Thursday, February 13, 2014

பாலுமகேந்திரா : அது ஒரு கனா காலம்

தமிழ் சினிமா மறக்க முடியாத படைப்பாளி இயக்குநர் பாலுமகேந்திரா இன்று மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74. 



அவர் 1939ம் ஆண்டு இலங்கையில் பிறந்து வளர்ந்தார். புகைப்படம் எடுப்பதில் இளவயது முதலே ஆர்வம் மிகுதியாக இருந்ததால், அவரது தந்தை ஒரு கேமிரா பரிசாக அளித்தார். அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து வந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விட்டு, பூனேவில் ஒளிப்பதிவாளர் பிரிவில் படித்து, அதில் தங்கப் பதக்கம் வென்றார். 


திரைத்துறையில் நுழைந்த பின், ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா காலம் ஆரம்பித்தது. மலையாளத் திரையுலகில் 'நெல்லு', 'ராஜஹம்சம்', 'மக்கள்', 'ராகம்' என தொடர்ச்சியாக இவரது ஒளிப்பதிவு பேசப்பட்டது. 'நெல்லு' படத்தில் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருது மற்றும் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை வென்றார். 



ஒளிப்பதிவினைத் தொடர்ந்து பாலுமகேந்திரா தன்னை இயக்குநராக வெளிப்படுத்திய கன்னடப் படம் 'கோகிலா'. தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி இங்கும் வெள்ளி விழா கண்டது. 



தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் 'அழியாத கோலங்கள்'. அதனைத் தொடர்ந்து இயக்குநராக தமிழில் பல படங்களை இயக்கினார். 'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா ராகம்', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜுலி கணபதி', 'அது ஒரு கனா காலம்' மற்றும் 'தலைமுறைகள்' ஆகிய படங்கள் தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய படங்கள். இவர் இயக்கத்தில் கமல் நடித்த 'மூன்றாம் பிறை' படம் தான் கமலுக்கு சிறந்த நடிகராக முதல் தேசிய விருதினை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. 



தமிழில் படங்கள் இயக்கியது மட்டுமன்றி மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார். படங்கள் இயக்குவது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்கள் படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்து வந்தார். 



எப்போதுமே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் போது, விளக்குகள் உபயோகிக்கவே மாட்டார் பாலுமகேந்திரா. என்ன வெளிச்சம் இருக்கிறதோ அதை வைத்தே காட்சிப்படுத்துவார். இவரின் இந்த திறமையை பார்த்து பல்வேறு இயக்குநர்கள் இவரிடம் பணியாற்ற முன்வந்தனர். இவரது படங்களில் கறுப்பு நிற நாயகிகள் தான் இருப்பார்கள். கறுப்பு தான்பா நம்ம ஊர் கலரு என்பார் செல்லமாக.பல்வேறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதே கருத்தை கூறியிருக்கிறார். 



பாலுமகேந்திரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'தலைமுறைகள்'. அத்திரைப்படத்தின் மூலமாக இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தன்னை ஒரு நடிகராகவும் முன்னிருத்திக் கொண்டார். அது மட்டுமன்றி, முதன் முறையாக பாலுமகேந்திரா டிஜிட்டல் கேமிராவில் ஒளிப்பதிவு செய்த படம் 'தலைமுறைகள்'. தன்னுடைய இறுதி காலத்திலும் படத்தில் நடித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்து, எடிட்டிங் என தனது பட வேலைகள் அனைத்தையும் தானே செய்தார். 



'தலைமுறைகள்' படத்தின் மூலமாக யாரும் தமிழை மறக்காதீர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படத்தில் மரணம் அடையும் போது பேரனை அழைத்து “தமிழை மறந்துடாதீங்கப்பா...! இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா...!” என்பார். அதுவே அவர் தமிழ் திரையுலகிற்கு கூற விரும்பியது எனலாம். 



படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கு வந்திருந்த பாலு மகேந்திரா, "உண்மையில் கிராமத்தில் தான் தமிழ் இருக்கிறது. தமிழை யாரும் மறக்க கூடாது" என்று கண் கலங்கினார். காட்சி முடிந்தவுடன் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். சில நேரம் கழித்து, "ஏம்பா.. நான் சாக மாட்டேன். கவலைப்படாதீங்க.. இன்னும் 5 கதைகள் வைச்சிருக்கேன் இயக்குவதற்கு. " என்றார். அவர் இயக்குவதாக வைத்திருந்த கதைகள் அனைத்துமே கண்டிப்பாக தமிழுக்காக மட்டுமே இருந்திருக்கும்.



நேற்று தன்னுடைய உதவியாளர்களை அழைத்து அனைவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார். 



இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி என தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் இவரது பட்டறையில் தொழில் கற்றவர்கள் தான். இது வரை பாலாவின் எல்லா படங்களின் இசையையும் வெளியிட்டது பாலு மகேந்திரா தான். 



இன்று பாலுமகேந்திரா மறைந்தாலும், ஒளிப்பதிவில் அவர் செய்த சாதனைகள் தமிழ் சினிமா சரித்திரத்தில் மறையாது. பல்வேறு ஒளிப்பதிவாளர்கள் தற்போது இருந்தாலும், இருக்கிற வெளிச்சத்தை வைத்து சிறப்பாக ஒளிப்பதிவு செய்ய தெரிந்த ஒரே ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. 



பாலு மகேந்திரா என்னும் திரைச்சிற்பி இருந்த இடம் இன்று வெறுமையாகியிருக்கிறது. அந்த இடத்தை நிரப்ப நிறைய இயக்குநர்கள் முன்வருவது தான் பாலுமகேந்திராவுக்கு நாம் கொடுக்கும் சிறந்த வழியனுப்புதலாக இருக்கும். 


 a



thanx - the hindu 


தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா காலமானார் - கமல், பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி!!



தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா இன்று(பிப்ரவரி 13ம் தேதி) மாரடைப்பால் காலமானார். சென்னை, சாலிகிராமம், இந்திராநகரில் உள்ள தனது வீடடில் தூங்கிக் கொண்டிருந்த பாலு மகேந்திராவிற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு மகேந்திராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலு மகேந்திராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது, இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது.

பாலுமகேந்திராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதியறிந்து அவரிடம் உதவியாளர்களாக பயின்ற இயக்குநர்கள் பாலா, ராம், பாலாவின் உதவியாளர் சீனு ராமசாமி, நடிகர் கருணாஸ் மற்றும் ஏராளமான உதவி இயக்குனர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்.

இலங்கையின் பட்டிகலோயா பகுதியில் 1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் கேமிராமேனாக திரைஉலகிற்கு அறிமுகமானார். தனது தந்தையால் கேமிரா மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் டைரக்டர், வசனகர்த்தா, எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர். இலங்கையில் பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார்.

இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார். தென்னிந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்றவர்களில் பாலுமந்திரா குறிப்பிடத்தக்கவர்

சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர், 1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடிஎடுத்து வைத்தார். மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கடைசியாக அவர் இயக்கிய தலைமுறைகள் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைவரின் பாராட்டை பெற்றது. மேலும் இதுநாள் வரை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்த வந்த அவர் முதன்முறையாக இப்படத்தில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகனாகவும் நிரூபித்தார்.

டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைஉலகில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. 74 வயதாகும் பாலுமகேந்திராவுக்கு அகிலேஷ்வரி என்ற மனைவியும் கெளரி சங்கர் என்ற மகனும் உள்ளனர். இவரும் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். ஸ்ரேயாஸ் என்ற பேரன் ஒருவரும் உள்ளார். பாலு மகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும், 2 நந்தி உள்ளிட்ட பிற மாநில விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

பாலுமகேந்திராவின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரது உடல் வடபழனியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாலுமகேந்திரா கிறிஸ்தவ மதத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் இனத்தை சேர்ந்தவர் என்பதால் நாளை(பிப்ரவரி 14ம் தேதி) நண்பகல் 12.00 மணிக்கு அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறது.

கண்ணீர் விட்டு அழுத பாரதிராஜாபாலுமகேந்திராவின் மறைவை கேட்டு ஏராளமான திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா, கண்ணீர் விட்டு கதறி அழுது தன் அஞ்சலியை செலுத்தினார். இயக்குநர்கள் விக்ரமன், ராம், பாலா, நடிகர்கள் சந்திரசேகர், மனோஜ், நடிகை வீடு அர்ச்சனா, பாண்டியராஜன், அவரது மகன்கள், மோகன், அர்ச்சனா, ஈஸ்வரி ராவ், கேயார், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா, பொன்ராம், பி.சி.ஸ்ரீராம், ஜீவன், செழியன், பிரியன், பாலசுப்ரமணியம், உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா பேசுகையில், இந்திய சினிமாவின் மிகப்பெரிய சொத்தை இழந்து விட்டோம் என்று கண்ணீர் விட்டப்படி கூறினார்.

சினிமாவின் தந்தையை இழந்துவிட்டேன் என நடிகர் மோகன் கூறினார்.

தமிழ் சினிமாவின் நடமாடும் பல்கலைக்கழகம் பாலுமகேந்திரா, அவரை நாம் இழந்துவிட்டோம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கூறினார்.

பெற்றதற்கு நன்றி சொல்லணும் - கமல்

பாலுமகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், பாலுமகேந்திரா இழந்ததற்கு இறப்பை சொல்வதை விட, பெற்றதற்கு நன்றி சொல்வது முக்கியம். பாலுமகேந்திரா அளித்த கொடை மிகப்பெரியது. இங்கே நன்றி சொல்லுதல் என்று கூட சொல்லலாம். பாலு ரொம்ப திறமையானவர், அறிய மனிதர், உலக சினிமா கொண்டாடியவர், ஏற்கனவே வேறுயொரு பேட்டியில் சொல்லியிருந்தேன், இன்னும் நிறைய படங்கள் செய்யாமல் போனது, எனக்கு திகைப்பு அல்ல, வருத்தமே. தமிழ் சினிமா நன்றியுடன் பார்க்கிறது. சீடர்களை தந்திருக்கிறார். அவரை வழியனுப்பும் நேரத்தில் அவருடைய சீடர்களையும் வரவேற்க வேண்டும். நன்றி பாலு!

இயக்குநர்கள் சங்கம் சார்பில் சிறப்பு அலங்கார ஊர்தி

பாலுமகேந்திராவின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது அவரது உடலை இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு அலங்கார ஊர்தியில், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

படப்பிடிப்புகள் ரத்து :
பாலுமகேந்திராவின் மறைவையொட்டி, நாளை(பிப்ரவரி 14ம் தேதி) தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலுமகேந்திரா இன்று நம்மை விட்டு மறைந்தாலும் அவர் கட்டிய வீடு, அழியாத கோலங்கள், சந்தியா ராகம் போன்றவை என்றும் நீங்காமல், நீங்கள் கேட்டவையாக இருக்கும்.


thanx - dinamalar  



Cine Vila a






Cine Vila a







Cine Vila a





Cine Vila a







Cine Vila a






Cine Vila a







Cine Vila a






Cine Vila a





Cine Vila

0 comments: