? என்று கேட்டார். காரணம் சட்டை பையில் கிருஷ்ணர் படம் போட்ட பேனா இருந்தது. நொந்து போய் விட்டேன்.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (1)
    • Johnshi  from Salai
      சிரிப்பு வருது இப்படி இருக்கும் மனிதர்களை நினைத்தால்
      about 24 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Subramanyam  from Surat
    ஜாதியை ஒழித்துவிடப் போவதாக மார் தட்டி ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் அடுக்கு மொழி அலங்காரங்களுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிடக் கட்சிகள் (இவை திராவிடக் கட்சிகள் என்று கூறிக்கொண்டாலும் இவை வெறும் தமிழ்க் கட்சிகள் மட்டுமே ஏனென்றால், மற்ற மூன்று திராவிட மாநிலங்களில் இவர்களை நுழையக் கூட விடவில்லை), ஜாதியை வளர்த்துத்தான் விட்டிருக்கின்றனவா ? ஆக, அதிலும் தமிழக மக்களுக்குப் பட்டை நாமம் சாற்றியாகி விட்டதா?
    a day ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • selvakumar Raman Scientist (Agricultral Research Service) at Indian council of agricultural research from New Delhi
    தலை குனிவு
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • வல்லம் வல்லம் தமிழ் at Social Worker from Thiruvarur
    விதையிலேயே கலக்கப்படும் விசம் , விருட்சமாகி எதிர்கால இந்தியாவை விழுங்கும் முன் எதாவது செய்யுங்கள்...ப்ளீஸ்...
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Yusuf A  from Quito
    மிகவும் அருமையான கட்டுரை. ஆனால் இது எத்தனை பேருக்கு புரிய போகிறது என்று தெரியவில்லை.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • sankarasubramaniyan subramanian  from Suri
    சமுதாயத்தின் கடைக்கோடி மனிதன் மீது கட்டவிழ்த்து விடப்படும் சாதியக் கொடுமை நீடிக்கும் வரை சாதிய அடையாளங்களும் நீடிக்கத்தான் செய்யும். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் மீதான ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறைகள் ஓயாதவரை சாதிய அடையாளங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.இந்த எரியும் தீயில் எண்ணையூற்ற சாதித் தலைவர்களும் சதுராடிக் கொண்டுதான் இருப்பார்கள். வளரும் தலைமுறையாவது சாதியத்தை மறுதலித்து வளர்ந்தால் நல்லது! அதற்கான சமூகச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றைய தலைமுறையின் கடமையாகும்?
    a day ago ·   (0) ·   (2) ·  reply (0)
  • Pats  from Coimbatore
    அரசு பள்ளியில் முதல் வகுப்பில் சேர குழந்தையை அழித்துச் சென்றால், அங்கு முதலில் கேட்கப்படும் கேள்விகள் - மாணவனின் பெயர், பிறந்த தேதி, பெர்த்றோரின் பெயர், வருமானம், மதம், ஜாதி. அரசாங்கத்தின் எனதல் அலுவலகத்திற்கு சென்றாலும் அங்கு ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக கேட்கப்படும். வேலைவாய்ப்பில், சமூக உரிமையில், என்று எதை எடுத்தாலும் ஜாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது. ஜாதியை பரப்புவது யார்? ஜாதி சங்கங்களா, அல்லது அரசாங்கமா? கட்டுரையாளர் தும்பை விட்டு வாலை பிடிக்கிறார்.
    a day ago ·   (8) ·   (3) ·  reply (0)
    annamalai  · Raj   Up Voted
  • விமலா  from Hosur
    கொடுமை இது-நாட்டுக்கு நல்லது இல்லை- விமலா வித்யா
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Hari Hari  from Trichy
    பிஞ்சு மனதில் ஜாதியா? கொடுமை. தயவு செய்து ஜாதி என்கிற விஷவிதையை மாணவர்களின் மனதில் யாரும் விதைக்காதீர்கள்
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • மாது  from Namakkal
    எங்கள் பள்ளியிலும் இந்த கதைதான். மீறி ஆசிரியர் கேட்டால் பெற்றோரே பள்ளியில் ஆசிரியர் ஜாதி பெயரை சொல்லி திட்டினாராம் என்று கதை மாற்றப்பட்டு அசிங்கப்படுத்தப்படுகின்றனர்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • கலைச்செவ்வம்  from Bangalore
    ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்வதில் தொடங்குகிறது அல்லது வெளிப்படுகிறது ஜாதி வெறி. மேற்சொன்ன கட்டமைப்பிலிருந்து விடுவித்துக் கொள்ளாத எவரும் ஜாதிக்கு எதிரான எந்தவித வாதத்திற்கும் தகுதியற்றவர்கள்.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
    SAK   Up Voted
  • m.sankaralingam  from Laguna Niguel
    என்னதான் வாய் கிழிய தத்துவமும் பொருளாதாரமும் அரசியலும் பேசினாலும், சில அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் தான் அரசியல் கடை விரிதிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் சாதிக்கு நன்மை செய்வதாக கூறிக்கொண்டே தங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்புகளை உருவாக்குகின்றனர்.தேசிய கட்சிகள் என்று கூறுபவர்களும் ;மாநிலக்கட்சிகளும் இவர்களை அரவணைக்கின்றனர்.இதுபோன்ற கட்சிகள் செல்வாக்கு இழக்கும் வரை இந்த சோகங்கள் தொடரத்தான் செய்யும்."சாதிகள் இல்லையடி பாப்பா " என்று பாடியவன, சிலையாக நிற்கிறான்.
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Raj  from Mountain View
    The writer has missed the source of the problem very conveniently and many people who commented on this essay too missed the point. Government is the first culprit too keep this evil system in force, instead of banning this evil system in the society. There is no point blaming people when government, political parties and religion institution keep it alive.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Mohanarengan Srinivasan  
    நான் ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தேன். அப்பொழுது, திரு.கந்தசாமி மற்றும் திரு.நாச்சிமுத்து என இரு ஆசிரியர்கள்தான் முழு பள்ளிக்கும் பொறுப்பான விளையாட்டு மற்றும் என் சி சி ஆசிரியர்கள். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவர்கள் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அணைத்து மாணவர்களையும் நல்வழிபடுதினார்கள். மாணவர்களாகிய நாங்களும் இன்றளவும் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் புரிதல் அன்று மிகவும் போற்றப்பட்டது.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • ராஜவடிவன் ரா.  from Kumar
    இன்னும் எத்தனை பெரியார்கள் தேவை என்பதை உணர்த்தியது கட்டுரை. நானும் அரசுப் பள்ளி ஆசிரியர்தான்; தலைகுனிகிறேன். மாணவர்களை நினைத்து அல்ல; சாதியை முதலீடாக்கி பிழைப்பு நடத்தும் ---களை எண்ணி; அவர்களைத் திருத்த/ஒழிக்கமுடியாதசிந்தனையாளர்களை எண்ணி.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (1)
    • Anandg  
      யாரால் சாதிகளுக்கு இடையே இருந்த இணக்கம் அழிந்து போய் சாதீய வெறியும் வெறுப்பும் வன்முறைகளும் தாண்டவமாடுகிறதோ, அவரைப் போன்றவர்கள் இன்னும் எத்தனையோபேர் வேண்டும் என்கிறீர்கள். கையில் கயிறு கட்டுவதற்குப் பதிலாக கலவரங்கள் செய்ய ஆயுதங்களுடன் மாணவர்கள் வரும் நிலைதான் உருவாகப் போகிறது.
      about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Francis babu  
    ஜாதி இரண்டொழிய வேறில்லை எனும் நிலை எப்போது செயல்பாட்டில் வருமோ தெரியவில்லை.ஜாதி எனும் விஷ விதை மழலை பருவத்திலேயே விதைக்கபட்டால் வருங்காலம் எப்படி மிளிரும்?மனிதத்துவம் மலர ஜாதி கொடுமை ஒழியவேண்டும் .அன்பு மேலோங்கவேண்டும் .மேலை நாடுகளை போல் எப்போது நம்நாட்டிலும் ஜாதி இல்லா சமூகம் மலருமோ தெரியவில்லை .பள்ளிகளில் பதியப்படும் ஜாதியம் ஒழியவேண்டும் .வேடிக்கையாய் தொடங்கப்பட்டுள்ள இம்முறை ஆரம்பத்திலேயே அழிக்கப்படவேண்டும் .அதற்கு அரசும்,மக்கள் சமூகமும் ,ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.பிரான்சிஸ் பாபு,திருவண்ணாமலை.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • jaga  
    நாம் "சாதி"க்காக பிறக்கவில்லை, சாதிக்கவே பிறந்துள்ளோம்....
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Gurunathan Gopalakrishnan at Neyveli Lignite Corporation 
    மாணவ பருவத்தில் சாதி உணர்வை வளர்பது தவறு. ஆனால் சமூகம் சாதிய உணர்வுடனே செயல்படுவது நிதர்சன உண்மை. உயர் சாதிகாரர்கள் தங்கள் சாதி பெருமையுடன் வலம் வந்துகொண்டிருந்தபோது உழக்கும் வர்க்கத்தை சேர்ந்த மற்ற சாதிகாரர்கள் அவர்களுக்கு அடிபணிந்து கிடந்தார்கள். இந்த நிலை தொடர்ந்த வரை உயர் சாதிகாரர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ஆனால் இப்போது உழக்கும் வர்க்கத்தை சேர்ந்த மற்ற சாதிகாரர்கள்தங்கள் சாதி அடையளத்தை பெருமையாக கருத ஆரம்பித்தவுடன் இவர்கள் குய்யோ முய்யோ என்று கூக்குரலிடுகிறார்கள். உண்மையில் சாதி ஒழிய வேண்டுமானால் 1. சாதி சான்று வழங்குவதை நிறுத்தவேண்டும் . 2. இட ஒதிக்கீடு எந்த வடிவிலும் வழங்க கூடாது . 3. அனைவரும் சமமாக கருதி கல்வி மற்றும் வேலை வாய்பில் 100% சதவீதம் தகுதி அடிப்படையில் வழங்கவேண்டும்.
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Eswar  
    காசி அவர்களே கட்டுரையாளர் மீது நாம் ஏன் பாய வேண்டும், இப்படி பிரச்சினைகள் வீட்டிலிருந்துத் தொடங்கியுள்ளது எனக் கூறுவதைக் கொண்டு நம்மால் இயன்றததைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதாகத் தான் கொள்ள வேண்டும். ஆனாலும் தாங்கள் கேட்டதை மறுக்க முடியாது, அதற்கு பத்திரிகையாளர்களும் பொதுமக்களுந்தான் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Thirumalai  from Chennai
    நல்ல அறிவுரை. மிக்க நன்றி. நினைக்கும்போது மனதில் கவலைதான் கூடுகிறது.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • கணேஸ்குமார்  from Chennai
    இலவச புத்தகங்கள், நோட்டுகள், சைக்கிள், லேப்டாப் என அனைத்தும் அனைவருக்கும் இலவசமாக வழங்கினாலும் கூட, ஜாதிவாரியாக தனித்தனியாக விவரங்களை அரசு கேட்கின்றது. அனைத்துப் புள்ளிவிவரங்களிலும் தற்போது மதம் சார்ந்த விவரங்களையும் அரசு கேட்கின்றது.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • ச‌ங்க‌ர்  
    கால‌ங்காலமாக வட நா‌ட்டினரு‌ம் மே‌ல் ஜா‌தி‌யினரு‌ம் த‌ங்க‌ள் பெயரு‌க்கு ‌பி‌ன்ன‌ர் ஜா‌தி, குல‌ம் எ‌ன்று ஏதாவது ஒ‌ன்றை போ‌ட்டு‌க் கொ‌ண்டுதானே உ‌ள்ளன‌ர். பல நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன், ‌பிரதம‌ர் உ‌ட்பட, பெய‌ர்களு‌க்கு ‌பி‌ன்னரு‌ம் அவ‌ர்களது மத, ஜா‌தி, குல அடையாள‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. இ‌தி‌ல் எ‌ன்ன கொடுமை எ‌ன்றா‌ல் ‌கீ‌ழ் ஜா‌தி‌யின‌ர் த‌ங்களது அடையாள‌ங்களை அர‌சிய‌ல் செ‌ல்வா‌க்‌கி‌ற்காக அழு‌த்தமாக பய‌ன்படு‌த்‌த ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போது பலரு‌க்கு கா‌ய்‌ச்ச‌ல் வர ஆர‌ம்‌பி‌‌த்து ‌விடு‌கிறது.
 

0 comments: